நக்கிப் பார்த்த கதை

நான் சாப்பிட்டுக்கொண்டிருந்த மேசையின் எதிர் இரு நாற்காலிகளுக்கு அந்த ஜோடி வந்து அமர்ந்தது. சர்வரானவன் பணிவுடன் நெருங்கி என்ன சாப்பிடுகிறீர்கள் என்று கேட்டான். (நான் தமிழர் உணவான தோசை சாப்பிட்டுக்கொண்டிருந்தேன்.) ஜோடியில் ஆணாக இருந்தவன் ஏதோ சொல்ல வாயெடுக்க, ‘நீ இரு மஹேஷ், நான் சொல்றேன்’ என்று அவனைத் தடுத்துவிட்டு பெண்ணாக இருந்தவள் சொல்லத் தொடங்கினாள்.

பனீர் புலாவ் ஒரு ப்ளேட். ஜீரா ரைஸ் ஒரு ப்ளேட். கோபி மஞ்சூரியன் அப்பறம் கடாய் பனீர். ஏய் ஒனக்கு வேற என்ன வேணும்?

அவன் தன் பங்குக்கு சில வினாடிகள் யோசித்துவிட்டு பட்டர் நான் ஒண்ணு என்றான். குறிப்பெடுத்த சர்வர் நாலடி போனதும் ஸ்ட்ராபெரி ஐஸ் க்ரீம் என்று ஒரு சத்தம்.

நான் தோசையை ஒரு விள்ளல் வாயில் போட்டுக்கொண்டேன். அந்தப் பெண் தன் நாற்காலியை அந்த மஹேஷுக்கு இன்னும் நெருக்கமாக இழுத்துப் போட்டுக்கொண்டு அவனது சாப்பிடும் கையை இழுத்து வளைத்து கெட்டியாகப் பிடித்துக்கொண்டாள். விட்டால் பில்லுக்குப் பணம் கொடுக்காமல் ஓடிவிடுவானோ என்னமோ.

நீயே சொல்லு மஹேஷ். டாட் பண்றது நியாயமே இல்ல. இவர யாரு என் காலேஜுக்கு வந்து வெயிட் பண்ண சொன்னது? அட்லீஸ்ட் நான் வரப் போறேன்னு எனக்கு ஒரு போனாவது பண்ணியிருக்கணுமா வேணாமா? அப்பறம் நான் ஒன்னவர் நின்னேன், ஒன்ன காணம், எங்க சுத்தப் போனேன்னு ஒரு கேள்வி. செம கடுப்பு தெரியுமா.

லீவ் இட் ஐ ஸே. அப்பால்லாம் அப்படித்தான்.

உங்கப்பா அப்படியா?

நாம அப்பாங்கள பத்திப் பேசுறதுக்கா வந்தோம்?

சீ என்று அவன் கன்னத்தில் செல்லமாக ஒரு இடி இடித்தாள். நான் இன்னொரு தோசை சொல்லலாமா அல்லது பூரிக்குத் தாவிவிடலாமா என்று யோசித்துக்கொண்டிருந்தபோது சர்வரானவன் என் எதிரணியினர் ஆணையிட்ட பலகாரங்களை எடுத்து வந்து பரப்பி வைத்தான்.

சின்னச் சின்ன வாணலிகளில் எண்ணெய் மினுங்கத் ததும்பி வழியும் குருமா ரகங்கள். ஆ, ஜீரா சாதம். இது இனிப்பாயிருக்குமா அல்லது வெறும் நெய் சாதமா என்று எனக்குப் பலகாலமாக சந்தேகம் உண்டு. கேட்டுவிடலாமா என்று யோசித்தேன்.

அதற்குள் அவள் கிண்ணங்களில் இருந்த இருவேறு விதமான சாப்பாட்டைத் தட்டுக்குத் தள்ளி, இரு தட்டுகளிலும் சைட் டிஷ்களை எடுத்து ஊற்றினாள். அவன் ஒரு வாய் எடுத்து சாப்பிட்டான்.

