அநீ

நிகழ்தமிழின் முக்கியமான சிந்தனையாளர்களுள் ஒருவர், அரவிந்தன் நீலகண்டன். நமது அதிர்ஷ்டம், அவர் இணையத்தில் எழுதுவது. துரதிருஷ்டம், அவரை ஒரு ஹிந்துத்துவவாதியாக மட்டுமே பார்த்து, என்ன எழுதினாலும் திட்டித் தீர்க்க ஒரு பெருங்குழு இருப்பது.

பல சமயம் எனக்கு, இவர்களெல்லாம் படித்துவிட்டுத்தான் திட்டுகிறார்களா என்று சந்தேகமே வரும். ஏனெனில், போகிற போக்கில் பொத்தாம்பொதுவாக அரவிந்தன் எதுவும் எழுதுவதில்லை. தான் எழுதுகிற அனைத்துக்கும் அவர் தரப்புக்கான ஆதாரங்களைச் சமர்ப்பிக்காமல் ஒரு கட்டுரையையும் அவர் முடிக்கமாட்டார்.

அவர் எழுதுவதையெல்லாம் நாம் ஒப்புக்கொள்ள வேண்டும் என்பதில்லை. ஏற்கவேண்டும் என்பதில்லை. கடைப்பிடிக்க-பின்பற்ற வேண்டுமென்பதில்லை. மறுக்கலாம், விமரிசிக்கலாம், கிழித்துக் குப்பையில் போடலாம். என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஜனநாயக தேசத்தில் இதற்கெல்லாம் ஒரு தடையும் கிடையாது.

ஆனால் தன் தரப்புக்கு அவர் வைக்கும் ஆதாரங்களைப் போல, எதிர்ப்பவர்களும் காட்டவேண்டுமல்லவா? எனக்குத் தெரிந்து, இன்றுவரை அரவிந்தன் எழுதும் அனைத்தையும் எதிர்க்கிற அனைவரும், தம் காரணங்களுக்கான நியாயங்களை, அதற்கான ஆதாரத் தரவுகளை முன்வைத்து ஒருமுறையும் பேசியதில்லை. குறைந்தபட்சம் அரவிந்தன் தொடர்ந்து எழுதும் தமிழ் பேப்பரில்.

அரவிந்தன் எழுதக்கூடாது. அவர் எழுதியதை நீ வெளியிடக்கூடாது. அப்படிச் செய்தால் நீ ஒரு ஹிந்துத்துவவாதி. உன் பத்திரிகை இன்னொரு தமிழ் ஹிந்து. தீர்ந்தது விஷயம்.

தமிழ் பேப்பரில் அரவிந்தனின் ஒவ்வொரு கட்டுரை வெளியாகும் நாளும் எனக்குத் திருநாள்தான். கட்டுரைக்கு அடியிலேயே வருகிற கமெண்டுகள் பெரிய விஷயமில்லை. தனிப்பட்ட முறையில் அவரையும் என்னையும் செம்மொழியின் அனைத்துச் சிறப்புகளையும் உள்ளடக்கிய சென்னைத் தமிழ் வசவுகளில் விளித்து வருகிற மின்னஞ்சல்களும், பெயர் சொல்லாமல் கூப்பிட்டுக் காதில் தேன் ஊற்றுகிற தொலைபேசி அழைப்புகளும் அனந்தம். முதல் ஒரு சில நாள்கள் எனக்கு ஒரு மாதிரி இருந்தாலும் விரைவில் அந்த அனுபவம் பழகிவிட்டது. ரசிக்கவும் ஆரம்பித்தேன்.

கருத்து என்பது அனைவருக்கும் ஒரே மாதிரியாக இருப்பதல்ல. அவரவர் நம்பிக்கைகள், அவரவர் ஈடுபாடுகள், அவரவர் பின்னணிகள், வளர்ப்பு, வார்ப்பு, வாசிப்பு அனைத்தும் சேர்ந்து ஒருவரது கருத்துகளைத் தீர்மானிக்கின்றன. நமக்குச் சரியென்று பட்டால் ஏற்பதும், தவறென்று தோன்றினால் ஏற்காமல் விடுவதும் நம் சுதந்தரம் சார்ந்தது. மாற்றுக்கருத்தை முன்வைக்கும்போது குறைந்தபட்ச நாகரிகம் கடைப்பிடிக்க வேண்டுமென்பது ஆதார விதி.

அங்கேதான் சிக்கல் வந்துவிடுகிறது. இதுதான் எனக்குப் புரிவதும் இல்லை.

நான் ஹிந்துத்துவவாதி இல்லை. என் வாழ்வில், நம்பிக்கைகளில் மதத்துக்குப் பெரிய இடம் கிடையாது. என் அனுமதி கேளாமல் என் பள்ளிக்கூட, கல்லூரி சர்டிஃபிகேட்டுகளில் வந்துவிட்ட ஒரு விஷயம் அது. அரவிந்தன் சொல்கிற பல விஷயங்களில் எனக்கு உடன்பாடு கிடையாது. நாங்கள் இரண்டு பேரும் அநேகமாக தினசரி முரண்பட்டுச் சண்டை போட்டுக்கொள்கிறவர்கள். ஆனால் ஒரு போதும் எங்கள் உரையாடல்களில் வன்மம் எட்டிப்பார்த்ததில்லை. அவர் நம்பிக்கைகள் அவருக்கு. என்னுடையவை எனக்கு.

