தேவை, அவசர உதவி

இந்தப் பையன் நன்றாக எழுதுகிறான். சிறுகதைகளைப் படித்துப் பார்த்தேன், உருக்கமாக, நன்றாக உள்ளன. பிரசுரித்து ஊக்குவிக்க முடியுமா பார் என்று ஒரு துண்டுத் தாளில் எழுதிக் கையெழுத்திட்டு அனுப்பியிருந்தார் அசோகமித்திரன்.

ஈர்க்குச்சிக்கு மூக்குக் கண்ணாடி போட்ட மாதிரி என்னெதிரே நின்றுகொண்டிருந்த முத்துராமனுக்கு அப்போது அதிகம் போனால் இருபது வயதுதான் இருக்கும். ஆதிகால மணிரத்னம் படங்களில் இடம்பெற்ற வசனங்களை விடவும் குறைவாகவே பேசினான். கூர்ந்து கவனித்தாலொழியக் காதில் விழாத தொனியில். பயமாயிருக்குமோ என்று முதலில் நினைத்தேன். பசியாயிருக்கும் என்று பிறகு நினைத்தேன்.

எனக்குத் தெரிந்து ஒரு சிபாரிசுடன் கல்கி அலுவலகத்துக்குள் நுழைந்து, தரத்தால் தன்னை நிரூபித்து, பிரசுரமும் பார்த்த ஒரே எழுத்தாளன் அவன் தான். நான் அங்கிருந்தவரை அவனுடைய பல சிறுகதைகளைத் தொடர்ந்து வெளியிட்டிருக்கிறேன். எல்லா கதைகளிலும் ஆதாரமாக ஒரு துக்கத்தை வைத்திருப்பான். இளம் வயதில் ஏழைமையாலும் இன்ன பிற காரணங்களாலும் நிறைய அடிபட்டிருப்பான் என்று நினைத்துக்கொள்வேன்.

எங்கோ வேலை பார்த்துக்கொண்டிருந்தான். என்னவோ வேலை. மிகச் சொற்பமான சம்பளம். சைக்கிளில் வேர்க்க விறுவிறுக்க வருவான். கதைகளைக் கொடுத்துவிட்டு என் முகத்தையே பார்த்துக்கொண்டிருப்பான். அவன் என்னிடம் என்ன எதிர்பார்த்தான் என்று எனக்குப் புரியவேயில்லை. ஆனால் பார்வையில் ஓர் எதிர்பார்ப்பு நிச்சயமாகத் தெரியும் எனக்கு. கதை நன்றாக இருந்தால் கண்டிப்பாகப் பிரசுரமாகும் என்பது அவனுக்குத் தெரியும். அதைத் தவிர என்னால் வேறென்ன செய்ய இயலும்?

ஒரு சில கட்டுரைகள், பேட்டிகள் எழுத வாய்ப்புக் கொடுத்தேன். கொஞ்சம் தாற்காலிகப் பொருளாதார சுவாசத்துக்காக. சினிமா விமரிசனம் கூட எழுதினான் என்று ஞாபகம். நன்றாக எழுதுவான். அதிகம் கைவைக்க அவசியமில்லாத எழுத்து. காரணம், அவனது வாசிப்புப் பழக்கம்.

முத்துராமனைப் போல ஒரு வெறி பிடித்த வாசகனைக் காண்பது அரிது. தமிழ் இலக்கியவாதிகள் அத்தனை பேரின் எழுத்தையும் ஒன்றுவிடாமல் படித்தவன் அவன். பலபேரைப் போல அசோகமித்திரன் தான் அவனுக்கும் ஆதர்சம். அயனாவரத்திலிருந்து ஓட்டை சைக்கிளை மிதித்துக்கொண்டு அடிக்கடி வேளச்சேரிக்குப் போய்விடுவான். ‘நேத்து அவர் வீட்டுக்குப் போனேன் சார்!’ என்று கடவுளைக் கண்டதுபோல் சொல்வான்.

