கொடியில் ஏந்திய குழந்தை

இந்த வருடம் என்னை செமத்தியாக பெண்டு நிமிர்த்திய புத்தகம், ஆர். முத்துக்குமாரின் திராவிட இயக்க வரலாறு. பொதுவாக எத்தனை பெரிய புத்தகமாக இருந்தாலும் எடிட்டிங்கில் என்னிடம் இரண்டு மூன்று நாள்களுக்குமேல் நிற்காது. இந்தப் புத்தகம் கிட்டத்தட்ட ஒரு மாத காலத்துக்கு என்னை இழுத்துக்கொண்டுவிட, வழக்கமான காரியங்கள் பலவற்றை இதனால் நிறுத்திவைக்க வேண்டியதானது. [இதற்கு முன்னால் அதிகநாள் எடிட் செய்த புத்தகம் அநீயின் ஹிந்துத்துவம் – ஓர் எளிய அறிமுகம். அதன் வத்திக்குச்சி சைஸுக்குப் பதினைந்து நாள் எடிட்டிங் என்பது அராஜகத்தின் உச்சம். ஆனால் அரவிந்தன் மாதிரி ஒரு அதிபயங்கர, ஹிந்துத்துவ அறிவுஜீவியின் எழுத்தைக் கண்ணில் க்ரூட் ஆயில் விட்டுக்கொண்டுதான் படித்தாக வேண்டியிருக்கிறது.]

ஏற்கெனவே வேறொரு காரணத்துக்காக நான் திராவிட இயக்க வரலாறு தொடர்பான புத்தகங்களைக் கொஞ்சம்போல் வாசித்திருக்கிறேன். கொஞ்சம் அடிப்படை தெரியும். தனிப்பட்ட விருப்பத்தின் அடிப்படையில் நெஞ்சுக்கு நீதி பாகங்கள் ஒன்றிரண்டையும் படித்திருக்கிறேன். ஆனால் என்னுடைய தலைமுறைக்குப் பிறகு அந்த இயக்கத்தில் நிகழ்ந்த சம்பவங்கள், பிளவுகள், அதன் அடிப்படைக் காரணங்கள் பற்றிய எழுத்துப் பதிவுகள் அதிகமில்லை என்று நினைக்கிறேன். [நெஞ்சுக்கு நீதியின் அடுத்த பாகங்களில் ஒருவேளை இருக்கலாம். நான் வாசிக்கவில்லை.] டி.எம். பார்த்தசாரதி, முரசொலி மாறனுடைய புத்தகங்களெல்லாம் என் அப்பா காலத்துக் கதையோடு முடிந்துவிடுகின்றன. இந்தப் புத்தகம்தான் முதல் முதலில் முழுமையான நூறாண்டு சரித்திரத்தைப் பேசுகிறது [1909 – 2009] என்ற வகையில் எனக்கு இது முக்கியமானதாகிறது.

ஒரு பத்திரிகையாளனாக முத்துக்குமாரின் நேர்மைமீது எனக்குச் சற்றும் சந்தேகம் கிடையாது என்றாலும் அவனுடைய குடும்பப் பின்னணி கொஞ்சம் கழகப் பின்னணி கொண்டது. அவன் பிறந்தபோது, குழந்தையை ஏந்துவதற்கு ஓடிச் சென்று அவனது தந்தை ஒரு கட்சிக்கொடியை எங்கிருந்தோ கொண்டு வந்த வரலாறு, கிழக்கு அலுவலகத்தில் ஒரு நாடோடிக் கதையாகிவிட்ட விஷயம். இப்படியொரு பாரம்பரியப் பெருமை கொண்டவன், நடுநிலையுடன் திராவிட இயக்க வரலாறு எழுத இயலுமா என்ற கேள்வி எங்கள் அலுவலகத்தில் பலருக்கு இருந்தது. ஆனால், ஓரிடத்தில்கூட சார்பெடுக்காமல், உணர்ச்சிவசப்படாமல் ஆயிரக்கணக்கான பக்கங்கள் கொண்ட இந்த பெரும் வரலாற்றை அவன் நிதானம் தவறாமல் எழுதி முடித்திருக்கிறான். முந்தைய ஆசிரியர்கள் எடுத்துக் காட்டியிராத பல முக்கிய ஆவணங்களை, சம்பவங்களை, மிகப் பொருத்தமான இடங்களில் கவனமாகச் சேர்த்திருக்கிறான். கலைஞரைக் கூட, கலைஞர் என்று இந்நூல் குறிப்பிடுகிற இடம் மிகக் கடைசியில்தான் வருகிறது. பெரியார், வெறும் ராமசாமியாக இருந்து, நாயக்கராகி, ஈ.வெ.ராவாகி, பெரியாராகி, தந்தை பெரியாரானதை ஒவ்வொரு கட்டமாக கவனித்துப் புரிந்துகொள்வதன் ஊடாகவே அவர் வளர்த்த இயக்கத்தின் பரிணாம வளர்ச்சியை விளங்கிக்கொள்ள இயலும்.

