இன்று சுஜாதா தினம்

வாசலில் வாசகர்கள்

பதிப்பாளர்களைப் பொறுத்தவரை இன்றுதான் நிஜமான புத்தகக் கண்காட்சித் தொடக்கம். நேற்றுவரை வராத மக்கள் அத்தனை பேரும் சேர்ந்து படையெடுத்துவிட்டார்கள். காலை முதலே நல்ல ஆள் நடமாட்டம் இருந்தது. மதியத்துக்குப் பிறகு கூட்டம் மெல்ல மெல்ல அதிகரித்து, மாலை நடக்கவும் முடியாத அளவுக்கு மக்கள் வெள்ளம். வெளியே வண்டி பார்க்கிங் பகுதியில் தகராறெல்லாம் நடந்ததாகக் கேள்விப்பட்டேன்.

கிழக்கு உள்பட இன்று எந்த அரங்கினுள்ளும் என்னால் நுழைய முடியவில்லை. காலை மனைவி குழந்தையுடன் சென்றிருந்தேன். அவர்கள் புத்தகம் வாங்க வெளியிலிருந்து ஆதரவளித்ததுடன் சரி. வேகமாக எழுத்துக்கூட்டி தினத்தந்தி தலைப்புகளைப் படிக்கவும், அதைவிட வேகமாக ஆங்கிலம் படிக்கவும் கூடிய என் மகள் [முதல் வகுப்பு] தனக்கு ஒதுக்கப்பட்ட தொகையில் ஒரு குட்டி என்சைக்ளோபீடியா தொடங்கி பத்துப் பதினைந்து புத்தகங்களை ஆர்வமுடன் தேர்ந்தெடுத்து வாங்கியது உலகுக்கு முக்கியமில்லை, எனக்கு முக்கியம். அவள் வயதில் நான் பாடப்புத்தகங்களைக் கூடப் படித்ததில்லை என்று லேசாக நினைவுக்கு வந்தது. சந்தோஷமாக இருந்தது.
இன்றைய காலைப்பொழுதை, நேற்றே எழுதியபடி உத்தமபுத்திரனாகக் கழித்தேன். மனைவி குழந்தை மட்டுமல்ல. என் அப்பா, அம்மா, தம்பி குடும்பத்தினர், சகோதரி என்று ஒரு பெரும் படையே கண்காட்சிக்கு வந்திருந்தது. அவர்களையெல்லாம் அனுப்பிவிட்டுத்தான் கிழக்கு பக்கம் வர முடிந்தது.

0

அத்தனை கூட்டமும் அவருக்கு

இன்று சுஜாதா தினம். கொத்துக் கொத்தாக மக்கள் அள்ளிக்கொண்டு போனதைப் பார்த்தேன். ஓர் எழுத்தாளனாக என்னை மிகவும் பாதித்த, சிந்திக்கவைத்த காட்சி அது. சுஜாதா இருந்தபோது இப்படியொரு காட்சி அவருக்கு சித்தித்திருக்குமா தெரியவில்லை. அநேகமாக இருந்திருக்காது என்றே நினைக்கிறேன். ஒரு பெரும் தலைமுறையையே அவர் பாதித்திருக்கிறார். அதை அந்தத் தலைமுறை, அவர் இறந்தபின் தான் ஒழுங்காக நினைவுகூர்ந்திருக்கிறது; மரியாதை செலுத்தத் தொடங்கியிருக்கிறது. இத்தனைக்கும் அவர் எழுதியதில் முக்காலே மூணு வீசம் வெறும் கொலைக்கதைகள். அம்மாமித்தனம் மேலோங்கிய பத்திரிகை எழுத்து மலிந்திருந்த காலத்தில் ஒரு நவீன எழுத்து நடையை அறிமுகப்படுத்தி வளர்த்தெடுத்ததும், தமது கதையல்லாத எழுத்துகளின்மூலம், வாரப்பத்திரிகை உலகுக்கு அப்பால் நடக்கும் நல்ல விஷயங்களை அவர் தொடர்ந்து அறிமுகப்படுத்தியதுமே அவரது இந்த அந்தஸ்துக்கு முக்கியக் காரணம் என்று கருதுகிறேன்.

