நூத்தியாறுப்புள்ளிநாலு

விடிந்து மணி ஏழானால் போதும். என் வீட்டு ரேடியோ தவறாமல் நூத்தியாறுப்புள்ளினாலு பாடத் தொடங்கிவிடுகிறது. மிர்ச்சி காலத்து சுசித்ரா இங்கே இப்போது மானிங் மீட்டர் போடுகிறார். பிட்டுச் செய்தி, நேயர் கருத்து, நெரிசல் தகவல், சினிமாப்பாட்டு என்று எல்லோரும் எப்போதும் கலக்கிற கலவையே எனினும் சுசித்ராவிடம் என்னவோ ஒன்று கூடுதலாக இருக்கிறது.

என் மனைவி மானிங் மீட்டர் ரசிகை. தவறியும் இன்னொரு பண்பலைக்கு அவள் போவதில்லை. இது பற்றிய விமரிசனத்தை என் மகள் அவ்வப்போது வெளிப்படுத்துவதுண்டு. ஆனாலும் பெண்ணாளும் பூமியில் என்னாலானது ஒரு மாநில ஆளுநர்போல் நீட்டுமிடத்தில் கையெழுத்திடுவது மட்டுமே.

அந்த வளவளா, ஆரம்பத்தில் கொஞ்சம் சலித்ததென்றாலும் விதிப்பயனாகப் பழகிவிட்டதில் பிடித்துப் போய்விட்டது. சுசித்ரா, பாடுவதைக் காட்டிலும் நன்றாகப் பேசுகிறார். ஸ்பாண்டேனிடியில் அவரை அடித்துக்கொள்ள இன்னொருவரில்லை. தவிரவும் காலை நேரங்களுக்கான அவரது பாடல் தேர்வுகளில் தென்படுகிற புத்திசாலித்தனம். வேலை பரபரவென்று நடப்பதற்கு உதவக்கூடிய இதமான மெட்டுகளிலான பாடல்களை மட்டுமே ஒலிபரப்புகிறார். தவறியும் காது கிழிக்கும் குத்துகளில்லை.

முன்பெல்லாம் அடிக்கடி அவர் பாடிய பாடல்களையே போடுவார். போக்கிரி வெளியான நாள்கள் நினைவிருக்கின்றன. என் காலைகள் எப்போதும் மான் புலியை வேட்டை ஆடுமிடத்தில் மட்டுமே விடியும். இப்போது பரவாயில்லை. அவர் பாட்டைவிட பேச்சு அருமை என்பது அவருக்கே புரிந்திருக்கிறது.

இன்று காலையும் மானிங் மீட்டரில் எப்போதும்போல் விடிந்தது. கோவை கமிஷனர் சைலேந்திர பாபுவுக்குக் கேள்வி அனுப்பச் சொல்லிக் கேட்டார் சுசித்ரா. ஒரு கொலையாளியை என்கவுண்டர் செய்ததன்மூலம் ஒரு நாளில் மாநில ஹீரோவாகியிருக்கிற போலீஸ்காரர். உண்மையிலேயே அச்சமாக இருக்கிறது. வன்முறைக்கு பதில் வன்முறையே சரியான தீர்ப்பென்று மக்களனைவரும் முடிவு செய்துவிட்டதைப் புரிந்துகொள்ள முடிகிறது. நீதிமன்ற நடவடிக்கைகளின் நிதானம் எல்லை கடந்துவிட்டதன் விபரீத விளைவு மட்டுமே இது.

சம்பவத்தை விவரிக்கும்போது சுசித்ராவின் குரலில்தான் என்ன குதூகலம். யதார்த்த வாழ்வுக்கும் மசாலா சினிமாவுக்குமான இடைவெளிகள் குறைந்துகொண்டிருக்கின்றன. அற்புதங்கள் அந்தந்தக் கணமே நிகழ்ந்துவிட வேண்டுமென்ற அவசரம் எங்கும் தெரிகிறது.

நல்லது. இதன் நீட்டல் விகாரமே ஆப்கன் தாலிபானியத் தீர்ப்புகள் என்பதை சுசித்ராவுக்கு எடுத்துச் சொல்ல  மிகவும் விரும்பி அவர் அளித்த எண்ணுக்கு ஏழெட்டு முறை முயற்சி செய்து பார்த்தேன்.

நீங்கள் தொடர்புகொண்ட வாடிக்கையாளர் தற்சமயம் பிசியாக இருக்கிறார். சிறிது நேரத்துக்குப் பின் டயல் செய்யவும்.

டயல் செய்வதற்கு பதில் இங்கு எழுதி வைக்கிறேன்.

18 comments

para

புதியவை

வகை

தொகுப்பு

முந்தையவை

பொதுவெளி

மின்னஞ்சலில் பெற

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.