என்னுடைய ஆர்.எஸ்.எஸ்: மதம், மதம் மற்றும் மதம் நூலை எழுதி முடித்த மறுவினாடி அவருக்குத்தான் வாசிக்க அனுப்பினேன். அதை எடிட் செய்யவிருந்த முத்துக்குமாருக்குக் கூட அப்புறம்தான்.

படித்துவிட்டு போன் செய்தவர் சொன்ன முதல் வார்த்தை: ‘ரத்தம் கொதிக்குதய்யா.’

அவர் ஒப்புக்கொள்ளாத விஷயங்கள், ஒப்புக்கொள்ள முடியாத விஷயங்கள், ஒப்புக்கொள்ள விரும்பாத விஷயங்கள் என்னென்ன என்பது எனக்குத் தெரியும். அவர் ஒப்புக்கொள்ளாததாலேயே அவை தவறு என்று நம்புமளவுக்கு நான் மூடனுமல்ல; நான் அனைத்தையும் ஒப்புக்கொண்டு விடுவேன் என்று நம்புகிற அளவுக்கு அவர் குழந்தையுமல்ல.

இதைக் குறிப்பிடக் காரணம், கருத்து வேறுபாடுகள் துவேஷமாகத்தான் போய் முடியவேண்டும் என்பதில்லை என்பதைச் சுட்டவே.

அரவிந்தனிடமிருந்து நாம் பெறுவதற்கு நிறைய உள்ளன. குறிப்பாக, அவருடைய ஆழமான, மிக விசாலமான வாசிப்பு அனுபவம். இந்த மனிதர் எங்கிருந்து இத்தனை படிக்கிறார் என்று என்னால் ஒருபோதும் வியக்காமல் இருக்க முடிந்ததில்லை.

ஒரு சமயம் நாகர்கோயிலில் அவர் வீட்டுக்குச் சென்றிருந்தேன். மாடியில் ஒரு பெரிய ஹாலின் கதவைத் திறந்து என்னை உள்ளே அழைத்துச் சென்றார். மூச்சடைத்துவிட்டது. தமிழகத்தின் எந்த ஒரு அரசு / தனியார் நூலகத்தில் உள்ள சிறந்த நூல்களின் சேகரத்தைக் காட்டிலும் அரவிந்தனின் நூலகம் சிறப்பானது என்று தயங்காமல் சொல்லுவேன். புராதனமான அறிவியல் பத்திரிகைகளின் தொகுப்புகள், என்சைக்ளோபீடியா வால்யூம்கள், ஹிந்துத்துவ, இஸ்லாமிய, கிறித்தவச் சிந்தனையாளர்களின் புத்தகங்கள், பழந்தமிழ் இலக்கியம், நவீன இலக்கியம் [நல்லவேளை, கவிதைத் தொகுப்புகள் கண்ணில் படவில்லை], வேளாண்மை தொடர்பான நூல்கள், மானுடவியல், வரலாறு, விஞ்ஞானம் என்று துறை வாரியாகப் புத்தகங்கள். தன் வாழ்நாள் சம்பாத்தியம் முழுதையும் ஒருவர் புத்தகங்கள் வாங்க மட்டுமே செலவிட்டாலொழிய அப்படியொரு நூலகம் அமைப்பது அசாத்தியம்.

ஒரு சார்லஸ் பேபேஜ் காலத்து கம்ப்யூட்டரை வைத்துக்கொண்டு அத்தைப்பாட்டி பாக்கு இடிப்பது மாதிரி டைப் செய்துகொண்டும் வாசித்துக்கொண்டும் இடையிடையே போன் பேசிக்கொண்டும் இருந்தார்.

நமக்குப் பிடிக்காவிட்டால் என்ன? அதுவும் ஒரு சிந்தனைப் போக்கு என்று அறிய விரும்பக்கூடிய மனநிலை வாய்த்தவர்களுக்கு அரவிந்தனின் எழுத்துகள் ஒரு தங்கச் சுரங்கம். இதில் சந்தேகமே இல்லை. இன்றுவரை தமிழ் பேப்பரில் அதிகம் வாசிக்கப்படுகிற எழுத்தாளராக அவர்தான் இருக்கிறார். ஆயிரம் சொற்கள் கொண்ட ஒரு கட்டுரைக்குள் அவர் எத்தனை எத்தனை தகவல்களைக் கொண்டுவந்துவிடுகிறார்!

இப்போது எழுதிக்கொண்டிருக்கும் ஆழி பெரிதையே எடுத்துக்கொள்ளுங்கள். சோமபானத்தை, வேதகால ரிஷிகளின் கடா மார்க் என்று நான் முன்பொருமுறை எழுதியதற்கு முற்றிலும் நேரெதிராக நிறுவும் முயற்சியில் என்னென்ன உதாரணங்கள், எங்கெங்கிருந்து கொடுக்கிறார் என்று கவனியுங்கள்.