மாலை கிழக்கு சந்தில் மாமல்லனுடன் பேசிக்கொண்டிருந்தபோதுகூட தற்செயலாக வேறேதோ பேச்சுவாக்கில் இதே விஷயத்தை வேறு விதமாக அவர் குறிப்பிட்டார். ஒரு சிறுகதைப் போட்டிக்கு நடுவராக சுஜாதா இருந்தபோது நடந்த ஒரு விஷயம். நல்ல விஷயங்கள் வெகுஜனங்களின் பார்வைக்கு வரவேண்டும் என்பதில் அவருக்கு இருந்த அக்கறை. அவர் இல்லை என்ற நினைவை அவரது புத்தகங்களை ஒன்றுவிடாமல் வாசித்துத் தீர்த்துத் தணித்துக்கொண்டுவிடவே அத்தனை பேரும் விரும்புகிறார்கள் என்று தோன்றியது.

0

பிரபல பதிவர்கள்

காலை முதலே இன்று ஏகப்பட்ட நண்பர்கள், வலை உலகப் பதிவர்கள் [ இந்த பதிவர் என்ற சொல்லை யார் கண்டுபிடித்தது? சகிக்கவில்லை. ஆனால் பிரபல பதிவர் என்பது மட்டும் நன்றாக இருக்கிறது.] வந்தவண்ணம் இருந்தார்கள். பெங்களூர் அரவிந்தன் வந்திருந்தார். அவரோடு நாராயணனைப் பார்த்தேன். ஒவ்வொரு புத்தகக் கண்காட்சிக்கும் பெங்களூரிலிருந்து லாரி எடுத்துக்கொண்டு வந்துவிடுகிற அதிதீவிர வாசகர் உமா மகேஸ்வரன் வந்திருந்தார். பெங்களூரிலிருந்தே ஒரு ஏழெட்டுப் பேர் இன்று என்னைச் சந்தித்தார்கள். இன்றைய பிருந்தாவன் எக்ஸ்பிரஸை புத்தகக் கண்காட்சி ஸ்பெஷல் என்றே அறிவித்துவிட்டார்கள் போலிருக்கிறது. தமிழ் பேப்பர் எழுத்தாளர் பாலா ஜெயராமன் வந்திருந்தார். அவருடைய கடல் கொள்ளையர் வரலாறு இந்த வருட ஹிட் வரிசையில் வந்திருப்பதைத் தெரிவித்தேன். [கடல் கொள்ளையர் வேகத்துக்கு அவருடைய இன்னொரு நூலான அணுகுண்டின் அரசியல் வரலாறு ஈடுகொடுக்கவில்லை என்பதிலிருந்து தங்கத் தமிழர்களைப் புரிந்துகொள்ளலாம்.]

இரவு ஏழு மணி சுமாருக்கு கிழக்கு அரங்குக்கு ஞாநி வந்திருந்தார். அவரோடு வலதுசாரி – சாரி, லிபரடேரியன் அதியமான் பேசிக்கொண்டிருந்தார். நான் ஞாநியிடம் உள்ளங்கை ஜாக்கிரதை என்று சொன்னேன். டூ லேட். அதியமான் ஏற்கெனவே ஞாநிக்கு ஜோசியம் பார்த்திருக்கிறாராம். அதியமானிடம் ஜோசியம் பார்க்காத எழுத்தாளர்கள், பிரபலங்கள் யாராவது உண்டா என்று தெரியவில்லை. இந்த வகையில் டாக்டர் ப்ரூனோ இன்னும் நெடுந்தூரம் பயணம் மேற்கொண்டாக வேண்டும்.

வலது பக்கம் லிபரடேரியன்

புறப்படுவதற்கு முன்னால் ஒரு குட்டி ரவுண்ட் அடித்ததில் விகடனில் இன்னமும் நம்பர் ஒன் என்றால் அது வந்தார்கள் வென்றார்கள்தான் என்று தெரிந்தது. யார் எந்தப் புத்தகத்தை எடுத்தாலும் கடைசியில் கொத்துமல்லி கருவேப்பிலை கொசுறு எடுப்பதுபோல அதை ஒரு காப்பி வாங்கிவிடுகிறார்கள். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் போன்ற ஸ்டால்களில்கூட வரலாறு தொடர்பான புத்தகங்களே மிக அதிகம் விற்பதாகச் சொன்னார்கள். சந்தியாவில் வந்திருக்கும் பல வரலாற்று மொழிபெயர்ப்பு நூல்களும் நன்றாக விற்பதைப் பார்த்தேன்.

