கலைஞர், கண்காட்சி, கிழக்கு – ஆரம்பம், அமர்க்களம்!

'நீங்கள் New Horizon Media Private Limited' என்ற பெயரில்தான் பபாசியில் உறுப்பினராகியிருக்கிறீர்கள். எனவே உங்கள் அரங்க முகப்பில் அந்தப் பெயரைத்தான் பலகையில் வைக்க முடியும். கிழக்கு பதிப்பகம் என்று திருத்த முடியாது.’

முந்தைய வருடங்களில் எல்லாம் அப்படித்தானே இருந்தது என்று பிரசன்னா குழுவினர் வாதாடிப் பார்த்து வெறுத்துப் போய்த் திரும்பியிருக்க, [‘முன்ன இருந்திருக்கலாம் சார். இப்ப புது கமிட்டி. புது ரூல். பேரை மாத்த முடியாது!’] சென்னை புத்தகக் கண்காட்சியில் கிழக்கு பதிப்பகத்துக்குப் பெயர்ப்பலகை இல்லாத குறையை, தமிழக முதல்வர் கலைஞரின் தொடக்க விழாப் பேச்சு சுத்தமாகப் போக்கிவிட்டது.

தொடக்க விழா நிகழ்ச்சி முடிந்து, பொதுமக்களைக் கண்காட்சி வளாகத்துக்குள் அனுமதித்த மறுகணமே, ‘எங்கே அந்த சென்னை வரலாறு புத்தகம் கிடைக்கும்? யார் வெளியிட்டிருக்கிறார்கள்?’ என்று கேட்டபடியே வர ஆரம்பித்துவிட்டார்கள். பெயர்ப்பலகையை மாற்றி வைத்து அலகிலா விளையாட்டு நிகழ்த்திய அமைப்பாளர்களே கிழக்குக்கு வழி சொல்ல வேண்டியதானது.

கலைஞருக்கு நன்றி. இத்தனைக்கும் அவர் குறிப்பிட்டது Madras Rediscovered ஆங்கில மூலப் புத்தகத்தை. அதற்குத்தான் சென்ற ஆண்டு கலைஞர் பொற்கிழி விருது வழங்கப்பட்டது. அந்த விருது வழங்கப்பட்டபோது அந்தப் புத்தகத்தின் தமிழாக்கத்தை நாங்கள் வெளியிட்டிருக்கவில்லை.

‘என் பெயரால் வழங்கப்படும் விருதினை நீங்கள் வழங்கிய ஒரு வரலாற்றுப் புத்தகத்தில் மிகக் கவனமாக என் பெயரை இருட்டடிப்பு செய்திருக்கிறார் ஆசிரியர். வரலாற்று நூலுக்கு விருது கொடுக்கும்போது, வரலாறு சரியாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறதா என்றெல்லாம் பார்க்க மாட்டீர்களா?’ என்று பபாசி விருது கமிட்டியை ஒரு பிடி பிடித்தபடிதான் ஆரம்பித்தார்.

விஷயம் சற்று சுவாரசியமானது. முத்தையாவின் Madras Rediscovered புத்தகத்தின் பின்னிணைப்பாக ஒரு கால வரிசை இடம்பெற்றிருக்கிறது. அதில் தி.மு.க ஆட்சிக்கு வந்த வருடம் குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால் கலைஞர் பதவியேற்ற விவரம் இருக்காது. அ.தி.மு.க ஆட்சியைப் பிடித்த விவரம் வரும்போது எம்.ஜி.ஆர். முதல்வரான தகவல் இருக்கும். எம்.ஜி.ஆருக்குப் பின்னால் ஜானகி முதல்வரான விவரம் இருக்கும். திரும்பவும் கலைஞர் முதல்வரான தகவல் இருக்காது. அம்பேத்கர் பெயரால் சட்டக்கல்லூரி தொடங்கப்பட்ட விவரம் இருக்கும். தொடங்கி வைத்தவர் கலைஞர் என்று இருக்காது.

