அங்காடித் தெரு

வலையில் என்னவாவது எழுதியே ஆகவேண்டுமென்று எனக்கு எப்போதும் ஒரு தீவிரம் இருந்ததில்லை. அதனாலேயே அவ்வப்போது எழுதாமலிருப்பேன். அவசியம் இருந்தாலோ, எழுதிப்பார்க்கும் எண்ணம் இருந்தாலோ மட்டுமே எழுதி வந்திருக்கிறேன். பல சமயம் வேலைகள் எழுத விடாமல் தடுக்கும். இந்த முறையும் அப்படியே. மற்றபடி, ஏன் எழுதவில்லை என்று தினசரி கேட்கிற பிரதீப் குமாருக்கும், என்ன ஆயிற்று என்று சந்தர்ப்பம் நேரும் போதெல்லாம் கேட்கும் பிற நண்பர்களுக்குமாக இது.

சற்றுமுன் வசந்தபாலனின் அங்காடித் தெரு திரைப்படத்தைப் பார்த்தேன். எழுது என்று உந்தித் தள்ளுகிற படமாக இருக்கிறது. சுப்பிரமணியபுரத்துக்குப் பிறகு இந்தளவு நான் ஒன்றிப் பார்த்த திரைப்படம் வேறில்லை.

வசந்தபாலனின் ஆல்பம் படத்தைப் பார்த்தபோது எனக்குக் குறிப்பாக எந்த அபிப்பிராயமும் ஏற்படவில்லை. அதனாலேயே அவருடைய வெயிலை வெகுநாள் தவறவிட்டேன். அது ஒரு நல்ல படம் என்று ஊர் முழுக்க சொல்லிவிட்ட பிறகுதான் பார்த்தேன். சந்தேகமில்லை. நல்ல படம்தான். ஆனால் சிறந்த படம் என்று சொல்லத் தோன்றவில்லை.

அப்படிச் சொல்வதற்கான ஒரு சந்தர்ப்பத்தை ‘அங்காடித் தெரு’வின் மூலம் இப்போது அவர் வழங்கியிருக்கிறார்.  இயல்பான, நெஞ்சைத் தொடும் திரைப்படம்.மிக வலுவான கதையம்சம் உள்ளபடியினாலேயே படத்தின் சுமாரான [ஒளிப்பதிவு], மோசமான [பின்னணி இசை], தாங்கவொண்ணாத [எடிட்டிங்] அம்சங்கள் ஒரு பொருட்டில்லாமல் ஆகிவிடுகின்றன. சற்றும் பதறாமல், அநாவசிய வேகம் காட்டாமல் வெகு இயல்பாக, ஆத்மார்த்தமாகக் கதை சொல்லியிருக்கிறார். இதை நீளம் என்று சொல்பவர்கள் ரசனையில்லாதவர்களாக இருக்கக்கூடும். கொஞ்சம் தொய்வு உண்டு. அது எடிட்டிங் பிரச்னை. ஆனால் இதையெல்லாம் மீறி இந்தப் படம் தமிழ் சினிமாவின் நல்ல முகத்தை வெளியோருக்கு எடுத்துச் சொல்லும் தரத்தைச் சார்ந்து நிற்கிறது. அதற்காக வசந்தபாலனைப் பாராட்டியே ஆகவேண்டும்.

சென்னை தியாகராய நகரில் உள்ள பலமாடி பல்பொருள் அங்காடி ஒன்று இந்தக் கதையின் களமாகவும், படம் சொல்லாமல் புரியவைக்கும் பல்வேறு விஷயங்களின் குறியீடாகவும் இருக்கிறது. அங்கு வேலை பார்க்கும் இளைஞர்கள் மற்றும் யுவதிகளின் வாழ்க்கை திரையில் விரிகிறது. நவீன கொத்தடிமைகளாகத் திருநெல்வேலிப் பக்கத்திலிருந்து பிடித்துக்கொண்டு வரப்படும் இந்தக் கூட்டம் வருமானத்துக்காகச் சகித்துக்கொள்ள வேண்டியிருக்கிற அவலங்கள் சொல்லி மாளாது.

