புரட்சி படுத்தும் பாடு

நல்ல கூட்டம் நன்றி பத்ரி என்பது தவிர, ஒரு ஞாயிற்றுக்கிழமைக் கூட்டத்தைப் பற்றி வேறுவிதமாகக் குறிப்பிட ஒன்றுமில்லை. காலை கண்காட்சி தொடங்கிய முக்கால் மணி நேரத்தில் நான் திட்டமிட்டபடி சிறு பதிப்பாளர்களின் கடைகளை மட்டும் தேர்ந்தெடுத்துச் செல்லத் தொடங்கினேன். சிங்கிள், டபிள், ஃபோர் ஸ்டால்களால் நிறைந்த கண்காட்சியில் சிங்கிளாக நின்று ஆடுகிறவர்கள் இவர்கள். நேற்றுப் பிறந்தவர்களில் தொடங்கி பல பத்தாண்டுகளாகச் செயல்பட்டுக்கொண்டிருப்பவர்கள்வரை இதில் அடக்கம்.

நான் எழுத ஆரம்பித்த காலத்தில் இம்மாதிரியான ஒரு சில சிறு பதிப்பாளர்கள்தாம் முதலில் என்னை அரவணைத்து ஆதரித்தவர்கள். அர்ஜெண்டா ஒரு ரெண்டாயிரம் ரூவா பணம் வேணும் என்று கேட்டால், சற்றும் தயங்காமல் எடுத்துக் கொடுக்கக்கூடிய நல்லவர்கள். பிறகு நீங்கள் எழுதிக்கொடுக்கும் புத்தகத்தை ‘உரிமை பதிப்பகத்துக்கு’ என்று உங்களுக்கே தெரியாமல் போட்டுக்கொண்டுவிடுவார்கள் என்பது அப்போது உங்களுக்கு ஒரு பொருட்டாக இராது. கேட்ட கணத்தில் கொடுத்தாரல்லவா. அந்த மனம் முக்கியம். அந்த குணம் முக்கியம்.

எனக்கு பதிப்புத்துறை அறிமுகமான காலம் தொடங்கி நான் கவனித்துவரும் இம்மாதிரி பதிப்பகங்களுடன் குறைந்தது இருபது புதிய நிறுவனங்களாவது இடைப்பட்ட காலத்தில் உதித்திருக்கின்றன என்பதை இன்று பார்த்தேன். இவர்களுடைய புத்தகங்களைப் பொதுவில் மூன்று பிரிவுக்குள் அடக்கிவிடலாம். உணவு, காமம், கடவுள். சராசரித் தமிழனின் அடிப்படை விருப்பங்கள். தீர்ந்தது விஷயம். இந்த மூன்று பிரதான பிரிவுகளுக்குள் அவரவர் சௌகரியம் போல் பல உப பிரிவுகள் சேர்த்துக்கொள்வார்கள். சமயத்தில் சற்றும் எதிர்பார்க்க முடியாதவிதமாகச் சில சிறுகதைத் தொகுப்புகள், கவிதைத் தொகுப்புகளையும் வெளியிடுவார்கள். ஆற்று வெள்ளத்தோடு அவையும் அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தில் ஐக்கியமாகிவிடும் என்கிற நம்பிக்கை. தவிரவும் நாளைய பிரபலங்களை இன்று அறிமுகப்படுத்தியதாக வரலாறு குறித்து வைத்துக்கொள்ளுமென்பது முக்கியமல்லவா?

எது என்னவானாலும் தமிழ் பதிப்புலகில் இந்தச் சிறு பதிப்பாளர்களின் இடமும் இருப்பும் அதி முக்கியமானவை. ஆயிரம்தான் பேப்பர் விலை உயர்ந்தாலும் அதிகபட்ச விலையாக இவர்கள் ஐம்பது ரூபாயைத் தாண்டுவதில்லை என்ற ஒரு காரணத்துக்காகவாவது.