கலைஞரின் குற்றச்சாட்டு இதுதான். ‘நான் என்ன தவறு செய்தேன்? தமிழனாகப் பிறந்தது தவறா? ஒரு பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவனாகப் பிறந்தது தவறா? இந்தக் கருணாநிதியை ஏன் சரித்திரத்தில் இருட்டடிப்பு செய்தார்கள்? அப்படி இருட்டடிப்பு செய்த புத்தகத்துக்கு நீங்கள் முந்தைய ஆண்டு என் பெயரால் வழங்கப்படும் விருதினை அளித்திருக்கிறீர்கள். இருந்தாலும் எனக்குப் புத்தகங்கள் பிடிக்கும். வாசிப்பு பிடிக்கும். எழுத்தாளர்கள், கவிஞர்கள், தமிழ் அறிஞர்களின் பக்கத்தில் உட்காரத்தான் மிகவும் பிடிக்கும். இந்த ஆண்டு நீங்கள் என்னை அழைக்காதிருந்தாலும் நானாக வந்து முன் வரிசையில் ஒரு பார்வையாளனாக அமர்ந்திருப்பேன். [சென்ற ஆண்டு கலைஞர் வரவில்லை. அப்துல் கலாம் வருவதாக இருந்து, அவரும் வரவில்லை.] ஒரு எழுத்தாளனாக எனக்குக் கிடைக்கக்கூடிய விருதுகளும் கௌரவங்களும்தான் எனக்கு மகிழ்ச்சியை அளிக்கின்றன. என் ஆட்சியை  யார் பாராட்டினாலும் எனக்கு அந்த மகிழ்ச்சி ஏற்படுவதில்லை..’ என்றெல்லாம் வெகு உருக்கமாகப் பேசிவிட்டு, தான் பேசியது யாரையாவது வருத்தியிருந்தால் பொறுத்தருளக் கேட்டுக்கொண்டு கிளம்பிவிட்டார்.

*

முத்தையாவின் புத்தகத்தில் கலைஞர் குறிப்பிட்ட விடுபடல்கள் இருப்பது உண்மையே. ஆனால் அந்நூல், தமிழகத்தின் அரசியல் வரலாற்று நூல் அல்ல. சென்னை நகரின் வரலாறைச் சொல்லும் புத்தகம் அது. கலைஞர் பெயர் மட்டுமல்ல. காமராஜ், ராஜாஜி, பக்தவத்சலம் போன்றவர்களின் பெயர்களும் அந்த நூலில் உள்ள கால வரிசையில் இருக்காது.

மூல நூலில் உள்ள அதே கால வரிசைதான் எங்களுடைய தமிழாக்கத்திலும் உள்ளது.

விருது கமிட்டி, ஆங்கில மூலத்துக்குத்தான் பரிசளித்திருந்தது என்றபோதிலும், கலைஞர் வாசித்தது நாங்கள் வெளியிட்ட ‘சென்னை மறுகண்டுபிடிப்பு’ என்னும் தமிழ் மொழிபெயர்ப்புப் பிரதியைத்தான். அவர் தமது பேச்சில் குறிப்பிட்ட பக்க எண்ணை வைத்து இதனைச் சொல்ல முடியும்.

கலைஞரை எதற்காகவோ சந்திக்கப் போயிருந்த குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், இந்த நூலை அவருக்குப் பரிசளித்திருக்கிறார். நூல் கைக்கு வந்த அன்றிரவே அதை முழுமையாகப் படித்து முடித்ததாகக் கலைஞர் சொன்னார்.

‘சரித்திர நூல்தான். நல்ல ஆய்வு நூல்தான். பரிசளித்தது ஏன் என்று நான் கேட்கவில்லை, பரிசளித்ததைக் குறை சொல்லவில்லை. ஆனால் இம்மாதிரி விடுபடல்களை தேர்வு கமிட்டி கவனிக்கக்கூடாதா?’ என்றுதான் கலைஞர் கேட்டார்.

விளைவு, தொடக்க விழா நிகழ்ச்சிக்கு வந்திருந்த அத்தனை வாசகர்களும் எங்கே அந்தப் புத்தகம் என்று உள்ளே பாய்ந்துவிட்டார்கள்!

இதனால் அறியப்படும் நீதி 1: சரித்திரம் எழுதுவது பேஜாரான காரியம். விடுபடல்கள் தவிர்க்க முடியாதவை. எனவே கண்டனங்களையும் குட்டுகளையும்கூட.

இதனால் அறியப்படும் நீதி 2: கண்டனங்கள் அமோகமான விற்பனையைக் கொடுக்கும். நிறுவனத்தின் பெயர்ப்பலகையை வைக்கக்கூட அனுமதி கிடைக்காவிட்டாலும்.

20 comments

புத்தகப் பட்டியல்

யதி – புதிய நாவல்

அமேசான் ஆசிரியர் பக்கம்

முந்தையவை

தொகுப்பு

புதியவை

வகை

மின்னஞ்சலில் பெற