உருவி எடுத்த கதை

இசகுபிசகாக புத்தி கெட்டிருந்த ஒரு சமயத்தில் ஒரு பிரம்மாண்டமான நாவலுக்காகக் கொஞ்சம் மெனக்கெட்டேன். 1909ம் ஆண்டு தொடங்கி 2000வது ஆண்டு வரை நீள்கிற மாதிரி கதை. அந்தக் கதையின் ஹீரோ, கதைப்படி ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை பிறக்கவேண்டும். ஆனால் ஒவ்வொரு முறையும் வேறு வேறு வயதுகளில்தான் பிறப்பான். உதாரணமாக, அவனது முதல் பிறவியில், பிறக்கும்போதே அவனுக்குப் பதினெட்டு வயது. அடுத்தப் பிறவியைத் தனது ஐந்தாவது வயதில் ஆரம்பிப்பான். மூன்றாவது பிறவியில் எழுபது வயதுக் கிழவராகப் பிறப்பான். [ஒவ்வொரு முறையும் அவனது தாய் தந்தையர் வயது மட்டும் மாறாது. அவர்கள் 30-35க்குள்தான் இருப்பார்கள்.] இப்படியாக, ஒரே மனிதனின் சுமார் பதினைந்துக்கும் மேற்பட்ட பிறவிகளின் மூலம், தமிழகத்தில் திராவிட இயக்கம் தோன்றி, வளர்ந்து, பாதித்த வரலாறை எழுதத் திட்டமிட்டிருந்தேன்.

இதற்காக திராவிட இயக்கங்களின் வரலாறைப் படிக்கவும் ஆறேழு மாதங்கள் செலவிட்டேன். பெரியார், அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர். போன்றவர்களின் வாழ்க்கை வரலாறுகள், தமிழ்நாடு சட்டப்பேரவை நடவடிக்கைகள் பற்றிய ஆவணங்கள், தமிழ் சினிமா வரலாறு, டி.எம். பார்த்தசாரதி, முரசொலி மாறன் போன்றோரின் புத்தகங்கள் என்று அந்தக் [2005-06] காலக்கட்டத்தில் நான் வாசித்த பெரும்பாலான புத்தகங்கள் இது சம்பந்தமாகவே இருந்தன.

ஆனால், என்ன காரணம் என்று தெரியாமல் சட்டென்று ஒருநாள் அந்த நாவலை எழுதும் எண்ணம் என்னை விட்டுப் போய்விட்டது. ரஃப்பாக எழுதிப் பார்த்த பக்கங்களில், கதாபாத்திரங்கள் எதுவும் தன் போக்கில் சிந்திக்காமல், என்னுடைய சொந்தக் கருத்தை மட்டுமே அவை உள்வாங்கிப் பேசுவதுபோல் பட்டது ஒரு காரணம் என்று நினைக்கிறேன். சரியாக நினைவில்லை. ஆனால் ஏனோ வேலை தடைப்பட்டுவிட்டது. தூக்கிப் போட்டுவிட்டு அடுத்த வேலைக்குப் போய்விட்டேன்.

பிறகு சில காலம் கழித்து திடீரென்று ஒரு சந்தர்ப்பத்தில் கல்கியில் ஒரு தொடர்கதை கேட்டார்கள். அதிக அவகாசமில்லாமல் உடனே தொடங்கும்படி இருந்தது. இந்த நாவலில் வரும் ஒரு கிளைப்பாத்திரத்தின் கதையை மட்டும் அப்படியே உருவியெடுத்து எழுதிக்கொடுத்தேன். சமகால அரசியல் நிகழ்வுகளின் சாயல் இருந்தது காரணமா, கல்கி வாசகர்களுக்கு அதிகம் பரிச்சயமிருக்க முடியாத சென்னைத் தமிழ் காரணமா, அரசியல் என்னும் பேருலகின் வெளிவாசல் கதவைத் திறப்பதே எத்தனை சிரமம் என்னும் உண்மை புரிந்தது காரணமா தெரியவில்லை. இதுநாள் வரை நான் கல்கியில் எழுதிய தொடர்கதைகளிலேயே அதிகம் வாசிக்கப்பட்டு, அதிகம் பாராட்டப்பட்டது இந்தக் ‘கொசு’தான்.

ஆனாலும் உடனே புத்தகமாக்கத் தயக்கமாக இருந்தது. கொஞ்சம் மேற்கொண்டு வேலை செய்யலாம் என்று தோன்றியது. நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஒவ்வொரு அத்தியாயமாக எடுத்து வைத்துக்கொண்டு திருத்தத் தொடங்கினேன். இப்போதுதான் ஒரு மாதிரி திருப்தி ஏற்பட்டு, நூல் வடிவம் பெற்றிருக்கிறது. கொசு, புத்தகக் கண்காட்சிக்கு வெளிவருகிறது.

நிற்க. நான் முதலில் திட்டமிட்ட அந்த மகாப்பெரிய நாவலை இனியும் எழுதுவேனா என்று சொல்ல முடியாது. அநேகமாக மாட்டேன் என்றுதான் நினைக்கிறேன். ஒரு நாவலுக்கு உழைக்கக்கூடிய மனநிலை என்னை விட்டுப் போய்விட்டது.

8 comments

புத்தகப் பட்டியல்

யதி – புதிய நாவல்

அமேசான் ஆசிரியர் பக்கம்

முந்தையவை

தொகுப்பு

புதியவை

வகை

மின்னஞ்சலில் பெற