பிராமணர் அல்லாதோர் சங்கமாகத் தொடங்கி, ஜஸ்டிஸ் கட்சி வழியே திராவிடர் கழகமாகி, பின்னர் பெரியாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணத்தால் அண்ணா பிரிந்து திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கியது, பின்னர் அதில் உருவான சிக்கல்கள், பிளவுகள், கலைஞர்-எம்.ஜி.ஆர். காலம், எம்.ஜி.ஆருக்குப் பிந்தைய அ.தி.மு.கவின் உட்கட்சிப் பூசல்கள், ஜானகி காலம், ஜெயலலிதா காலம், தி.மு.கவிலிருந்து வைகோ பிரிந்தது, கலைஞர்-ஜெயலலிதா காலம் என்று இந்நூலில் ஒரு முழுமை இருக்கிறது. திராவிட நாடு கோரிக்கை, இந்தி எதிர்ப்பு, இட ஒதுக்கீடு உள்ளிட்ட அனைத்து முக்கியத் தருணங்கள் குறித்தும் விரிவான அலசல் இருக்கிறது. சர்க்காரியா முதல் சமகால ஊழல்கள் வரையிலான ஒரு பாரம்பரியத்தின் வரலாறு இருக்கிறது. அனைத்துவித அவலங்களையும் மீறித் தமிழக மக்கள் எதனால் தொடர்ந்து திராவிட இயக்கங்களுக்கு ஆதரவளித்துக்கொண்டிருக்கிறார்கள் என்னும் வினாவுக்கான விடை, பல நீண்ட விசாரணைகளின்மூலம் கிடைக்கிறது.

இந்தப் பெரிய வரலாறில் என் ஆர்வத்தை மிகவும் கவர்ந்த விஷயம் ஒன்று உண்டு. அது, சில துணைப் பாத்திரங்களின் வார்ப்பு. பாரதிதாசன், நெடுஞ்செழியன், மதியழகன், ஈ.வெ.கி. சம்பத், எஸ்.டி.எஸ் போன்ற சில பெயர்கள் திராவிட இயக்க வரலாறில் எப்போதும் இடம்பெறுபவை. ஆனால் பெயர்களாக அல்லாமல் பாத்திரங்களாக இவர்கள் பெரிய அளவில் முதன்மையுற்றதில்லை.

முத்துக்குமாரின் புத்தகத்தில் இந்த இரண்டாம் வரிசைத் தலைவர்களின் உடல், மனம், ஆன்மா அனைத்தும் சுருக்கமாக – அதே சமயம் துல்லியமாக வெளிப்பட்டுவிடுகிறது.

பாரதிதாசனுக்கு நிதி கொடுக்கவேண்டும் என்று, பெரியாரையே எதிர்த்துக்கொண்டு அண்ணா முனைந்து வசூலித்து விழா எடுத்துச் சிறப்பிக்கிறார். அதே பாரதிதாசன், அதே அண்ணாவுக்கு எதிராகத் திரும்பி நின்று கோல் போடுகிற கட்டங்கள் மிகப்பெரிய நகைமுரண். சம்பத், மதியழகன் போன்றவர்களால் ஏன் கட்சியில் முன்னிலைக்கு வர முடியவில்லை என்ற கேள்விக்குப் பலரும் பல்வேறு விதமான பதில் சொல்லக்கூடும். இந்தப் புத்தகம், தலைமைக்கு வந்தவர்களை நுணுக்கமாக அணுகி அலசி, எந்தப் பண்பு அவர்களை அந்த இடத்துக்குக் கொண்டுவந்து நிறுத்தியது என்பதை மிக அநாயாசமாகச் சுட்டிக்காட்டிவிடுகிறது.

திராவிட இயக்க வரலாறு என்பது கிட்டத்தட்ட தமிழகத்தின் சமகால அரசியல் வரலாறு. இதை இந்தளவு நடுநிலைமையுடனும் எளிமையாகவும் சுவாரசியமாகவும் விளக்க இன்னொரு புத்தகம் இப்போதைக்குக் கிடையாது.

நேற்று இந்நூலின் இறுதிக்கட்டப் பணிகள் அனைத்தும் முடிவடைந்துவிட்டன. புத்தகக் கண்காட்சிக்குக் கண்டிப்பாக வந்துவிடும். [இரண்டு பாகங்கள். தலா 200 ரூபாய் விலை.]

15 comments

புத்தகப் பட்டியல்

யதி – புதிய நாவல்

அமேசான் ஆசிரியர் பக்கம்

முந்தையவை

தொகுப்பு

புதியவை

வகை

மின்னஞ்சலில் பெற