சகஸ்ராதாரத்தில் ஊறும் ஆனந்த நீர், சந்திரனுடன் தொடர்புடைய சோமரசம் எனும் கருத்தாக்கம் பாரத சித்த மரபுகள் அனைத்திலும் காணப்படுவதாகும். வட இந்தியாவில் பிரபலமான நாத சித்த மரபின் முதன்மை சித்தரான கோரக்நாதரின் பாடல்களில் இறவா நிலை அளிக்கும் வானின் நீர் கேணியாக சோமம் சித்தரிக்கப்படுகிறது. கபீரின் பாடல்களில் இந்த சுவர்க்க கேணியின் அமுதத்தை ஹம்சம் அருந்துகிறது. அதர்வ வேதத்தில் இந்த சித்திரிப்பு வருகிறது. அப்பறவையின் தலையிலிருந்து அமுதம் வடிகிறது. (அதர்வ வேதம் IX.9.5) தமிழ் சித்த மரபிலும் இதை நாம் காணலாம். மிகவும் பிரபலமானது குதம்பைச் சித்தரின் பாடல்:

மாங்காய்ப் பாலுண்டு மலைமே லிருப்போர்க்குத்
தேங்காய்ப்பால் ஏதுக்கடி? குதம்பாய்!
தேங்காய்ப்பால் ஏதுக்கடி?

போகரும் ‘ஆக்கையா பொறியைந்தும் மடித்துத்தள்ளு/ ஆனந்தமதியமுதம் சிந்தும் சிந்தும்’ என்கிறார் (சிவயோகஞானம்).

நாலு வரியில் எத்தனை ரெஃபரன்ஸ் கொடுக்கிறார் என்பதைக் காட்டவே இதை இங்கே குறிப்பிடுகிறேன். கோரக்நாதரையும் கபீரையும் அதர்வ வேதத்தையும் நாம் எங்கே போய் எப்போது படிப்பது? அத்தனை பேரையும் ஒரு நேர்க்கோட்டில் நிறுத்தி பரேடு நடத்துவதும் நமக்கு சாத்தியமா?

எதற்குப் படிக்கவேண்டும் என்று கேட்டால், இக்கட்டுரையே அவசியமில்லை. அரவிந்தன், இந்தத் தலைமுறையின் மிக முக்கியமானதொரு சிந்தனையாளர். புத்தி விருத்தியில் நாட்டமுள்ளவர்கள் அவசியம் வாசிக்கவேண்டிய எழுத்தாளர் என்பது என் கருத்து.

அவருடைய தமிழ் பேப்பர் கட்டுரைகளின் தொகுப்பு ‘நம்பக்கூடாத கடவுள்’ என்ற தலைப்பில் இப்போது நூலாக வெளிவருகிறது. இணையத்துக்கு வெளியே உள்ள பெரும்பான்மைத் தமிழர்களுக்கும் அரவிந்தனைக் கொண்டு சேர்க்க நினைத்ததால் இதனைச் செய்தோம்.

அவரது மறுபக்கம் சுவாரசியமானது. பொதுவாக அவர் சங்கோஜி. எழுத்தில் தெரிகிற அரவிந்தனை நேரில் பார்த்தால் உங்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சும். ஆள் எதற்கும் எளிதில் அகப்படமாட்டார். அப்படியே கிடைத்தாலும் அளந்துதான் பேசுவார். போனிலோ, சாட்டிலோ அவர் கிடைக்காத தருணங்களில் அவரை வரவழைக்க ஒரே வழிதான் உண்டு. எந்த மூலையிலாவது போய் ஹிந்துத்துவத்துக்கு எதிராக நாலு வரி எழுதி வைத்துவிட்டால் போதும். உடனே பொங்கியெழுந்து ஓடிவந்துவிடுவார். நேற்று பத்ரியின் இந்தப் பதிவுக்கு முதல் ஆளாக கமெண்ட் போட அவர் வரிந்துகட்டிக்கொண்டு ஓடிவந்ததை நினைத்து இப்போதுவரை சிரித்துக்கொண்டிருக்கிறேன். மருதன் என்ன எழுதினாலும் திட்டுவார். பொதுவில் இடதுசாரிகள்மீது அவருக்கு  ‘அன்பு’ அதிகம் என்பதே இதன் காரணம். அதே சமயம், ‘நான் முற்றிலும் வேறுபட்டாலும் ரோசா வசந்தின் கருத்துகள் எனக்கு முக்கியம்’ என்று சொல்லக்கூடியவர்.

அரவிந்தன் அப்படித்தான். சிந்திக்கவும் பகுத்து அறியவும் தெரிந்த, விசால மனம் படைத்த எல்லோருமே அப்படித்தான்.

32 comments

புத்தகப் பட்டியல்

யதி – புதிய நாவல்

அமேசான் ஆசிரியர் பக்கம்

முந்தையவை

தொகுப்பு

புதியவை

வகை

மின்னஞ்சலில் பெற