முதல் இரவு, முதல் குழந்தை மற்றும்…

விருதகிரியைவிடக் கொடுமையான ஒரு விஷயம் உலகில் உண்டு. புத்தம்புதிதாக ஒருத்தரைக் கண்டுபிடித்து, ஒரு சப்ஜெக்ட் தீர்மானித்து, அவரை ஓர் உருப்படியான புத்தகம் எழுத வைப்பது. ஒவ்வொரு வருடமும் குறைந்தது பதினைந்து முதல் இருபது பேரிடமாவது நான் இந்த விளையாட்டை விளையாடுகிறேன். என்னைத் தோற்கடிப்பதில் அளப்பரிய ஆர்வம் கொண்ட நல்லன்பர்கள், சொல்லி சொல்லி அழவைத்து பதில் விளையாட்டு விளையாடுவார்கள். நானும் நிறுத்துவதில்லை, அவர்களும் விடுவதில்லை. இது ஒரு கிழக்கு காஃபி டாஃபி.

ஆனால் அபூர்வமாகச் சிலர் கற்பூரமாக அமைந்துவிடுவதுண்டு. சொல்லித்தரவே வேண்டாம். பெரிய முயற்சிகள் வேண்டாம். கொஞ்சம் அங்கே இங்கே தட்டிச் சரிசெய்தால் போதும், நானொரு சிற்பம் என்று எழுந்து நிற்கும் மாமல்லைக் கலைக்கற்கள்.

இந்த வருடம் கிழக்கில் அறிமுகமாகியிருக்கும் அப்படியொரு நல்ல எழுத்தாளர் பாலா ஜெயராமன். பாலாவை எனக்குப் பரிச்சயம் கிடையாது. அவர் ஒரு தமிழ் விக்கிபீடியாக்காரர் என்னும் அளவில் கொஞ்சம் பயம் மட்டும் இருந்தது. எனக்குத் தமிழ் விக்கிபீடியாவின் தமிழுக்கும் ஜெர்மானிய, இசுப்பானிய, இத்தாலிய மொழிகளுக்கும் பெரிய வித்தியாசம் கிடையாது என்றொரு அபிப்பிராயம் உண்டு. உண்மையில், இந்த மனிதரின் தமிழ் எப்படி இருக்கப்போகிறதோ என்கிற அச்சத்துடன்தான் அவருடைய முதல் புத்தகமான கடல் கொள்ளையர் வரலாறை ஆரம்பித்தேன். ஆனால் அவர் புத்தகம் எழுத ஆரம்பிப்பதற்கு முன்னால் அனுப்பிய அத்தியாயச் சுருக்க அட்டவணையிலேயே தெரிந்துவிட்டது. கலப்படமில்லாத, சுத்தமான, அதே சமயம் வாசிப்பு சுவாரசியத்துக்கு ஊறு செய்யாத மொழி அவருடையது. தவிரவும் நிறையப் படிக்கிற மனிதர். எழுத்தைக் கூர்மையாக்க, படிப்பினைப் போல் சிறந்த உபாயம் வேறில்லை.

பாலாவின் கடல் கொள்ளையர் வரலாறு, இந்த வருடம் நான் ரசித்த புத்தகங்களுள் ஒன்றாகிப் போனது. புதிய களம். புதிய தகவல்கள். சரித்திரமும் சாகசமும் கைகோக்கும் வரலாறு. எடுத்தால் வைக்கமுடியாத விறுவிறுப்புடன் ஓடுகிற புஸ்தகம். இதைப் படித்த சூட்டில்தான் அவரை உடனே தமிழ் பேப்பரில் வில்லாதிவில்லன் எழுதச் சொன்னேன். நல்ல நான் – ஃபிக்‌ஷன் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும்.

பாலாவின் ‘அணுகுண்டின் அரசியல் வரலாறு’, புத்தகக் கண்காட்சிக்கு வரப்போகிற அவருடைய இரண்டாவது புத்தகம். அடுத்த வருடம் நான் மிக அதிகம் எதிர்பார்க்கிற எழுத்தாளர்களுள் பாலா முக்கியமானவராகிறார்.

இரண்டாவது நபர், கே.ஜி. ஜவார்லால். இப்படி ஒரு எழுத்தாளர் இணையத்தில் இருக்கிறார், படித்துப் பாருங்கள் என்று எனக்கு இவரை அறிமுகப்படுத்தியது சொக்கன். ஓசூரில் உத்தியோகம் பார்த்துக்கொண்டிருந்த ஜவார்லாலை நான் அழைத்த நேரம், அவர் வி.ஆர்.எஸ். வாங்கிக்கொண்டு சென்னைக்கு இடம் பெயரத் தயாராகிக்கொண்டிருந்தார். எழுதுவதில் அவருக்கு இருந்த கட்டுக்கடங்காத ஆர்வம்தான் அவருடைய வி.ஆர்.எஸ்ஸுக்குக் காரணம் என்று தெரிந்தது. இசையமைப்பாளராகவேண்டும் என்று கூட ஓர் உபரி ஆர்வம் அவருக்கு இருந்தது. முதல் சந்திப்பில் அவர் இசையமைத்த பாட்டு ஒன்றை எனக்குப் போட்டுக்காட்டி எப்படி இருக்கிறது என்று கேட்டார். ‘நன்றாக எழுதுகிறீர்கள், கொஞ்சம் மெனக்கெட்டால் ரொம்ப நல்ல எழுத்தாளராக உங்களால் வரமுடியும்’ என்று மிக நேரடியாக பதில் சொன்னேன்.