எழுத்தாளர்களின் வீட்டுக்குப் போவது என்பது எனக்குத் தனிப்பட்ட முறையில் அலர்ஜியான விஷயம். அனுபவங்கள் அப்படி. பிம்பங்கள் உடைவது பற்றிய கவலை இல்லையென்றால் பிரச்னையில்லை. மற்றபடி அது சற்றே அபாயகரமான செயல்; குறிப்பாக ரசிகர்களுக்கு.

ஆனால் அசோகமித்திரன் விஷயத்தில் பிரச்னையில்லை. முத்துராமனை என்றல்ல; யாரையுமே அதிர்ச்சிக்குள்ளாக்காத மனிதர் அவர். அவரது மனத்தின் நிர்வாணம் அபூர்வமானது. வியக்கத்தக்கது. எனக்கென்னவோ அதை அவதானிப்பதற்காகவே முத்துராமன் அடிக்கடி அவரைப் பார்க்கப் போகிறான் என்று தோன்றும்.

காரணம் வினோதமானது. முத்துராமனின் மனத்தைப் படிப்பது மிகவும் சிரமம். கிட்டத்தட்டப் பதினைந்து வருடங்களுக்கும் மேலாக அவனை நான் அறிவேன். ஆனாலும் அவன் ஒரு புதிர். வெளிப்படையாகப் பேசமாட்டான். மனசுக்குள் இங்கே, இன்ன இடத்தில் இதை யோசித்து வைத்திருக்கிறேன். தேடி எடுத்துக்கொள் என்பது போலப் பார்ப்பான். சமயத்தில் கோபம் வரும். கண்டபடி திட்டியும் இருக்கிறேன். ஆனாலும் அவன் மாறவில்லை. அவன் இயல்பும் வார்ப்பும் அப்படிப்பட்டது.

இப்படி இருக்காதே, மாற்றிக்கொள், எதையும் வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டாகப் பேசிப்பழகு என்று சொல்லியிருக்கிறேன். அதற்கும் சிரித்துவிட்டுப் போய்விடுவதுதான் அவன் வழக்கம்.

சைக்காலஜியோ என்னவோ படித்துவிட்டு, அக்கவுண்ட்ஸ் அசிஸ்டெண்டாகவோ என்னவோ அப்போது அவன் உத்தியோகம் பார்த்துக்கொண்டிருந்தான். நான் கல்கியை விடுத்துக் குமுதம் சென்றபிறகு அவனைச் சந்திப்பது அரிதானது. எப்போதாவது என் வீட்டுக்கு வருவான். கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டுப் போவான். என் அப்பா, அம்மா, மனைவி அனைவருக்கும் அவனை ரொம்பப் பிடிக்கும். சமத்து என்பார்கள். அமைதியாக இருப்பவர்களுக்குக் கிடைக்கக்கூடிய எளிய புகழ் அது.

2004 ஜனவரியில் கிழக்கு தொடங்குவது உறுதியானதும் எப்படியாவது முத்துராமனை என்னுடன் சேர்த்துக்கொண்டுவிடுவது என்று முடிவு செய்தேன். அவனும் அதை மிகவும் விரும்புவான் என்று நிச்சயமாக நம்பினேன். ஆனால் அவனைக் கண்டுபிடிப்பது கஷ்டமாக இருந்தது. இடைப்பட்ட வருடங்களில் அவன் தொடர்பு எல்லைக்கு அப்பா சென்றிருந்தான்.

என் நண்பர் பார்த்தசாரதி விடாமல் முயற்சி செய்து ஒரு வழியாக அவனைப் பிடித்துவிட்டார். ‘இதோ பார், உன்னை இங்கே உள்ளே சேர்ப்பது ஒன்றுதான் இப்போது நான் செய்யக்கூடியது. எடிட்டோரியலில் இரண்டு பேருக்குமேல் இடம் கிடையாது. நீ அக்கவுண்ட்ஸ் பார்த்துக்கொள்ளத்தான் வரவேண்டியிருக்கும்’ என்று சொன்னேன்.

எப்போதும்போலச் சிரித்தான். பேசாமல் போய்விட்டான். கிழக்கு பதிப்பகத்தின் முதல் அக்கவுண்டண்டாக முத்துராமன் ஒரு பச்சை நிற பிளாஸ்டிக் கல்லாப்பெட்டியுடன் உட்கார்ந்தான். எப்படி பத்ரிக்குப் பதிப்புத் துறை அப்போது தெரியாதோ, எப்படி புத்தக எடிட்டிங் எனக்குத் தெரியாதோ, அப்படியே கணக்கு வழக்குகளும் முத்துராமனுக்குத் தெரியாது.