இன்று கண்காட்சி வளாகத்திலேயே ரேடியோ ஒன் எஃப்.எம்முக்கு ஒரு பேட்டி அளித்தேன். அதில் இதனைக் குறிப்பிட்டிருக்கிறேன். இது மிக முக்கியமான ஒரு விஷயமாக எனக்குப் படுகிறது. நூற்றாண்டு கால தமிழ்ப் பதிப்புத்துறை, வாசகர்களுக்கு இவ்வளவு வரலாற்றுத் தாகம் இருக்கிறது என்று ஏன் இத்தனை ஆண்டுகளாக அறிந்திருக்கவில்லை என்று புரியவில்லை. கிழக்கில் ராஜராஜ சோழனை மக்கள் தாவி அள்ளும் காட்சியைப் பார்க்கும்போது வியக்காமல் இருக்க முடிவதில்லை. நேற்று ட்விட்டரில் பாஸ்டன் பாலா இதைப்பற்றி எள்ளலாக ஒரு வரி எழுதியிருந்ததைப் படித்தேன். ஆனால், கிட்டத்தட்ட 400 கடைகள் உள்ள கண்காட்சியில் கிழக்கு தவிர வேறு எங்கும் நீங்கள் இந்தச் சோழனைப் பற்றிய ஒரு புத்தகத்தையும் பார்க்க முடியாது. [என்.சி.பி.எச்சில் நீலகண்ட சாஸ்திரியின் சோழர் வரலாறு இருக்கிறது.] வேண்டுமானால் ராஜராஜ சோழன் நடித்த நாலைந்து சரித்திர நாவல்கள் கிடைக்கலாம்.

புனைகதை எழுத்து நடையில் சுஜாதா நிகழ்த்திய மாபெரும் மாற்றத்தை புனைவல்லாத புத்தகங்களில் இன்று எழுத்தாளர்கள் நிகழ்த்தவேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. நவீன தமிழில், சரளமான நடையில், சுவாரசியமான விதத்தில் எழுதப்படும் வரலாற்று நூல்களுக்கான தேவை மிக அதிகம் இருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. இன்றைய தலைமுறை வாசகர்கள் நீலகண்ட சாஸ்திரியை உட்கார்ந்து படிப்பது கொஞ்சம் கஷ்டம். ஆனால் அவர்களுக்கு விஷயம் தெரியவேண்டும். வேறென்ன செய்வார்கள்? [ஆகவே எழுத்தாளர்களே…]

0

இந்த முறை புத்தகக் காட்சி வளாகத்தில் நடைபெறும் எந்த ஒரு கலை அல்லது கொலை நிகழ்ச்சிக்கும் போவதில்லை என்று விரதம் மேற்கொண்டிருக்கிறேன். முதல் நாள் தொடங்கி இன்றுவரை போகவில்லை. இன்று பட்டிமன்ற ராஜா பேசினார் என்று சொன்னார்கள். தமது பேச்சில் இந்தக் கட்டுரையைக் குறிப்பிட்டு, நாங்கள் பேசுவதை இன்று யார் கேட்கிறார்கள்? எங்களைப் போய் ஏன் திட்டவேண்டும்? என்று கொஞ்சம்போல் வருத்தப்பட்டார் என்றும் சொன்னார்கள். வருத்தப்பட வைத்ததற்கு வருத்தங்கள். ஆனால் என் அபிப்பிராயத்தில் எந்த மாற்றமும் இல்லை.

0

இன்று பெரும்பாலான நேரம் நின்றபடியே இருந்திருக்கிறேன். அசாத்தியமான கால் வலி, உடம்பு வலி. சோர்வினால், இந்தக் கட்டுரையே சரியாக வரவில்லை என்ற அதிருப்தி இருக்கிறது. எனவே மிச்சக்கதை நாளைக்கு.

நாளை காலை 11 மணிக்குக் கண்காட்சி தொடங்குகிறது. 10.59லிருந்து நான் அங்கே இருப்பேன். நாளை சிறு பதிப்பாளர்களின் கடைகளுக்கு மட்டும் செல்வது என்று முடிவு செய்திருக்கிறேன். மதியத்துக்குள் ஒரு ரவுண்ட் முடித்துவிடவேண்டும். நாளைய கூட்டம் நிச்சயமாக இன்றைத் தூக்கிச் சாப்பிட்டுவிடும்.

[இன்றைய கிழக்கு டாப் 3: 1) ராஜராஜ சோழன் 2) உலோகம் 3) முதல் உலகப்போர். என்னுடைய காஷ்மீரை இன்று நான்காமிடத்துக்குத் தள்ளியது ஐ.எஸ்.ஐயின் சதியாகத்தான் இருக்கவேண்டும்.]

15 comments

புத்தகப் பட்டியல்

யதி – புதிய நாவல்

அமேசான் ஆசிரியர் பக்கம்

முந்தையவை

தொகுப்பு

புதியவை

வகை

மின்னஞ்சலில் பெற