புரிந்துகொண்டுவிட்டார் என்று நினைக்கிறேன். அவருடைய ஜென் கதைகள் புத்தகமும் திருக்குறள் வழியே உருப்படு புத்தகமும் எழுதப்பட்ட கால அவகாசம் அறிந்தால் வாய் பிளப்பீர்கள். வேகமாக எழுதுவது, தரமான எழுத்துக்கு எந்த இடைஞ்சலும் தராது என்பதற்கு சமீபத்திய உதாரணம் ஜவார்லால். சரளமான, அழகான மொழி. சொல்ல வரும் விஷயத்தைச் சுற்றி வளைக்காமல் நேரடியாகச் சொல்லும் பாங்கு. முந்திரித் தூவலாக முறுவல் வரச்செய்யும் நகைச்சுவை. ஜவார்லாலின் ‘உருப்படு’, திருக்குறளை ஒரு சுயமுன்னேற்ற நூலாக மறு அறிமுகம் செய்யும் புத்தகம். தமிழின் முதல் சோம. வள்ளியப்பன் திருவள்ளுவர்தான் என்று சொல்கிறது இது. படிப்பதற்கு ரொம்ப ஜாலியாக இருந்தது.

அடுத்தவர் கலையரசன். எனக்கு இவருடன் பரிச்சயம் கிடையாது. படித்ததும் கிடையாது. வலையுலகில் இவருடைய எழுத்தைப் படித்து, புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களின் வாழ்க்கை நிலை குறித்த ஒரு புத்தகத்துக்காகப் பேசிக்கொண்டிருந்தது, மருதன். அந்தப் புத்தகம் எழுதப்பட்டுக்கொண்டிருந்தபோதுகூட எனக்குத் தெரியாது. எடிட்டிங்கில் இருந்ததையும் அறியேன். முழுக்க முடித்த பிறகு மருதன் எனக்கு அகதி வாழ்க்கை நூலின் பிடிஎஃப்பை அனுப்பிப் பார்க்கச் சொன்னான்.

இதுவரை சரியாகப் பேசப்படாத ஒரு வாழ்வின் சரியான, நேர்த்தியான, உண்மையான பதிவாக அந்த நூல் இருந்தது. கலையரசன், தமது சுய அனுபவங்களின் அடிப்படையில் எழுதியிருப்பது இந்நூலின் மிகப்பெரிய பலம். கலையரசன் இன்னொரு புத்தகமும் எழுதியிருக்கிறார் என்பது இதை எழுதிக்கொண்டிருக்கும்போதுதான் எனக்குத் தெரியும்.

அப்புறம், சஞ்சீவியின் பேய் என்சைக்ளோபீடியா. நீங்கள் பழைய பாக்யா வாசகராக இருப்பீர்களானால் சஞ்சீவியைத் தெரிந்திருக்கும். ஒரு நவீன பி.டி. சாமியாக அவருக்கு அங்கே ஒரு ஸ்பெஷல் வாசகர் வட்டம் இருந்தது. இவரையும் இந்தாண்டு, கிழக்குக்கு எழுத அழைத்து வந்தது மருதன் தான். அவரது ஹோம் கிரவுண்டான பேய் குறித்தே எழுத வைக்க முடிவு செய்தோம். ஆனால் வெறும் பேய்க் கதைகளாக அல்லாமல், பேய்களைக் குறித்த ஒரு குட்டி என்சைக்ளோபீடியா மாதிரி செய்யவேண்டும் என்று தீர்மானித்தோம். கதைகள், நம்பிக்கைகள், அறிவியல், உளவியல் நான்கும் கலந்த இந்த நூல், கிழக்கின் பாணிக்குச் சற்றே புதிது.

இந்தப் புத்தகத்தை எடிட் செய்யச் சொல்லி முகிலிடம் கொடுத்திருந்தபோது, அப்போதுதான் அவனுக்குத் திருமணமாகியிருந்தது. இப்படியெல்லாம் ஒரு சிறுவனை இம்சிக்கலாமா என்று அந்தராத்மா குடைச்சல் கொடுக்காமல் இல்லை. ஆனாலும் அந்தப் புத்தகத்துக்கு வேண்டிய அழகை அவனால்தான் கொடுக்க முடியும் என்று நம்பினேன். இதுவும் கண்காட்சிக்கு வருகிறது. படித்துவிட்டுச் சொல்லுங்கள்.

