Author

பா. ராகவன் தமிழின் முக்கியமான எழுத்தாளுமைகளுள் ஒருவர். அலை உறங்கும் கடல், அலகிலா விளையாட்டு (இலக்கியப்பீடம் விருது பெற்றது), புவியிலோரிடம், தூணிலும் இருப்பான், மெல்லினம் (திருப்பூர் தமிழ்ச் சங்கம் விருது பெற்றது), கொசு, ரெண்டு, பூனைக்கதை (வாசகசாலை விருது பெற்றது) யதி எனப் பத்து நாவல்கள் வெளியாகியுள்ளன.

2018ம் ஆண்டு பா. ராகவன் வெளியிட்ட ‘யதி’ தமிழ் நாவல் முயற்சிகளுள் நிகழ்த்தப்பட்ட மிக முக்கியமான சாதனையாகக் கணிக்கப்படுகிறது. நான்கு சன்னியாசிகளின் வாழ்வனுபவங்களின் ஊடே ஒட்டுமொத்த இந்திய சன்னியாசிகளின் அக உலகை அப்பட்டமாகத் திறந்து காட்டுகிறது யதி. வாசிப்பில் இருந்து விலகி, காட்சி ஊடகங்களை நோக்கி நகர்ந்துகொண்டிருந்த தமிழ் ரசிகர்களை மீண்டும் ஒரு பெருநாவல் வாசிப்பின் ருசியை நோக்கி இழுத்து வந்த படைப்பு இது.

‘யதி’, பாராவின் இந்திய மரபுத் தொடர் நாவல் வரிசையில் முதலாவது நாவல். இத்தொடரின் இரண்டாவது நாவலின் களம், சரஸ்வதி நதி மண்ணில் ஓடி மறைந்து காணாமலான காலக்கட்டம். ஒரு நதிக்கரை நாகரிகத்தை முற்றிலும் கற்பனையில் கட்டியெழுப்பும் பிரம்மாண்டமான பணியில் இப்போது ஈடுபட்டிருக்கும் பா. ராகவன், அதற்கு முன்பாக இசை சார்ந்த இன்னொரு நாவல் வருவதற்கான சாத்தியம் உள்ளதாகத் தெரிவிக்கிறார். (“நான் ஒரு நாவலைத் திட்டமிடுவேன். அதற்கொரு வடிவம் அகப்பட்டதும் அது வேறொன்றைத் திட்டமிடும். பெரும்பாலும் என்னைத் தோற்கடித்து அது எழுத நினைத்ததை எழுதிக்கொண்டு அதன்பின்பே என்னை ஆட்டத்தில் சேர்க்கும்.” – பாரா)

பா. ராகவனின் நான்கு சிறுகதைத் தொகுதிகள் வெளியாகியிருக்கின்றன. மூவர், பறவை யுத்தம், காந்தி சிலைக் கதைகள், மாலுமி. இதில் மூவர், திருப்பூர் தமிழ்ச் சங்க விருது பெற்றது. பறவை யுத்தம் லில்லி தேவசிகாமணி நினைவு அறக்கட்டளை விருது பெற்றது.

இந்தியாவின் பெருமைக்குரிய இலக்கிய விருதுகளுள் ஒன்றான பாரதீய பாஷா பரிஷத் விருது பாராவின் அலகிலா விளையாட்டை முன்வைத்து அவருக்கு வழங்கப்பட்டது. இந்தியாவின் குறிப்பிடத்தக்க இளம் எழுத்தாளர்கள் என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்ட நூறு பேர் பட்டியலில் பா. ராகவன் இடம் பெற்றிருந்தார். இவரது பல கதைகள் மலையாளம், ஹிந்தியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

1989ம் ஆண்டு முதல் பத்திரிகைப் பணியிலும் 2004 முதல் பதிப்புத்துறையிலும் பணியாற்றிய பா. ராகவன், 2012 முதல் முழு நேர எழுத்தாளர் ஆனார். பதினைந்துக்கும் மேற்பட்ட தொலைக்காட்சித் தொடர்களுக்கும் இரண்டு திரைப்படங்களுக்கும் வசனம் எழுதியிருக்கிறார். 1750 எபிசோடுகள் வெளியான ‘வாணி ராணி’ தொலைக்காட்சித் தொடருக்கு முழுவதும் வசனம் எழுதியவர் இவரே. இது இந்திய அளவில் ஒரு பெரும் சாதனையாகக் கணிக்கப்படுகிறது. சிறந்த வசனகர்த்தாவுக்கான ‘சன்’ விருது இத்தொடருக்கு வழங்கப்பட்டது.

புனைவுகள் தவிர, அரசியல் – வரலாற்று எழுத்திலும் ஆர்வம் கொண்டவர் பா. ராகவன். டாலர் தேசம், நிலமெல்லாம் ரத்தம், மாயவலை தொடங்கி, தமிழ் வாசகர்களின் கவனத்தைக் கதையல்லாத எழுத்தின் பக்கம் நகர்த்திப் போனவரும் இவரே.

மனைவி ரம்யா, மகள் ஆர். பாரதியுடன் சென்னையில் வசித்து வரும் பா. ராகவனின் வயது 48. பத்து நாவல்கள் உள்பட இதுவரை அறுபது நூல்கள் வெளியாகியுள்ளன.

ஆசிரியரின் ‘தன் வரலாற்றுச் சுருக்கம்’ இங்கே உள்ளது.

Books

Buy Kindle EBooks

புதிய நாவல்கள்

புத்தகப் பட்டியல்

முந்தையவை

தொகுப்பு

புதியவை