இன்று நான் சுற்றிய இடங்களில் புத்தகம் வாங்க வந்திருந்த வாசகர்கள் [பெரும்பாலும் பெண்கள்] எந்தப் புத்தகமானாலும் அட்டையில் சித்து அல்லது சித்தர் அல்லது அற்புதம் அல்லது வசியம் அல்லது ராசி அல்லது வினோதங்கள் அல்லது வாஸ்து என்ற சொற்களில் ஏதாவது ஒன்று இருக்குமானால் சற்றும்  யோசிக்காமல் எடுத்துவிடுவதைப் பார்த்தேன். இந்தப் புத்தகங்கள் அதிகபட்சம் முப்பத்தி ஐந்து அல்லது நாற்பது ரூபாய்க்குள் [ஆறு அல்லது ஏழு ஃபாரம்கள்] தான் இருக்கின்றன. மகான்களைப் பொறுத்தமட்டில் ஷீர்டி சாய்பாபா அநேகமாக அனைத்துக் கடைகளிலும் இருக்கிறார். வாழ்க்கை வரலாறு, லீலா வினோதங்கள், அற்புத அனுபவங்கள், சிலிர்ப்பூட்டும் தரிசனங்கள் என்று விதவிதமான பை-லைன்களில். இந்தப் பதிப்பு நிறுவனங்களில் பாபா அளவுக்கு ராமகிருஷ்ணரோ ரமணரோ பிரபலமில்லை. பாபாவில்கூட, புட்டபர்த்தி பாபா ஒப்பீட்டளவில் மிகவும் குறைவு.  ரஜினிகாந்த் பாபா நிறைய இருக்கிறார். அவரது கிரியா யோகம் குறித்து நாற்பது முதல் நாநூறு பக்கங்கள் வரை விளக்கப் புத்தகங்கள் கிடைக்கின்றன. அரவிந்தர் அன்னை இருக்கிறார். [அரவிந்தர் கிடையாது.] விவேகானந்தர் இருக்கிறார் என்றாலும் ஆன்மிகத் தலைவராக அல்ல. ஒரு புராதன சோம. வள்ளியப்பனாக மட்டும். விதவிதமான சித்தர்களும் அவர்கள் புரிந்த அற்புதங்களும் உள்ளன.

ஒரு கடையில் அகால மரண நூல் என்றொரு புத்தகத்தைப் பார்த்தேன். தலைப்பு சுண்டி இழுத்ததால் நின்றவாக்கில் இருபது பக்கங்கள் வரை படித்தேன். இதுவும் யாரோ சித்தர் அருளிய புத்தகம்தான். பாடல் வடிவில் முதலில் போட்டுவிட்டு, கீழே விளக்கம் இருக்கிறது. வெகு சுவாரசியமான புத்தகம் இது. என்னென்ன விதமாகவெல்லாம் தற்கொலை செய்துகொள்வார்கள் [கொள்லலாம்?] என்று ஒவ்வொன்றாக எடுத்துச் சொல்லி, ஒவ்வொரு விதமான தற்கொலை முயற்சிக்கும் என்னென்ன முறிவு மருந்து என்று அடுத்ததாக விளக்குகிறது இந்தப் புத்தகம்.

நமக்கு நன்கு தெரிந்தது, அரளி விதை. இதே மாதிரி இன்னும் என்னென்ன விதைகளைத் தின்னலாம், என்னென்ன காக்டெயில் தயாரித்து அருந்தி சாகலாம், எப்படிச் செத்தால் எப்படியெல்லாம் வலிக்கும், வலிக்காமல் சாகிற விதங்கள், அப்படி சாக முயற்சி செய்தவர்கள், என்ன சாப்பிட்டுச் செத்தார்கள் என்று ஒருவேளை கண்டுபிடிக்க முடிந்துவிட்டால் மாற்று மருந்தாக எவையெவை உதவும், எவையெவை உதவாது என்று விளக்குகிறது இந்தப் புத்தகம்.

