நான் எப்படி எழுதுகிறேன்?

நிறைய எழுதுகிறீர்கள். எப்படி நேரம் கிடைக்கிறது என்று அநேகமாக தினசரி யாராவது ஒருவராவது கேட்டுவிடுகிறார். ஒரு பண்பலை வானொலி நிருபர் சற்றுமுன் தொலைபேசியில் அழைத்துச் சில விஷயங்கள் பேசிக்கொண்டிருந்தார். அவரும் கடைசியில் மறக்காமல் இதே கேள்வியைத்தான் கேட்டார். எனக்கு இந்த ‘நேரம் கிடைப்பது’ என்கிற விஷயம் உண்மையிலேயே புரியவில்லை. ராக்கெட் விட்டுக்கொண்டிருப்பவர்களெல்லாம் எண்டர் தட்டிக் கவிதை எழுத நேரமிருக்கும்போது நாமென்ன இருபத்தி நாலு மணிநேரமும் உழைத்துத் தேய்ந்துவிடுகிறோம்?

நான் எழுதுகிற விதத்தைச் சொல்லுகிறேன். இது நிச்சயமாக எல்லோருக்கும் சாத்தியமானதுதான். ஒருவாரம் பழகினால் எளிதாக வந்துவிடக்கூடிய பழக்கமும்கூட.

ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி முதல் தேதியிலிருந்து ஆரம்பிக்கிறேன். அந்த வருடம் நான் செய்ய நினைப்பது என்ன? செய்ய வேண்டியது என்ன? இரண்டுக்குமான இடைவெளி எவ்வளவு? இதை முதலில் யோசித்து எழுதிவைத்துவிடுகிறேன். என் விருப்பத்துக்கு எழுத நினைப்பவை. நிர்ப்பந்தங்களால் எழுத வேண்டி வருபவை. இதில் புத்தகம், பத்திரிகைத் தொடர், தொலைக்காட்சி, சினிமா பிரிவுகள். பிரித்து எழுதி வைத்துவிடவேண்டும். அதுதான் முதல் காரியம்.

பிறகு ஏப்ரல் வரை படிப்பது தவிர வேறு எதையும் செய்வதில்லை. அந்தாண்டு நான் எழுத நினைத்த / எழுத வேண்டியவற்றுக்கான ஆதார நூல்கள், மூல நூல்கள், உதவி நூல்கள் அனைத்தையும் தேடிச் சேகரிக்க இரண்டு மூன்று மாதங்கள் ஆகும். படிப்பது, குறிப்பெடுப்பது தவிர இம்மாதங்களில் வேறெதையும் செய்வதில்லை. வசன எழுத்துக்கு இம்மாதிரியான மெனக்கெடல்கள் தேவையில்லை என்பதால் அந்தப் பணிகளைச் செய்வதில் எனக்கு எப்போதும் பிரச்னை இருப்பதில்லை. [எது இருந்தாலும் இல்லாவிடாலும் தினமும் நான்கு மணிநேரம் எழுதுவது என்பது என் வழக்கம்.] ஆனால் திரைக்கதை அமைப்பில் பங்கு பெறக்கூடிய சூழல் உருவானால் கொஞ்சம் படிக்க வேண்டும். குறைந்தது தினமொரு படமாவது பார்க்கவேண்டும்.

மே மாதத்துக்குப் பிறகு மெல்ல எழுத ஆரம்பிக்கிறேன். புத்தகமாக அல்லாமல் மனத்துக்குத் தோன்றிய விதத்தில் முதலில் எழுதுவேன். நீளமான கட்டுரைகளாக அவை அமையும். ஒரு புத்தகத்தின் எந்தப் பகுதியில் அது சென்று பொருந்தும் என்றெல்லாம் யோசிக்கமாட்டேன். ஒரு நீள் கட்டுரை தன்னளவில் முழுமையாக இருக்கிறதா என்று மட்டும் பார்ப்பது வழக்கம். சில சமயம் இப்படி எழுதும் கட்டுரைகளைப் பத்திரிகைகளுக்கும் தருவேன். வருகிற வாசகர் கருத்துகளை கவனிப்பேன். ஒரு கட்டுரையில் நாம் வெளிப்படுத்த விரும்பிய விஷயம் சரியாகப் போய்ச் சேர்ந்திருக்கிறதா என்று பார்ப்பேன். சரியில்லை என்று தெரிந்தால் தூக்கிக் கடாசிவிட்டுத் திரும்ப எழுதுவேன். ஜூலை, ஆகஸ்ட் வரை இப்படியே போகும்.

