Menu Close

அழைத்து அலுத்தோர் கவனத்துக்கு

ஒரு வேலையை எடுத்துக்கொண்டு, தொடங்கிய நிமிடத்திலிருந்து வேறு எது குறித்தும் சிந்திக்காமல், வேறு எதையும் செய்யாமல், எடுத்துக்கொண்டதைமுடிப்பது ஒன்றே குறியாக இருந்து, நினைத்ததைச் சாதிப்பது எனக்கு ரொம்பப் பிடிக்கும். வருடத்துக்கு இரண்டு அல்லது மூன்று முறையாவது இம்மாதிரி எதையாவது செய்து பார்ப்பது என் வழக்கம். வெற்றி தோல்விகள் ஒரு பொருட்டே அல்ல. செயல், அதனைச் செய்து முடிப்பதில்தான் சிறப்படைகிறது

சமீபத்தில் அம்மாதிரி ஒரு வேலையை எடுத்துக்கொண்டு வீட்டில் உட்கார்ந்தேன். எழுதுவது, சாப்பிடுவது, தூங்குவது தவிர வேறு எதுவும் கிடையாது. பெரும்பாலும் இரவில் எழுதும் வழக்கம் உள்ளவன் என்பதால் மதியம் இரண்டு மணியிலிருந்து மாலை ஆறு வரை தூக்கம் என்று மாற்றிக்கொண்டேன். மொபைலை நிரந்தரமாக ம்யூட்டில் போட்டுத் தூக்கிப் போட்டேன். மின்னஞ்சல்கள் பார்க்கவில்லை. பார்த்தால் பதிலெழுத வேண்டும். எனவே எதற்குப் பார்க்கவேண்டும்? ட்விட்டர் கூடாது, அது பெரிய இடைஞ்சல். எனவே ட்விட்டர் க்ளையண்டை அன் இன்ஸ்டால் செய்தேன். தொலைக்காட்சி ஹாலில் ஓடிக்கொண்டிருக்கும். அந்தச் சத்தம் கூடாது என்பதால் எனக்குப் பிடித்த இசையை ஓடவிட்டு, ஹெட்போன் மாட்டிக்கொண்டு விடுவது. அதற்கு மேலே முல்லா முஹம்மத் ஓமர் மாதிரி ஒரு கம்பளியை முக்காடாகப் போட்டுக்கொண்டுவிட்டால் வெளியுலகுக்கும் எனக்குமான தொடர்பு முறிந்துவிடும். அறையின் ஜன்னல்கள், பால்கனிக் கதவுகளை இழுத்துச் சாத்திவிட்டு என் பிரத்தியேக துவந்த யுத்தத்தில் முழு மூச்சாக இறங்கினேன்.

தினசரி மாலை ஆறு மணிக்கு எழுத ஆரம்பித்து அதிகாலை ஐந்து அல்லது ஐந்தரை வரை எழுதினேன். இடையே ஒன்பது மணிக்கு சாப்பிடப் போவது தவிர வேறு எதற்கும் எழுவது கிடையாது. காலை சிறிதுநேரம் படுத்துவிட்டு, எழுந்து மகளைக் கிளப்பி பள்ளிக்குக் கொண்டுவிட்டு வரும்வரை மட்டுமே உலகத் தொடர்பு. வந்து குளித்து, சாப்பிட்டுவிட்டுத் திரும்ப உட்கார்ந்தால் ஒரு மணிவரை படிப்பு. குறிப்பெடுத்துக்கொண்டு உறங்கப் போய்விட்டால் திரும்பவும் மாலை ஆறு மணிக்கு எழுத்துவேலை ஆரம்பித்துவிடும்.

இந்த நாள்களில் தினத்தந்தி கூட படிக்கவில்லை என்பதால் வெளியே என்ன நடக்கிறது என்பதே தெரியாது. வீட்டுக்கு எதிரே உள்ள எதிர் காம்பவுண்டின் நீண்ட சுவரில் அதிமுக – திமுக தொண்டர்கள் பக்கத்துப் பக்கத்தில் தேர்தல் விளம்பரம் எழுதியிருப்பதைப் பார்த்தேன். அடக்கடவுளே, அதிமுக-திமுக தேர்தல் கூட்டணியா? தமிழ்நாட்டில் பத்து நாள்களில் என்னென்னவோ நடந்துவிட்டதே என்று அதைப் படம் பிடிக்கப் பலவாறு முயற்சி செய்தேன். என் மொபைல் கேமராவின் நீள அகலங்களுக்குள் அடங்குவேனா என்கிறது அது. கவனமாக, எனக்குத் தோன்றியதை என் மனைவியிடம் சொல்லாமல் தவிர்த்துவிட்டேன். ஏற்கெனவே என் அழிச்சாட்டியங்களைச் சகித்துக்கொண்டு, என்னை ஆதரித்துக்கொண்டிருக்கிறவள். இப்படியெல்லாம் வேறு சந்தேகம் கேட்டால் நிச்சயமாக விபரீதம் விளையும்.