சீ, பேட் பாய் என்று அவள் சொன்னாள். உடனே அவன் ஏன் பேட் பாய் ஆனான் என்பதை அவனுக்குப் புரியவைக்கும் விதமாக ஸ்பூனால் கொஞ்சம் சோற்றை எடுத்து அவன் வாயில் ஊட்டினாள். அவன் பதிலுக்கு சிரித்தபடி அவள் கன்னத்தை வலிக்காமல் ஒரு கிள்ளு கிள்ளி எடுத்து சாதத்தில் போட்டுப் பிசைந்து சாப்பிட்டான்.

பொறுக்கவில்லை போலிருக்கிறது. அவன் கையில் இருந்த ஸ்பூனை அவள் வாங்கி வைத்தாள். கவனமாக இப்போதும் அவனிரு கைகளை எடுத்துத் தன் கைகளுக்குள் பதுக்கிக்கொண்டு, ஷாப்பிங் போணும்டா. ரொம்ப வேலையிருக்கு. இன்னர்ஸ் வாங்கணும். செப்பல் வாங்கணும். காஸ்மெடிக்ஸ் ஐட்டம்ஸ் கொஞ்சம் வாங்கணும். லாஸ்ட் சண்டே போலாம்னு நெனச்சேன். ம்ருதுளா வரேன்னு சொல்லி லாஸ்ட் மினிட்ல கவுத்துட்டா.

அவனுக்குக் கோபம் வந்துவிட்டது. நீ ஏன் அவள கூப்ட்ட. எனக்கு போன் பண்ணியிருக்கலாம் இல்ல? சீ இல்லப்பா. நீ ப்ராஜக்ட் இருக்குன்னு சொன்னதால ஒன்ன டிஸ்டர்ப் பண்ணவேணான்னு நெனச்சேன்.

பேச்சு வாயின் செயல். அவள் ஒரு கையை விடாமல் பிடித்துக்கொண்டு மறு கையால் நிறுத்தாமல் அவன் தலைமுடி, காது, கன்னம், தோள்பட்டை என்று எங்கெங்கோ இருக்கும் பாக்டீரியா, அமீபா, வைரஸ்களைத் தட்டிவிட்டுக்கொண்டே இருந்தாள்.

குட்டி கொஞ்சம் ஷோக்காகத்தான் இருந்தாள். யார் பெத்த பெண்ணோ. இருபது, இருபத்திரண்டு வயதுதான் இருக்கும். அந்தப் பையன் என்னை மாதிரி கருப்புதான் என்றாலும் ஏதோ ஒரு வசீகரம் இருந்த மாதிரி தெரிந்தது. ஒருவேளை என் கண்ணில் பழுதாகவும் இருக்கலாம். அவன் யார் பெத்த பிள்ளையோ. ஏய் வாட்ஸ் திஸ்? என்று அப்போதுதான் பார்ப்பது போல அவள் காதில் தொங்கிக்கொண்டிருந்த என்னமோ ஒரு வளையத்தைத் தொட்டுப் பார்த்தான்.

நீ பாக்கல இல்ல? ரொம்ப நாளா இத காணம்னு தேடிட்டிருந்தேன் தெரியுமா. எப்படி தொலைஞ்சிதுன்னே தெரியல. லாஸ்ட் இயர் வெக்கேஷனுக்கு ஆக்ரா போயிருந்தப்ப கிடைச்சிது. நல்லாருக்கில்ல?

அவன் ஏதோ சொன்னான். அவளை மேலும் நெருங்கி அந்தக் காது வளையத்தின் ஊடாக காதுக்குள்ளேயே சொன்னபடியால் எனக்குக் கேட்கவில்லை. நான் டேபிளைப் பார்த்தேன். அவர்கள் இன்னும் சாப்பிடவே ஆரம்பித்திருக்கவில்லை.

சீ இல்ல மஹேஷ். காட் ப்ராமிஸா இல்ல தெரியுமா.

காதுக்குள் வேறென்னவோவும் சொல்லியிருக்க வேண்டும். அவள் மிகவும் அழகாக சிணுங்கத் தெரிந்தவளாயிருந்தாள். அவன் அவளது சிணுங்கலை அதிகரித்துப் பார்க்க ஆசைப்பட்டு மேலும் நெருங்கி, மேலும் குனிந்து கிட்டத்தட்ட அவள் மடியில் படுக்கிற உத்தேசத்துடன் என்னவோ செய்துகொண்டிருந்தபோது சர்வர் அந்த பாழாய்ப் போன ஐஸ் க்ரீமையும் எடுத்து வந்து தொலைத்தான்.

