மூன்று காப்பியங்கள்

தமிழின் தொன்மைக்குச் சான்றாக விளங்கும் இலக்கியங்களுள் ஐம்பெரும் காப்பியங்களான சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி ஆகியவை மிக முக்கியமானவை.

இந்த ஐந்து காப்பியங்களுள் வளையாபதியும் குண்டலகேசியும் இன்று நமக்கு முழுமையாகக் கிடைப்பதில்லை. இரண்டிலும் மிகச்சில பாடல்கள் மட்டுமே நமக்கு வாசிக்கக் கிடைக்கின்றன. கிடைக்கிற பாடல்களை வைத்து இந்தக் காப்பியங்கள் எதை, யாரைப் பற்றிப் பேசுகின்றன என்று அறுதியிடுவது சிரமம்.
ஆனால் சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, மணிமேகலை மூன்றும் நமக்கு முழுமையாகக் கிடைக்கின்றன.

கதை வளமும் காவியச் சுவையும் கவித்துவ எழிலும் மிக்க இந்த அற்புதமான இலக்கியங்களுக்கு நல்ல தமிழ் உரைகளும் இருக்கின்றன.

ஆனால் துரதிருஷ்டவசமாக இன்றைய வாசகர்கள் வாசித்து, பொருள் புரிந்து காப்பியத்தை ரசிக்கச் செய்யக்கூடிய விதத்தில் அவை இல்லை. பண்டித மொழி அல்லது பாடப்புத்தக மொழியில் எழுதப்பட்டிருக்கும் உரை நூல்களைத் தற்கால வாசகர்கள் அநேகமாகத் தொடுவதே இல்லை.

உரை நூல்களின் தன்மையால் இப்பேரிலக்கியங்கள் சமகால, எதிர்கால வாசகர்களுக்குக் கிட்டாமலேயே போய்விடக்கூடாது என்று கிழக்கு பதிப்பகம் தீவிரமாகக் கருதியதன் விளைவுதான் நாவல் வடிவில் காப்பியங்கள் என்னும் புதிய திட்டம்.

காப்பியங்களின் மூல ஆசிரியர்கள் எழுதியிருப்பதற்குமேல் இம்மியும் இந்நாவல் வடிவில் இருக்காது. அதே சமயம் தற்காலத் தமிழ் உரைநடையின் சகல சாத்தியங்களையும் பயன்படுத்தி, வாசிப்பை எளிமையான, ரசமான, விறுவிறுப்பான அனுபவமாக மாற்றும் ரசவாதத்தை இதில் எழுத்தாளர்கள் நிகழ்த்தியிருக்கிறார்கள்.

தற்கால நாவல் ஒன்றை வாசிப்பது போலவே நீங்கள் இக்காப்பியங்களை வாசிக்க இயலும். ரசிக்க இயலும். கதையின் தன்மையை, போக்கை, கட்டுக்கோப்பை உள்வாங்கிக்கொள்ள இயலும். இதனை முற்றிலும் ரசித்து வியந்தபிறகு நிச்சயமாக மூல நூலை வாசிக்கும் வேட்கை உங்களை ஆட்கொள்ளும் என்று உறுதியாக நம்புகிறோம்.

நமது புராதனமான இலக்கியங்களைக் கட்டிக்காப்பது மட்டுமல்ல; காலம் தோறும் தோன்றும் புதிய வாசகர்களுக்கு அவற்றைக் கடத்திச் செல்லவேண்டியதும் நமது கடமை என்று கிழக்கு நம்புகிறது. அதற்கான முதல் படியாக இம்முயற்சியை மேற்கொண்டிருக்கிறோம்.

சாகாவரம் பெற்ற காப்பியங்களை முதலில் நாவல் வடிவத்தில் சுவாரசியமாகப் படியுங்கள். பிறகு மூல நூலைத் தேடிச் செல்லுங்கள்.

தமிழ், என்றுமுள தமிழாக விளங்குதற்கு நாம் செய்யக்கூடிய எளிய கடமை இதுவே.

மேலும் விவரங்களுக்கு:

மணிமேகலை | சீவக சிந்தாமணி | சிலப்பதிகாரம்

10 comments

புத்தகப் பட்டியல்

யதி – புதிய நாவல்

அமேசான் ஆசிரியர் பக்கம்

முந்தையவை

தொகுப்பு

புதியவை

வகை

மின்னஞ்சலில் பெற