பொதுவாக இம்மாதிரியான பணிகளைப் போதிய இடைவெளியில்தான் மேற்கொள்வேன். குறைந்தது ஆறேழு மாத இடைவெளியாவது விடுவது வழக்கம். ஏனெனில் பத்து நாள் இப்படி எழுதினால் உடம்பும் மனமும் சகஜ நிலைக்கு வரக் குறைந்தது இரண்டு மாத காலம் பிடிக்கும். தேகப் பிரதேசத்தில் இண்டு இடுக்கில்லாமல் வலிக்கும். நடக்கும்போது தரை நகர்வதுபோல் தோன்றும். மப்பு கலைய நாளாகும். அதனால் அடிக்கடி இப்படிச் செய்ய முடியாது. இடைவெளி அவசியம்.

இம்முறை ஏனோ அதற்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது. கடந்த டிசம்பரில் காஷ்மீர் எழுதி முடித்து, அதைக் கொண்டாடும் பொருட்டு ஆர்.எஸ்.எஸ். எழுதி புத்தகக் காட்சிக்குக் கொண்டு வந்த களைப்பு இன்னும் தீர்ந்தபாடில்லை. மூன்றே மாதங்களில் இன்னொரு புத்தகத்துக்கு உட்காருவேன் என்று நானே எதிர்பார்க்கவில்லை.

இன்று அதிகாலை செய்துகொண்டிருந்த பணி ஒருவாறாக நிறைவுற்றது. முழுநாளும் தூங்கி எழுந்ததில் தலை பேய் வலி வலிக்கிறது. நூற்றுக்கும் மேற்பட்ட மிஸ்ட் கால்களின் பட்டியல் அயற்சியூட்டுகிறது. பார்த்து பதிலெழுதவேண்டிய மின்னஞ்சல்கள் பயமுறுத்துகின்றன. இதோ மொபைலை ஆன் செய்த மறுகணம் நாகூர் ரூமி கூப்பிடுகிறார். ‘யோவ், என்னாய்யா நெனச்சிக்கிட்டிருக்க உம்மனசுல? போன் பண்ணா எடுக்க மாட்டிகளோ?’

அடுத்த சில தினங்கள் இந்தக் கேள்வியை ஒவ்வொரு அழைப்பிலும் எதிர்கொண்டாக வேண்டும்.

பிகு: எழுதி முடித்த புத்தகத்தைப் பற்றிய விவரங்கள் விரைவில். பிகு 2: இந்தக் குறுங்குறிப்பை மிக்க அன்புடன் [வம்புடன் அல்ல]  உஷா மாமிக்கு சமர்ப்பிக்கிறேன்.

11 Comments

 1. V.Rajasekar

  அடுத்த பதிவுக்கு ஆவலுடன்,
  வி. இராஜசேகர்

 2. Nataraj

  //
  ஒரு வேலையை எடுத்துக்கொண்டு, தொடங்கிய நிமிடத்திலிருந்து வேறு எது குறித்தும் சிந்திக்காமல், வேறு எதையும் செய்யாமல், எடுத்துக்கொண்டதைமுடிப்பது ஒன்றே குறியாக இருந்து, நினைத்ததைச் சாதிப்பது எனக்கு ரொம்பப் பிடிக்கும். வருடத்துக்கு இரண்டு அல்லது மூன்று முறையாவது இம்மாதிரி எதையாவது செய்து பார்ப்பது என் வழக்கம். வெற்றி தோல்விகள் ஒரு பொருட்டே அல்ல. செயல், அதனைச் செய்து முடிப்பதில்தான் சிறப்படைகிறது
  //

  உங்களுடன் நேரடி அறிமுகம் இல்லாவிடினும், நீங்கள் ஒரு ராக்ஷச உழைப்பாளி என்ற என் அனுமானம் சரி தான். உங்கள் இந்த ‘பாரா’வை என் இணைய கல்வெட்டில் (favorites தான்) பதித்து வைத்து தினமும் ஒரு முறையேனும் படித்து விடுகிறேன்.

  நல்ல பாரா. நன்றி பாரா 😀

 3. kannan

  கலக்கிட்டீங்க பாரா, நிஜமான வார்த்தைகள். செய்பவை திருந்த செய்ய, ஒரு உதாரணம் கொடுத்துள்ளீர். அது எல்லாருக்கும் பொருந்துமா! கண்டிப்பாக இல்லை. Whatever you have given are only guidelines. Must be taken according to individual’s own circumstances.

 4. கோயிஞ்சாமி எண் 408

  தல அபீசுக்கு வராம…….. எவ்வளவு நிம்மதியா இருந்துச்சு தெரியுமா?

 5. மாயவரத்தான்....

  //தல அபீசுக்கு வராம…….. எவ்வளவு நிம்மதியா இருந்துச்சு தெரியுமா?//

  இது யாரு #408? பத்ரியா இருக்குமோ?! #டவுட்டு

 6. Pingback:புரட்சி 2011 | பா. ராகவன்

 7. Srinivasan Kannan

  தங்களுடைய எழுத்துக்கள் ஒவ்வொன்றும் ஒரு ரகம்…
  அனைத்தும் புதுவிதம்..

  எல்லாம் வல்ல ஸ்ரீ உப்பிலியப்பன் அருள் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் கிடைத்திட ப்ரார்த்தனை செய்கிறேன்.
  வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு வாழ்க வாழ்க.
  அன்புடன்
  Srinivasan Kannan
  சிட்லபாக்கம்

Leave a Reply

Your email address will not be published.