வெச்சிருங்க. ஏய் ஐஸ் க்ரீம் சாப்பிடறியா?

எழவு இதிலென்ன இத்தனை கண்ணகட்டல், பரவசப் பீறிடல்! எனக்கு பற்றிக்கொண்டு வந்தது.

அவள் ஐஸ் கப்பைக் கையில் ஏந்திக்கொண்டாள். ஒரு ஸ்பூன் எடுத்து சாப்பிட்டுப் பார்த்தாள். பரவாயில்லை. கசக்கவில்லை. இந்தா மஹேஷ் என்று அவனுக்கு ஒரு வாய் ஊட்டினாள். எனக்கோ கிளுகிளுவென்று பற்றிக்கொண்டு வந்தது. பல்லைக் கடித்து அடக்கிக்கொண்டேன். இரண்டாவது ஸ்பூனை அவள் எடுத்தபோது அவன் லபக்கென்று அதைப் பிடுங்கி அவளுக்கு ஊட்டிவிட்டான். சீய்ய்.

இதன் பிறகு நடந்ததுதான் உச்சம். ஒழுங்காக ஊட்டிவிட்டுக்கொண்டு சாப்பிட்டுத் தொலைக்க வேண்டியதுதானே? மஹேஷானவன் சற்றும் எதிர்பாராத ஒரு கணத்தில், அவள் ஊட்டிவிடுவது போல எடுத்துச் சென்று ஐஸ்க்ரீமை அவன் மூக்கில் தேய்த்துவிட்டாள். பதிலுக்கு அவனும் அவள் மூக்கில் ஒரு சொட்டு ஐஸ் க்ரீமைத் தடவி கணக்குத் தீர்க்க, பெண்குலம் என்ன அத்தனை லேசுப்பட்டதா? ஒன்ன….. என்று போலிக் கோபமுடன் அப்படியே அவன் பின்னந்தலையைப் பிடித்து ஒரு இழு இழுத்தாள். நெற்றி முட்டிக்கொள்ள, அவன் மூக்கில் இருந்த ஐஸ் க்ரீமை தவளை போல் சரேலென நாக்கு நீட்டி ஒரே நக்கு.

தமிழன் தோசைத் தட்டைத் தள்ளி வைத்தான். ஒரு முடிவுடன் எழுந்து நின்று, ஸ்டாப் இட் என்றான்.

இருவரும் என்னை ஒரு வேற்று கிரக ஜந்து திடீரென எங்கிருந்து முளைத்தது என்பது போலவும், அப்போதுதான் என்னை முதல் முறை பார்ப்பது போலவும் பார்த்தார்கள்.

‘இதோ பாருங்கள், நீங்கள் செய்வது நியாயமே இல்லை. ஒரு பனீர் புலாவ் 120 ரூபாய். ஜீரா ரைஸ் 125 ரூபாய். கடாய் பனீரும் கோபி மஞ்சூரியனும் தலா 90 ரூபாய். பத்தாத குறைக்கு பட்டர் நான் வேறு. எல்லாம் ஆறி அவலாகிப் போய்விட்டது. இதற்குமேல் இவற்றை நாய்கூடத் தின்னாது. கேவலம் பத்து ரூபா கப் ஐஸுக்குக் கொடுக்கிற மரியாதையை இவற்றுக்குக் கொடுக்க விருப்பமில்லை என்றால் என்ன எழவுக்கு இதையெல்லாம் ஆர்டர் செய்தீர்கள்? இந்தக் காலத்துப் பிள்ளைகளுக்குப் பணத்தின் அருமையே தெரியவில்லை. சே.’

ஆவேசம் கொப்பளிக்கத் திட்டிவிட்டு வெளியே வந்த பிறகுதான் நான் சாப்பிட்ட தோசைக்கு பில் வராதது நினைவுக்கு வந்தது.

20 comments

புத்தகப் பட்டியல்

யதி – புதிய நாவல்

அமேசான் ஆசிரியர் பக்கம்

முந்தையவை

தொகுப்பு

புதியவை

வகை

மின்னஞ்சலில் பெற