இன்னொரு விஷயத்தையும் கவனித்தேன். நூலின் தலைப்பில் ‘சூத்திரம்’, ‘சூட்சுமம்’, ‘கணிப்பு’,

கல்லோ காவியமோ

‘விதி’ போன்ற வார்த்தைகள் இருக்குமானால் அந்தப் புத்தகத்தை அதிகம் பேர் எடுக்கிறார்கள். சில கடைகளில் நியூமராலஜி, அதிர்ஷ்டக் கற்கள் போன்ற துறைகள் சார்ந்த புத்தகங்களில் இந்தச் சொற்களை சகட்டுமேனிக்குப் பயன்படுத்தியிருப்பதைப் பார்த்தேன். என்ன விஷயம் என்றால், இத்தகு நூல்களால் கவரப்பட்டு பில்லிங் கவுண்ட்டர் வரை செல்லும் வாசகர்களைச் சில பதிப்பாளர்கள் தனியே பின்வரிசை ரேக் அருகே அழைத்துச் செல்கிறார்கள். புத்தக அடுக்கின் கீழ்த்தட்டில் ராசிக்கற்கள், ராசி மோதிரம், குட்டி பிரமிட், பலவிதமான கற்களால் செய்யப்பட்ட மாலைகள் போன்றவை அடுக்கிவைக்கப்பட்டிருக்கின்றன. ஆர்வம் காட்டும் வாசகர்களுக்கு விளக்கம் சொல்லி அதையும் விற்கிறார்கள்.

மற்றபடி வழக்கமான சமையல் புத்தகங்கள், பத்து வாங்கினால் மூன்று இலவசம் ரக விளம்பரங்கள், நாடி ஜோதிட ரகசியங்களைப் புட்டுப்புட்டு வைக்கும் [நம்பிக்கையாளர்களுக்கு மட்டும்.] நாற்பது ரூபாய்ப் புத்தகங்களால் ஒரு மாபெரும் தலைமுறை தழைத்துக்கொண்டிருக்கிறது.

எனக்கு பதிப்புத்துறை அறிமுகமானபோது என்னென்ன பார்த்தேனோ அதேதான். அப்போது எழுதிக்கொண்டிருந்த ஆசிரியர்களே இப்போதும் எழுதுகிறார்கள். ஒரு சில புதியவர்கள் வந்திருக்கலாம். உங்களுக்கு தம்மண்ண செட்டியாரைத் தெரியுமோ? சி.எஸ். தேவ்நாத்தைத் தெரியுமோ? சூப்பர் எழுத்தாளர் சூரியநாத்தைத் தெரியுமோ? தெரியாவிட்டால் நீங்கள் ஒரு தேர்ந்த வாசகரே அல்ல.

இந்தப் பதிப்பாளர்களுள் இரண்டு பேரிடம் இன்று ஒரு சில நிமிடங்கள் பேசினேன். பரம்பரையாகப் பதிப்புத்தொழிலில் இருப்பதாகச் சொன்னார்கள். தமது ஒவ்வொரு ஆசிரியருக்கும், ஒவ்வொரு புத்தகத்துக்கும் ஐயாயிரம் ரூபாய் முதல் ஏழாயிரம் ரூபாய் வரை சன்மானம் கொடுப்பதாகச் சொன்னார்கள். ஒருவர், ஒவ்வொரு தமிழ்ப்புத்தாண்டுக்கும் தமது ஆசிரியர்களுக்கு ஆயிரம் ரூபாய் அன்பளிப்பு வழங்குவதைப் பெருமையுடன் குறிப்பிட்டார். தமிழுக்கு இதுவரை முப்பத்தி ஐந்து புதிய எழுத்தாளர்களைத் தாம் அறிமுகப்படுத்தியிருப்பதாக ஒரு பதிப்பாளர் தெரிவித்தார். அவர்களுள் ஒருவர் இப்போது பத்துக்கும் மேற்பட்ட பதிப்பகங்களுக்கு எழுதிக்கொண்டிருக்கிறாராம்.