செப்டெம்பரில்தான் பொதுவாகப் புத்தகமாகச் சிந்திக்க ஆரம்பிப்பது வழக்கம். அதற்குள் தேவையானவற்றைப் படித்து, தேவைப்படும் நபர்களை நேரில் சந்தித்துப் பேசி, ஒரு புத்தகத்துக்கான ஆயத்தங்களை முடித்திருப்பேன். நல்ல நாள் பார்த்து எழுத ஆரம்பித்துவிடுவேன்.

கதையல்லாத புத்தக எழுத்துக்கு முதல் தேவை, இடைவிடாத கவனம். எழுதும்போது ஒருநாள் இடைவெளி விட்டால்கூட மொழி மாறிவிடும். அதே போல, எழுதிக்கொண்டிருக்கும்போது இடையில் வேறு ஏதாவது வேலை பார்க்கவேண்டி வந்தாலும் மொழி சிதறிவிடும். எல்லாருக்கும் இப்படி ஆகுமா என்று தெரியாது. எனக்கு ஆகும். பல சமயம் நூற்றுக்கணக்கான பக்கங்களை எழுதி, எதிர்பாராவிதமாக இடைவெளி விழுந்து, மொழி மாறிப்போய், திரும்பவும் முதலில் இருந்து எழுதியிருக்கிறேன். இது ஒரு கெட்ட பழக்கம் என்று திருமணமான தினம் தொடங்கி என் மனைவி என்னைக் கடிந்து வந்திருக்கிறாள்.

இப்போதெல்லாம் நான் ரிஸ்க் எடுப்பதில்லை. எல்லா தலைபோகிற வேலைகளையும் மொத்தமாக முடித்துவிட்டு, அல்லது மொத்தமாகத் தள்ளிப் போட்டுவிட்டுத்தான் எழுத உட்கார்கிறேன்.

எழுதும்போது பிரவுசிங் கூடாது. சாட்டிங் கூடாது. ட்விட்டர் கூடாது. தொலைபேசி கூடாது. வீட்டுக்கு வரும் உறவினர் கூடாது. சினிமா கூடாது. டிவி கூடாது. எழுத்து நீங்கலாக மூன்று செயல்களுக்கு மட்டுமே அனுமதி. சாப்பிடலாம். ஓய்வெடுக்கலாம். இயற்கை உபாதைகளுக்குச் செவி சாய்க்கலாம். அவ்வளவுதான்.

இதெல்லாம் எழுதும் நேரத்தில் மட்டுமே. எழுதாத சமயத்தில் நீங்கள் என்ன செய்தாலும் பிரச்னையில்லை.

உதாரணமாக நான் இரவில் எழுதுகிறேன். அநேகமாகப் பத்து மணிக்கு ஆரம்பித்து, அதிகாலை ஐந்து வரை எழுதுவது என் வழக்கம். புத்தக எழுத்து அல்லாத பட்சத்தில் பத்திலிருந்து இரண்டு. இரண்டு மணிக்குப் படுத்து ஆறு அல்லது ஏழு மணிக்கு எழுந்து வழக்கமான பணிகளைப் பார்ப்பதில் எந்தக் கஷ்டமும் யாருக்கும் வராது. எட்டு மணிநேரத் தூக்கம் அவசியம் என்று யாராவது சொன்னால் அவர்கள் க்ஷேமமாக இருக்கட்டும். எழுத இஷ்டப்படுகிறவர்களுக்கு மட்டும்தான் இந்தக் குறிப்பு.

ஒரு புத்தகம் எழுதுவது என்பதை, ஒரு நாளைக்கு ஒரு பகுதி என்பதாகப் பிரித்துக்கொண்டு விடுவேன். அத்தியாயவாரியாக அல்ல. ஒரு புள்ளியில் இருந்து இன்னொரு புள்ளி வரை. அது அத்தியாய முடிவாக இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். பிரச்னையில்லை. அன்றைக்கு என்ன எழுதவேண்டும்? அதுதான். அவ்வளவுதான். பகல் பொழுதில் ஒரு வேலைக்கும் இன்னொரு வேலைக்கும் இடையே அதற்காகப் படித்து, தயார் செய்துகொண்டுவிடுவேன். எப்போதும் கையில் புத்தகங்கள் இருக்கும். ஐந்து நிமிடம் சேர்ந்தாற்போல் கிடைக்கும் என்றால் உடனடியாகத் திறந்துவிட வேண்டும். எனக்கு ஒரு பக்கம் படிக்க 25 வினாடிகள் போதும். ஆங்கிலம் என்றால் 35-40. மாலை ஆனபிறகு மனத்துக்குள்ளோ அல்லது உரக்கவோ, எழுதவிருப்பதை ஓரிருமுறை சொல்லிப்பார்ப்பதும் அவசியம். உச்சரிக்க சிரமமாக இருக்கக்கூடிய சொற்களை கவனமாகக் குறித்துக்கொண்டு எழுத்தில் அவற்றைத் தவிர்ப்பது முக்கியம்.