ஒன்றும் பிரச்னையில்லை. எல்லாமே அனுபவமல்லவா? கிட்டத்தட்ட ஒரு வருடம் அவன் அந்த வேலை பார்த்துக்கொண்டிருந்தான் என்று நினைக்கிறேன். பிறகு சகிக்கமாட்டாமல் பத்ரியிடம் சொல்லி அவனை எடிட்டோரியலுக்கு மாற்றிக்கொண்டேன். முத்துராமன் மூச்சுவிடத் தொடங்கியது அப்போதுதான். முகில், மருதன், முத்துக்குமார், கண்ணன் எல்லோரும் வருவதற்கு முன்னால் கிழக்கு எடிட்டோரியலுக்கு வந்தவன் அவன்.

பொறுப்பாக எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்ய ஆரம்பித்தான். அழகாக ப்ரூஃப் பார்த்தான். ஒழுங்காக எடிட் செய்தான். எக்ஸிக்யூஷன் பணிகளைத் திறமையாகச் செய்தான். அனைத்திலும் முக்கியம், ஆசிரியர்களுடன் தொடர்பு கொள்கிற வேலை. எழுத்தாளர்கள் தனி ஜாதி.  எடிட்டிங் டேபிளில் உட்கார்ந்துகொண்டு அவர்களைச் சமாளிப்பது பெரிய ஜோலி. முத்துராமன் அதை வெகு அநாயாசமாகச் செய்தான். அவ்வப்போது சிறுகதைகளையும் விடாமல் எழுதிக்கொண்டிருந்தான். அதே கல்கி அவனைத் தொடர்ந்து பிரசுரித்துக்கொண்டு இருந்தது.

‘முத்துராமா, கொஞ்சம் நான் ஃபிக்‌ஷன் எழுதப்பழகு. நீ இலக்கியவாதி ஆகறதுக்கு இன்னும் வயசு இருக்கு. கி.ரா., சுந்தர ராமசாமியெல்லாம் எந்த வயசுல பாப்புலர் ஆனாங்கன்னு பாரு. ஜெயமோகன் டெலிபோன்ஸ்ல இருக்காரு. சாரு கூட போஸ்ட் ஆபீஸ்ல இருந்தார். சுஜாதா கடைசி வரைக்கும் வேலையை விடலை. யோசிச்சிப் பாரு. கொஞ்சம் சம்பாதிச்சிட்டு அப்புறம் இலக்கிய சேவை பண்ணுடா’ என்று அவ்வப்போது சீண்டுவேன். ஆனால் அவன் அசோகமித்திரனைத் தவிர இன்னொருவரை எதற்காகவும் உதாரணமாகக் கொள்ள விரும்பவில்லை. ‘வருமானம்… புரியுது சார். ஆனா சிறுகதைல இருக்கற சேலஞ்ச் மத்ததுல இல்லையே’ என்பான்.

கிட்டத்தட்ட ஒரு வில்லன் அளவுக்கு அவனைக் கொடுமைப்படுத்தி, மிரட்டி, அச்சுறுத்தி கதையல்லாத ஒரு புத்தகம் எழுதவைத்து வெளியிட்டேன். சிரிப்பு டாக்டர். என்.எஸ். கிருஷ்ணனின் வாழ்க்கை வரலாறு.

பலபேரிடமிருந்து சிறுகதையைக் காப்பாற்றுவதற்காக அவர்களை அபுனை எழுத வைத்திருக்கிறேன். முத்துராமன் விஷயத்தில், கொஞ்சமாவது அவனது பொருளாதார நிலை மேம்படவேண்டும் என்பது தவிர எனக்கு வேறு நோக்கம் இருந்ததில்லை. பிறகும் அவன் ஒரு சில நூல்கள் எழுதினான். இன்றளவும் அவனுக்கு ஓரளவு ராயல்டி கொடுத்துக்கொண்டிருக்கும் புத்தகங்கள் அவை.