0

கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியபிறகு, சுற்றுவதை நிறுத்திவிட்டுக் கிழக்குக்கு வந்துவிட்டேன். பிரசன்னா சொன்னது சரி. புதிய வாசகர்கள் விடுமுறை தினத்தில்தான் உக்கிரமாகப் படையெடுக்கிறார்கள். கூட்டமில்லாத தினங்களில் நிதானமாகத் தேடியலைந்து புத்தகம் வாங்குகிற விருப்பம் பெரும்பாலும் அவர்களுக்கு இல்லை. மாபெரும் கூட்டத்தில் நெருக்கியடித்துக்கொண்டு புத்தகம் தேர்ந்தெடுப்பதையே அவர்கள் விரும்புகிறார்கள். தவிரவும் அக்கம்பக்கத்தில் நிற்கிறவர்கள் என்ன வாங்குகிறார்கள் என்று பார்த்து, அதைத் தாமும் முயற்சி செய்யலாம் என்று தீர்மானிக்கிறவர்கள் மிகுதி.

நான் கவனித்தவரை இன்று பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம், முதல் உலகப்போர், டாலர் தேசம், அம்பேத்கர், இந்திய வரலாறு [முதல் பாகம் மட்டும். இரண்டாம் பாகம் காலையே தீர்ந்துவிட்டது என்று சொன்னார்கள். நாளை வந்துவிடும்.] சொக்கனின் பிரசித்தி பெற்ற வாழ்க்கை வரலாற்றுப் புத்தகங்கள் பரவலாக நிறைய விற்றன. பார்த்திபன் கனவும் சிவகாமியின் சபதமும் எப்படி விற்கின்றன என்பது மட்டும் எனக்குப் புரியவில்லை. கண்காட்சியில் அநேகமாகப் பத்து, பதினைந்து இடங்களிலாவது இவை இருக்கின்றன. நிச்சயமாக, கிழக்கைவிடக் குறைந்த விலையில் இப்பதிப்புகள் சில இடங்களில் கிடைக்கின்றன. [நக்கீரனில் டெலிபோன் டைரக்டரி சைஸில் 225 ரூபாய்க்குப் பொன்னியின் செல்வனே கிடைக்கிறது.] ஆனாலும் எங்கே, என்ன விலையில் பார்த்தாலும் மக்கள் எடுத்துவிடுகிறார்கள். கல்கி அளவுக்கு வெகுஜனங்களைப் படுதீவிரமாக பாதித்த இன்னொரு எழுத்தாளர் இல்லை என்று நினைக்கிறேன். இன்னும் சில வருடங்களில் சுஜாதா மட்டும் அந்த இடத்துக்கு வரக்கூடும்.

இன்று ஒரு போஸ்டர்

மாலைக்கூட்டம் குவியத் தொடங்குமுன் ஒரு நடை கேண்டீனுக்குப் போய்விட்டு வரலாம் என்று பிரசன்னா, மணிகண்டனுடன் புறப்பட்டேன். அங்கே ஒரு பெரிய டேபிளை ஆக்கிரமித்து ஒரு ஹிந்துத்துவ மாநாடு நடந்துகொண்டிருந்தது. ஞாயிற்றுக்கிழமைக் கூட்டம், விற்பனையில் முத்திரை பதிக்கும் தீவிரக் கனவு அனைத்தையும் மறந்து பிரசன்னா நடுவில் குதித்து அமர்ந்துவிட்டார். சொல்வனம் சேதுபதியை முதல் முறையாகப் பார்த்தேன். மிகவும் இளைஞர். மிகவும் ஒல்லியாக, மிகவும் அமைதியாக இருக்கிறார். ‘படித்துறை’ இயக்குநர் சுகா இருந்தார். படம் அடுத்த மாதம் ரிலீஸ் என்று சொன்னார். அவருடைய தாயார் சன்னிதி புத்தகம் இன்று வெளியிடப்பட்டிருக்கிறது. புத்தகத்தைப் புரட்டிப்பார்த்தேன். உள்ளே இருந்த கோட்டோவியங்கள் மிரட்டலாக இருந்தன. யாரோ திருநெல்வேலிக்காரர். பெயர் சொன்னார். மறந்துவிட்டது. ஆனால் படங்கள் அப்படியே கண்ணில் நிற்கின்றன. கிழக்குக்கு வரைவாரா என்று கேட்டேன். ஓ, ஒவ்வொரு படத்துக்கும் ஒரு மாதம், ஒன்றரை மாதங்கள் அவகாசம் கொடுக்கவேண்டும் என்றார். இது நம் சரித்திரத்திலேயே கிடையாதே என்று நினைத்துக்கொண்டேன்.

