ஒரு முக்கிய அறிவிப்பு

//அன்புள்ள பாரா!

உங்களின் சில கட்டுரைகள் வாசித்தது, யூடுயூபில் நீங்கள் பேசியதன் தொடர்ச்சியாக கிழக்குக்கு புத்தகம் எழுத விருப்பம் தெரிவித்துச் ஓரிரு மாதம் முன்னால் உங்களுக்கு மின்னஞ்சல் எழுதியிருந்தேன். என்னைப்போலவே பலர் புத்தகம் எழுதுவது பற்றின அடிப்படைகளைக் கேட்டிருப்பதால் பின்னர் விளக்குவதாக சொன்னீர்கள். மீண்டும் நினைவுப் படுத்தியபோது, கடிதமாக எழுதுவதைவிட நேரில் பேசுவது பலனளிக்கும் என்று சொல்லியிருந்தீர்கள். இம்மடல் மீண்டும் ஒரு நினைவூட்டல்! நேற்று பத்ரி அவர்களின் வலைப்பதிவினை வாசித்தபின்னர் எழுதத் தோன்றிற்று. புத்தக கண்காட்சியில் பிசியாக இருப்பீர்கள் என்று தெரியும். ஆயினும் தொந்தரவு செய்வதற்கு மன்னிக்கவும். எப்போது அழைப்பீர்கள் என்று காத்திருக்கின்றேன்.

அட்வான்ஸ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

அன்புடன்,
சி.வி. பாலசுப்பிரமணியன்//

—-

மேற்கண்ட மின்னஞ்சல் எனக்கு நேற்று வந்தது. இந்த நண்பர் எனது இணையத்தளக் கட்டுரைகளை, பத்திரிகைத் தொடர்களை இடைவிடாது படித்துத் தொடர்ந்து கடிதங்கள் எழுதிக்கொண்டிருப்பவர். கடந்த செப்டெம்பர் மாதம் உரையாடல் அமைப்பின் சிறுகதைப் பட்டறையில் கலந்துகொள்ள வந்திருந்த நண்பர்கள் சிலரும், நிகழ்ச்சிக்குப் பிறகு இதே விஷயத்தைப் பற்றி என்னிடம் கேட்டார்கள்.

சிறுகதை, நாவல், கவிதைகள் எழுதுவது வேறு; புனைவல்லாத புத்தகம் – குறிப்பாக அரசியல், சரித்திரம், வாழ்க்கை வரலாறுகள் போன்றவை எழுதுவது என்பது முற்றிலும் வேறு. இதன் எழுத்து முறை, இலக்கணங்கள், அடிப்படைகள் படைப்பிலக்கியம் சார்ந்த முயற்சிகளிலிருந்து பெரிதும் மாறுபட்டது. பத்து நிமிடம், அரை மணிப் பேச்சில் அதனை விளக்க முடியுமா என்று தெரியவில்லை. அல்லது ஒரு கட்டுரையில்.

கிழக்கு எடிட்டோரியலைச் சேர்ந்தவர்களுக்கு [கிழக்குக்கு எழுதும் சில வெளி எழுத்தாளர்களும் வருவார்கள்] ஆண்டுக்கொரு முறை Non Fiction Writing தொடர்பான நுணுக்கங்களைச் சொல்லித்தர ஒருநாள் வகுப்பு நடத்துவோம். இது வலைப்பதிவாளர்கள் சந்திப்பு போலவோ, உரையாடல் அமைப்பு நடத்திய பயிற்சி முகாம் போலவோ இருக்காது. எங்கள் அலுவலகத்திலேயே [பெரும்பாலும் என் அறையிலேயே] நடக்கும். பதிவுக் கட்டணமெல்லாம் கிடையாது. ஸ்கிரிப்ளிங் பேட், பால்பாயிண்ட் பேனா, சிறு பிரசுர அன்பளிப்புகள், பவர் பாயிண்ட் பிரசண்டேஷன் இதெல்லாம் கிடையாது. மதிய உணவுகூட அவரவர் வீட்டிலிருந்தே மோர்சாதம் எடுத்துவந்துவிடுவது சாலச்சிறந்தது. டீ, காப்பி மட்டும் கிடைக்கக்கூடும்.

ஆனால் இந்த முறைசாராப் பயிற்சி முகாம், புத்தகம் எழுதுவதற்கு உபயோகமாக இருப்பதாகக் கலந்துகொண்ட நண்பர்கள் சொல்லியிருக்கிறார்கள். ஒவ்வோர் ஆண்டும் ஜனவரியில் புத்தகக் கண்காட்சி முடிந்த பிறகோ அல்லது நடந்துகொண்டிருக்கும்போதோ இது நடக்கும்.

இந்த வருடம் கிழக்கு எழுத்தாளர்கள், எடிட்டோரியலைச் சேர்ந்தவர்கள் தவிர, ஆர்வமுடன் கிழக்குக்கு எழுத விரும்புகிற புதிய நண்பர்கள் சிலரையும் அழைக்கலாம் என்று நினைத்திருக்கிறேன். ஆனால் பெரும் கூட்டமாக நடத்த இயலாது. ரெகுலர் ஆள்கள் தவிர, பத்துப் பேருக்கு மேல் கஷ்டம். இது மைக் வைத்து நடத்தப்படும் கூட்டமல்ல. பிரத்தியேகமாக ஒவ்வொருவருடனும் Interact செய்தாக வேண்டும். ஒவ்வொருவரின் எழுத்து சார்ந்த சந்தேகங்கள், பிரச்னைகள், குழப்பங்களையும் பேசித் தீர்க்க வேண்டும். அருகே அமர்ந்து பேசுவதுதான் சரியாக இருக்கும். எனவே, முதலில் பதிவு செய்வோருக்கே முன்னுரிமை.

தவிர, அனைவருக்கும் வசதியான விடுமுறை நாள், நல்ல நேரம் போன்றவை இதில் பார்க்கப்பட மாட்டாது. என் வசதி, என்னுடைய எடிட்டோரியல் நண்பர்களின் சௌகரியம் மட்டுமே முக்கியமாகப் பார்ப்பேன், மன்னிக்கவும்.

விருப்பமும் ஆர்வமும் உள்ளவர்கள் இங்கே உள்ள கமெண்ட்ஸ் பெட்டியில் பதிவு செய்யலாம். அல்லது writerpara@gmail.com முகவரிக்கு இரு தினங்களுக்குள் மின்னஞ்சல் அனுப்பலாம். நாள், நேரம் முதலிய விவரங்களைப் பின்னர் தெரிவிக்கிறேன்.

22 comments

புத்தகப் பட்டியல்

யதி – புதிய நாவல்

அமேசான் ஆசிரியர் பக்கம்

முந்தையவை

தொகுப்பு

புதியவை

வகை

மின்னஞ்சலில் பெற