ஆனால் அவனது ஆர்வம் அதில் இல்லை. சிறுகதைதான். நாவல் கூட இல்லை. நாலு பக்கத்தில் வாழ்வின் ஒரு குறுக்குவெட்டைக் கொண்டுவருவதில் உள்ள சவாலில் அவன் திளைத்துக்கொண்டிருந்தான். அதைத்தவிர அவன் வேறெதையுமே விரும்பவில்லை.

இந்த மனநிலை, தொழில்முறையில் எழுத்துத் துறையில் இருப்பவர்களுக்குப் பிரச்னையானது. அவனை அக்கவுண்ட்ஸிலிருந்து எடிட்டோரியலுக்குக் கொண்டுவந்தது பிழையோ என்றுகூட நினைத்திருக்கிறேன். ஆனால் முத்துராமன் ஒரு நல்ல எழுத்தாளனே தவிர, ஒரு நல்ல அக்கவுண்டண்ட் அல்ல. அவன் அந்தப் படிப்பில் தேறியவன் அல்லன். அதில் அவனால் வெகுநாள் குப்பை கொட்ட முடியாது. வாழ்நாள் முழுதும் தன் தொழில் முகம் என்னவென்று தெரியாமல் அலைந்து கலை மனத்தை இழந்துவிடக்கூடாதே என்கிற பதைப்பில்தான் அப்படிச் செய்தேன். தவிரவும் அவனை விடாது துரத்திக்கொண்டிருந்த வறுமை. என் கவலை அது பற்றியதுதான்.

எழுத்து முக்கியம். இலக்கியம் முக்கியம். சிறுகதை முக்கியம். எல்லாம் முக்கியம்தான். வாழ்க்கை அனைத்திலும் முக்கியமல்லவா. நேர்த்தியாக வாழ்ந்து முடிக்கப்பட்ட ஒரு வாழ்வைக் காட்டிலும் பெரிய இலக்கியம் என்ன இருந்துவிடப் போகிறது?

அதனால்தான் வலுக்கட்டாயமாக அவனை அவனது கதையுலகிலிருந்து பிடுங்கி அபுனை எழுதவைக்கவும் அபுனை நூல்களில் வேலை பார்க்கவும் திணித்தேன். பூமி தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் பலமுறை சுற்றிவந்த பிறகு நிச்சயமாகத் தமிழகத்தில் சிறுகதை எழுத்தாளர்களுக்குச் செழிப்பான காலமொன்று உருவாகும். அதற்குள் வாழ்க்கையில் அவனை வெற்றி காண வைத்துவிட்டால், இலக்கியத்தில் அவனே எளிதில் வென்றுவிடுவான் என்று நினைத்தேன்.

துரதிருஷ்டவசமாக ஏதோ ஒரு கணத்தில் எனது கடுமை அவனுக்குப் பிடிக்காமல் போய்விட்டது. என் நோக்கம் அவனுக்குத் தெரியும். என் மனம் அவனுக்கு சர்வ நிச்சயமாகப் புரியும். என் பெற்றோர், மனைவி, குழந்தையைவிட நான் அதிகம் நேசித்த குழந்தை அவன். இதுவும் அவனுக்குத் தெரியும். ஆனாலும் ஒருநாள், ‘நான் போயிட்டு வரேன் சார்’ என்று சொல்லிவிட்டான்.

மறக்கவே மாட்டேன். வீடு, அலுவலகம் இரண்டு இடங்களிலும் யாருமே இதை நம்பவில்லை. என் மனைவி ஓர் இரவு முழுதும் ஆற்றாமையில் புலம்பிக்கொண்டிருந்தாள். முத்துராமன்கூட என்னிடமிருந்து பிரிந்துபோவான் என்று நம்புவது அனைவருக்கும் சிரமமாக இருந்தது. ஏனெனில் அலுவலகத்திலும் சரி, என் வீட்டிலும் சரி. அவன் என்னிடம் / என்னுடன் பணியாற்றுபவன் என்று யாரும் கருதியதில்லை. என்னுடன் வாழ்பவனாக மட்டுமே பார்க்கப்பட்டான்.