ராமன் ராஜா வந்திருந்தார். அவருடைய சொல்வனம் அறிவியல் கட்டுரைகளும் புத்தகமாக இன்று வெளியிடப்பட்டது. ராமன் ராஜாவை எனக்குச் சட்டென்று அடையாளம் தெரியவில்லை. அவரேதான் அறிமுகப்படுத்திக்கொண்டார். சும்மா மீசையை எடுத்துவிட்டேன் – உங்களை மாதிரி என்றார். நான் மீசையை எடுத்தாலும் என் சைஸ் பிரத்தியேகமானது. யாரையும் தடுமாற வைக்காது. அம்மாதிரி விசேஷ சௌகரியங்கள் இல்லாதவர்கள் இம்மாதிரி விஷப்பரீட்சைகள் செய்தால் கொஞ்சம் கஷ்டம்தான்.

சாமிநாதன், ஓவியர் செல்வம் [இவரை எனக்கு கல்கி நாள்களில் இருந்தே தெரியும். ஆனால் இவர் ஒரு தீவிர ஹிந்துத்வாக்காரர் என்பது இன்றுதான் தெரியும்.] என்று பல நண்பர்களை இன்று சந்தித்தேன்.

திரும்பவும் அரங்குக்குச் சென்று மீண்டும் ஒரு சுற்று. இன்று மாமல்லன் கண்ணில் படவில்லை. ஆனால் அவரது பழைய சகா ம.வே. சிவகுமாரைப் பார்த்தேன். பென்ஷன் வர ஆரம்பிச்சாச்சிடா. அதான் பழையபடி ஆரம்பிச்சிட்டேன் என்று ஒரு போஸ்டரைக் காட்டினார். எனக்கு எழுதச் சொல்லிக்கொடுத்த வாத்தியாருக்கு, தமிழின் நம்பர் 1 நடிகையான தமன்னாவுடன் நடிக்க ஒரு வாய்ப்புக் கிடைக்க எம்பெருமானை மனத்துக்குள் வேண்டிக்கொண்டேன். [அல்லயன்ஸில் சிவகுமாரின் பழைய புத்தகங்களுக்குப் புதிய பதிப்புகள் கிடைக்கின்றன.]

திரும்ப கிழக்குக்கு வந்தபோது மருதன் யாரோ ஒரு ரசிகையுடன் உலகை மறந்து புரட்சிகர அரசியல் பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்தேன். எப்படியோ இந்த இடதுசாரிகளுக்கு மட்டும் பெண் ரசிகர்கள் வந்து சேர்ந்துவிடுகிறார்கள். ஒருபோதும் வராத புரட்சியை வைத்துக்கொண்டு இவர்கள் படுத்தும் பாடு தாங்கமுடிவதில்லை. இன்று மருதனின் இன்னொரு ரசிகர் உதிர்த்த ஒரு ரத்தினம்:

‘சார் உங்க புத்தகங்கள் எதையும் விடமாட்டேன் சார். உங்க எழுத்து ரொம்ப பிடிக்கும் சார். உங்க சே குவேரா புக்க படிச்சதுலேருந்துதான் சார் இந்த மாதிரி தொப்பி போட ஆரம்பிச்சேன்!’

துரதிருஷ்டவசமாக அந்த அன்புமயமான ரசிகரின் சே குவேரா தொப்பியைப் படமெடுக்க முடியாமல் போய்விட்டது.

27 comments

புத்தகப் பட்டியல்

யதி – புதிய நாவல்

அமேசான் ஆசிரியர் பக்கம்

முந்தையவை

தொகுப்பு

புதியவை

வகை

மின்னஞ்சலில் பெற