பாலாவின் நான் கடவுளில் கண்ட பிச்சைக்காரர்களின் உலகம் அவ்வப்போது நினைவுக்கு வந்ததைத் தவிர்க்க முடியவில்லை. களமும் காட்சியும் வேறானாலும் உணர்வும் வதையும் அதே விதமானவை. ஒரு வித்தியாசம் உண்டு. வசந்தபாலன் வன்முறையைப் பெரிதும் நம்பாமல் வார்த்தைகளை இதில் நம்பி முதலீடு செய்திருக்கிறார். ஆணியடித்த மாதிரி சில இடங்களில் நெஞ்சில் இறங்கும் ஜெயமோகனின் வசனங்கள், ஒரு நல்ல எழுத்தாளன் உடனிருந்தால் ஒரு திரைப்படம் பெறக்கூடிய இன்னொரு பரிமாணம் எத்தகையது என்பதைத் துல்லியமாகக் காட்டுகிறது. உதாரணமாக எந்த ஒரு வசனத்தையும் இங்கே எடுத்துக்காட்ட நான் விரும்பவில்லை. படம் பார்க்கும்போது அவை உண்டாக்கக்கூடிய நியாயமான, அவசியமான அதிர்ச்சியை அது தடுத்துவிடும் என்று கருதுகிறேன்.

எனக்குப் பெரிய ஆச்சர்யம், அஞ்சலி இந்தப் படத்தில் வெளுத்து வாங்கியிருப்பது. நான் எழுதிக்கொண்டிருக்கும் வெட்டோத்தி சுந்தரத்தில்கூட அஞ்சலிதான் கதாநாயகி. இந்தப் பெண் இத்தனை பெரிய திறமைசாலியாக இருப்பார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. முன்னர் ஏதோ ஒரு படம் பார்த்த நினைவிருக்கிறது. சுமாராகத்தான் செய்திருந்தார். இந்தப் படத்தில் கனி என்னும் சேல்ஸ் பெண்ணாகவே வாழ்ந்திருக்கிறார். அந்தக் குறும்பும் சீற்றமும் சோகமும் கண்ணீரும் புன்னகையும் பார்வையும் அப்படியே அள்ளிக்கொண்டுவிடுகின்றன.

ஏழைமையால் உந்தித் தள்ளப்பட்டு எங்கெங்கோ கிராமங்களிலிருந்து புறப்பட்டு சென்னைக்கு வந்து இத்தகு பிரம்மாண்டமான பல்பொருள் கடைகளில் வேலை பார்ப்பவர்களின் வாழ்க்கை அந்தக் கடைகளின் பளபளப்புக்கு நேரெதிரானது என்பதைக் காட்டுவதுதான் இயக்குநரின் நோக்கம். நூற்றுக்கணக்கான சாத்தியங்கள் இருந்தும் இதில் சினிமாத்தனங்களைத் தவிர்த்து, அவர்களுடைய வாழ்க்கையை அதன் சகல துர்நாற்றங்களுடனும் நறுமணங்களுடனும் சேர்த்து, மிகையில்லாமல் காட்சிப்படுத்தியிருப்பதன்மூலம் தமிழ் சினிமாவின் வெகு நிச்சயமான நம்பிக்கை நட்சத்திரமாகத் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டிருக்கிறார் வசந்தபாலன்.

மூலக்கதைக்குத் தொடர்பில்லாத சில சிறுகதைகள் படத்தில் இருக்கின்றன. மிகக் கவனமாகப் படம் பார்க்கும் ரசிகர்களுக்கு அந்தக் குட்டிக்கதைகள் மூலம் திரைக்கதையின் மையத்தை அவ்வப்போது இயக்குநர் தொடாமல் தொட்டுக்காட்டும் சாமர்த்தியம் புரியும். கனியின் தங்கை வயதுக்கு வருகிற தருணம், சோற்றுக்கு வழியில்லாமல் திரிபவன் பொதுக் கழிப்பிடத்தைக் கழுவிவிட்டு உட்கார்ந்துகொண்டு காசு வசூலித்து வாழ்க்கைத் தரத்தை மாற்றிக்கொள்ளும் தருணம், ரங்கநாதன் தெருவில் திரியும் ஊனமுற்ற மக்களின் குறியீடாகக் காட்டப்படும் ஒரு பாத்திரத்தின் மனைவி பிரசவம் முடித்து வருகிற தருணம் போன்றவை சில உதாரணங்கள்.

நிச்சயமாக இரண்டு முறை பார்க்க வேண்டிய படம் இது. ரசிப்பதற்காக ஒருமுறை. லயிப்பதற்காக ஒரு முறை.

வசந்தபாலனுக்கு வாழ்த்துகள்.

37 comments

புத்தகப் பட்டியல்

யதி – புதிய நாவல்

அமேசான் ஆசிரியர் பக்கம்

முந்தையவை

தொகுப்பு

புதியவை

வகை

மின்னஞ்சலில் பெற