இப்படித் தயாரான பிறகு இரவு எழுத உட்கார்ந்தால், அநாவசியமாகப் புத்தகங்களைப் புரட்டியோ, இணையத்தில் தேடியோ நேரத்தை வீணாக்கவேண்டி இராது. எழுத உட்கார்ந்தால் சற்றும் தடையற்று எழுதுவது என் பாணி. சொற்களுக்காகவோ, வேறு எதற்காகவோ ஒருபோதும் காத்திருப்பதில்லை. என்னுடைய ரெஃபரன்ஸ் மெடீரியல்கள் அனைத்தும் மின்விசிறியில் ஒளித்துவைக்கப்பட்டிருக்கின்றன என்று மருதன் சொல்லுவான். ஏகாந்தமாக மேலே பார்த்துக்கொண்டு டைப்படித்துக்கொண்டே போய்விடுவேன். அதற்கு அந்த முன் தயாரிப்பு அவசியம்.

உங்களால் ஒரு மணி நேரத்தில் ஐந்நூறு சொற்கள் எழுத இயலுமென்றால் தினசரி நான்கு மணி நேரம் எழுதினால் இரண்டாயிரம் சொற்கள் எழுதலாம். இது தினசரிப் பழக்கமானால் வருஷத்துக்கு 730000 சொற்கள். நான் அவ்வளவுகூட எழுதுவதில்லை. வருடத்துக்கு இரண்டு முதல் இரண்டரை லட்சம் சொற்கள் மட்டுமே எழுதுகிறேன். தினமும் எழுதி முடித்ததும் ஒரு மணிநேரமாவது ஏதாவது படம் பார்த்துவிடுவேன். புத்தகத்தைப் போலவே திரைப்படங்களையும் இரண்டு மூன்று நாள்களில் பார்த்து முடிக்கலாம். ஒன்றும் தப்பில்லை.

சமீபத்தில் முடித்த ஆர்.எஸ்.எஸ் பற்றிய புத்தகத்தை ஏழு தினங்களில் எழுதினேன். ஒரு மாத காலம் அதற்காகப் படித்துக்கொண்டிருந்ததை விட்டுவிடலாம். எழுத எடுத்துக்கொண்ட நாள்கள் வெறும் ஏழு மட்டுமே. இதிலும் எழுதிய நேரம் என்று பார்த்தால், ஒரு நாளைக்குப் பத்து மணி நேரம் வீதம் 70 மணி நேரங்கள் மட்டுமே. நாள் கணக்கில் கூட்டினால் வெறும் மூன்று தினங்கள்.

காலை பத்து மணிமுதல் ஒரு மணிவரை. மீண்டும் இரவு பத்து மணி முதல் அதிகாலை 5 மணி வரை. இடைப்பட்ட நேரத்தில் ஜனநாயகக் கடமைகளை ஆற்றினால் போதாது? யதேஷ்டம்.

எனக்கென்ன தோன்றுகிறது என்றால், எழுதுவது என்பது ஒரு மனப்பயிற்சி. அதைச் செய்து பார்ப்பதைத் தள்ளிப்போடத்தான் நேரத்தைக் குறையாகச் சொல்லிவிடுகிறோம். அபாரமான எழுத்துத் திறமையும், அதைவிட அபாரமான சோம்பேறித்தனமும் படைத்த என் இனிய இணைய நண்பர்கள் சிலர் இதைப் படித்துவிட்டு, வருகிற வருடத்தில் இருந்தாவது இதை முயற்சி செய்து பார்க்கலாம். ஐந்நூறு கூட வேண்டாம். ஒரு நாளைக்கு முன்னூறு சொற்கள் என்ற இலக்கு வைத்து தினமும் தவறாமல் எழுத ஆரம்பித்தாலே போதும். ஒரு புத்தகத்தை எழுதி முடிக்கும்போது கிடைக்கும் பேரானந்தத்துக்கு நிகராக இன்னொன்று கிடையாது.

எழுத்தின் ருசியறிந்தவர்களுக்கு இது நிச்சயம் புரியும்.

33 comments

புத்தகப் பட்டியல்

யதி – புதிய நாவல்

அமேசான் ஆசிரியர் பக்கம்

முந்தையவை

தொகுப்பு

புதியவை

வகை

மின்னஞ்சலில் பெற