யோசித்துப் பார்த்ததில் ஒருவகையில் அவன் பிரிந்து போனதே நல்லது என்றுகூட எனக்குத் தோன்றியது. ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு வாழ்வில் அவன் வென்று காட்டக்கூடிய சந்தர்ப்பங்களை அந்தப் பிரிவே அவனுக்கு உருவாக்கித் தரலாம் அல்லவா?

தமிழக அரசியல் பத்திரிகையில் சேர்ந்திருக்கிறேன் என்று சொன்னான். உண்மையில் சிரித்துவிட்டேன். கிழக்காவது 108 முறை பூமி சூரியனைச் சுற்றி வந்தபிறகு சிறுகதை இலக்கியம் திரும்பவும் தழைக்கும் என்று நம்புகிறது. ஓர் அரசியல் வாரப்பத்திரிகையில் அப்படியான சிந்தனைக்கேகூட இடமில்லையே.

சரி, ஒரு பத்திரிகையாளனாக அங்கே கிடைக்கக்கூடிய அனுபவங்கள், அந்தத் துறையில் மேலே உயர்த்திச் சென்று அவனது பொருளாதாரப் பிரச்னைகளைத் தீர்க்குமானால் அதுவே போதும் என்று நினைத்துக்கொண்டு வாழ்த்தி விடைகொடுத்து அனுப்பிவிட்டேன்.

சென்ற வருடம் என் குழந்தையின் பிறந்த நாள் அன்று வீட்டுக்கு வந்தான். எப்போதும்போல் என் மகளுடன் விளையாடினான். என் மனைவியுடனும் மற்றவர்களுடனும் சிரித்துப் பேசினான். நன்றாக இருப்பதாகச் சொல்லிவிட்டுப் போனான். பிறகு தொடர்பில்லை.

முகில்தான் சொன்னான். முத்துராமனுக்குச் சிறுநீரகங்கள் பழுதாகிவிட்டன. அவன் ஆஸ்பத்திரியில் இருக்கிறான். அந்த நேரத்திலும் அவன் தனது மருத்துவமனை அனுபவங்களை எப்படிக் கதையாக்கலாம் என்றுதான் யோசித்துக்கொண்டிருப்பான் என்று பட்டது. கவலையாக இருந்தது.

சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை என்பது மிக நீண்ட பேப்பர் ஃபார்மாலிடிகளை உள்ளடக்கியது. பாண்ட் பேப்பர், நீதிபதி கையெழுத்து என்று எக்கச்சக்க சடங்குகள் இதில் இருக்கின்றன போலிருக்கிறது. வாராவாரம் டயாலிசிஸ், பல்லாயிரக்கணக்கில் செலவு, ஏராளமான அலைச்சல்கள் என்று கழிந்த மாதங்களை விவரிப்பது விரயம்.

முத்துராமன் என்னும் மிக நல்ல எழுத்தாளன் இன்றைக்குப் பிழைத்து எழுவதற்கு லட்சங்கள் தேவை என்பதுதான் முகத்தில் அறையும் உண்மை நிலை. பல மாதங்களாகப் படுக்கையில் கிடப்பவனாகிவிட்டபடியால் அவனுக்கு இப்போது தமிழக அரசியல் வேலையும் இல்லை. கருணை மிக்க நண்பர்களின் உதவியால்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறான். பணத்துக்காகக் காத்திருந்து, அறுவைச் சிகிச்சையைத் தள்ளிப்போட்டுக்கொண்டே இருக்க நேர்ந்ததில், சேர்கிற பணமெல்லாம் வாராந்திர  டயாலிசிஸ் மற்றும் மருந்து மாத்திரை செலவுகளுக்கே சரியாகப் போய்விடுகிறது.

இதற்குமேல் எழுதக் கைவரவில்லை. மனமிருப்போர் உதவலாம். முழு விவரங்கள் முகிலின் இந்தப் பதிவில் உள்ளன. சொக்கனின் பதிவிலும் இருக்கிறது.

13 comments

புத்தகப் பட்டியல்

யதி – புதிய நாவல்

அமேசான் ஆசிரியர் பக்கம்

முந்தையவை

தொகுப்பு

புதியவை

வகை

மின்னஞ்சலில் பெற