கட்டக்கடைசியாக என் ஜிகிரி தோஸ்துகள். வலைப்பதிவிலும் ட்விட்டரிலும் பல்லாண்டு காலமாக  மொக்கை போட்டுக்கொண்டிருந்த பெனாத்தலை ஒரு வழியாக இந்த வருடம் ராம்சுரேஷ் ஆக்கி, சீவக சிந்தாமணியை நாவல் வடிவில் எழுத வைத்தேன். கையோடு பிரபல வாரப் பத்திரிகைகளில் சிறுகதைகள், உலகப்பிரசித்தி பெற்ற 😉 தமிழ் பேப்பரில் ஒரு தொடர்கதை, சூடு குறையாமல் இன்னொரு சூப்பர் நாவல் [கூடிய சீக்கிரம் வரப்போகிறது.] என்று மனிதர் பொளந்து கட்டிக்கொண்டிருக்கிறார். சீவக சிந்தாமணி மாதிரி பல சிடுக்குகள் கொண்ட ஒரு மகாப்பெரிய காவியத்தை மாசநாவல் வாசிக்கிற மாதிரி வாசிக்க வைக்க முடியும் என்பதே நம்புவதற்குச் சற்று கஷ்டமான விஷயம்.  [முன்னர் குறிப்பிட்ட ஜவார்லால் இந்த வரிசையில்  இந்த வருடம் எழுதிய இன்னொரு புத்தகம், நாவல் வடிவில் சிலப்பதிகாரம்.]

சுரேஷின் பலம், அவருடைய வெளிப்பாட்டு முறையும் பிரச்னையில்லாத தமிழும். வெகுஜன வாசிப்புத் தளத்தில் புனைவின்மீது ஆர்வம் செலுத்துவோரின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துகொண்டிருக்கும்போது, சுரேஷ் போன்ற புதிய ஸ்டைலிஸ்டுகளால் மட்டுமே இந்த சேதாரத்தின் சதவீதத்தைக் குறைக்க முடியும் என்பது என் நம்பிக்கை.

கொத்தனாரின் ஈசியா எழுதலாம் வெண்பா பற்றி நான் ஒன்றும் சொல்லப்போவதில்லை. ஒரு தோழமை மிக்க, மடிசஞ்சித்தனம் இல்லாத, நவீன தமிழ் வாத்தியார் கிடைத்ததற்குத் தமிழ் சமூகம் அவருக்குக் கிடா வெட்டி சாராயம் படைத்து நன்றி சொல்லவேண்டும். ‘இந்த வருஷம் உங்களுக்கு மூணு ஸ்டாலாமே? பத்துமாய்யா? என் புக்வேற இருக்குது?’ என்று இரண்டு நாள் முன்பு கேட்டார். இந்த நக்கலும் நகைச்சுவை உணர்வும் தமிழ் வாத்தியார் உலகம் அறியாதவை.

எழுதுவது சுலபமான விஷயம். நன்றாக எழுதுவது கொஞ்சம் கஷ்டம். ஒரு புத்தகமாக உருவம் கொடுத்து உட்கார்ந்து முழு மூச்சாக எழுதி முடிப்பது பேஜார். இதனால்தான் ஆர்வமுடன் ஆரம்பிக்கிற பலபேர் பாதி வழியில் காணாமல் போய்விடுகிறார்கள். நான் நடத்தும் பயிற்சி வகுப்புகளுக்கு ஆர்வமுடன் வருகிறவர்களுள் ஒருவர்கூட இன்னும் நான் விரும்பக்கூடிய ஒரு புத்தகத்தை எழுதி முடிக்கவில்லை. [சென்ற வருடம் வகுப்புக்கு வந்தவர்களுள் ஒருவர் மட்டும் தமது முதல் புத்தகத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டார். ஆனால் வெளியாகக் கொஞ்சம் நாளாகும். வரும்போது, அவரைப் பற்றியும் அவருடைய புத்தகத்தைப் பற்றியும் எழுதுகிறேன்.]

புத்தகம் எழுதத் திறமை மட்டும் போதாது. உழைப்பு அவசியம். மேலே சொன்ன திறமையும் உழைப்பும் மிக்க புதிய எழுத்தாளர்களுக்கு உங்களுடைய வாழ்த்துகளைச் சொல்லுங்கள். முதல் இரவு, முதல் குழந்தை மாதிரிதான், முதல் புத்தகமும், அது காணும் முதல் புத்தகக் கண்காட்சியும்கூட.

16 comments

புத்தகப் பட்டியல்

யதி – புதிய நாவல்

அமேசான் ஆசிரியர் பக்கம்

முந்தையவை

தொகுப்பு

புதியவை

வகை

மின்னஞ்சலில் பெற