ஒரு சாகசம்

இலபக்குதாசுவின் கையொப்பம்

ஒன்று.

நேற்றே வெளியாகிவிட்டதாக நண்பர்கள் சொன்ன ரைட்டர்பேயோனின் திசை காட்டிப் பறவையை இன்று வாங்கினேன். ஆழியில் அதை வாங்கும்போது நண்பர் செந்தில், பேயோனின் இலக்கிய பார்ட்னரான லபக்குதாஸை அறிமுகப்படுத்தினார். பேயோனைப் பார்க்க வாய்ப்பில்லை என்பதால் லபக்குதாஸிடம் ஆட்டோகிராஃப் கேட்டேன். என்னைப் பற்றி இந்தப் புத்தகத்தில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அதைப் பற்றிய காட்டமான விமரிசனத்தை ஆங்கிலத்தில் எழுதி, தமிழாக்கிக்கொண்டிருக்கிறேன் என்று சொன்னபடி கையெழுத்துப் போட்டுக்கொடுத்தார்.

போன வருஷத்துக்கு இந்த வருஷம் பேயோன் மிகவும் முன்னேறியிருக்கிறார். புத்தகம் 136 பக்கங்கள். 100 ரூபாய் விலை. தவிரவும் டெமி சைஸ். எழுதியது தவிர அட்டைப்படம் வரைந்தது, அட்டை வடிவமைப்பு செய்தது, பின் அட்டை வாசகங்கள் எழுதியது என்று ஆரம்பித்து சகலமும் அவரே செய்திருக்கிறார். எழுத்துலகில் ஒரு டி. ராஜேந்தர் ஆகிற எண்ணம் இருக்கிறதோ என்னவோ.

என்னாலான காரியம் இன்று சந்தித்த ஒரு நாலைந்து நண்பர்களிடம் புத்தகம் வந்துவிட்ட விவரத்தைச் சொல்லி வாங்க அனுப்பினேன். இரவு கடை கட்டியாகிவிட்ட சமயத்தில் வந்த விமலாதித்த மாமல்லனிடம் விஷயத்தைச் சொன்னபோது, சடாரென்று அவர் எழுந்து ஆழிக்கு விரைந்ததில், வாசகர்களுக்குச் செய்தி இருக்கிறது. இன்னொரு எழுத்தாளரின் திறனை வியக்கவும் ரசிக்கவும் அங்கீகரிக்கவும்கூடச் சில இலக்கியவாதிகள் இன்னும் இருக்கிறார்கள் என்பதைத்  தவிரவுமான செய்தி அது!

மாமல்லனிடம், புத்தகத்தைப் பிடித்துக்கொண்டு ஒரு போஸ் கொடுங்கள், பேயோன் நூலுக்கொரு விளம்பரம் போடுவோம் என்றேன். சந்தோஷமாக ஒப்புக்கொண்டு நூலைத் தலைகீழாகப் பிடித்து, போஸ் கொடுத்தார். இணைய எழுத்தில் ஒரு தலைகீழ் மாறுதல் கொண்டுவந்தவர் என்பதனாலும், அதையும் லிட்டரலாகக் காட்டுவதே டி.ராஜேந்தர் பாணி என்பதனாலும் அந்தப் புகைப்படம் அவ்வண்ணமே இங்கே.

மனமாரப் பாராட்டிய மாமல்லன்

நிற்க. பேயோன் புத்தகத்தைப் படித்துவிட்டேன். ஒரு சொல்லில் சொல்லுவதென்றால் class! இதன் முன்னுரை மிக முக்கியமான ஒரு கட்டுரை. பேயோனைப் பற்றியும் அவர் உருவாக்கும் எழுத்துருவங்களைப் பற்றியும் இரண்டையும் உருவாக்கியவர் எழுதியிருப்பது இது. படித்துச் சிரித்து மாளாது. ஆனால் சிரித்து முடித்துவிட்டுத் திரும்ப ஒருமுறை படித்தால் வேறு சில சுவாரசியமான விஷயங்கள் அகப்படுகின்றன. புனைவை மட்டுமல்லாமல், புனைவாசிரியனையும் ஒரு புனைவாகவே படைத்தவரின் மனநிலையைப் புரிந்துகொள்ள இந்த முன்னுரை ஓரளவு உதவுகிறது.

நவீன தமிழ் எழுத்து முயற்சிகளில் பேயோன் ஒரு சாகசம். எனக்கு இதில் சற்றும் சந்தேகமில்லை. இந்தப் புத்தகத்தைப் பற்றி விரிவாக ஓர் அறிமுகம் எழுதிக்கொண்டிருக்கிறேன். சூரியக்கதிர் பத்தியில் அது பிரசுரமான பிறகு இங்கே தருகிறேன்.

[திசை காட்டிப் பறவை / ஆழி பப்ளிஷர்ஸ் / விலை ரூ. 100. புத்தகக் கண்காட்சியில் கிழக்கு அரங்கம் இருக்கும் வரிசையிலேயே முதலில் இருக்கிறது ஆழி.]

இரண்டு.

கண்காட்சியில் இஸ்லாமிய பதிப்பு நிறுவனங்கள் அதிகம் இருப்பதாக அரவிந்தன் சொன்னாரென்று பிரசன்னா ஓரிரு தினங்கள் முன்னர் எழுதினார். அது தமாஷுக்குச் சொன்னதென்று அரவிந்தனுக்கும் தெரியும், பிரசன்னாவுக்கும் தெரியும். உண்மையில் இஸ்லாமிய நிறுவனங்களல்ல; இடதுசாரி நிறுவனங்கள்தான் நிறையக் கண்ணில் படுகின்றன. இன்று அரங்கிலுள்ள அனைத்து இடதுசாரி கடைகளுக்கும் செல்வது என்ற திட்டத்துடன்தான் கிளம்பினேன். பிரகாஷ் காரத்தோ யாரோ இன்று வருகிறார்கள் என்று மருதன் பயமுறுத்தியிருந்தும் தளராமல் ஆரம்பித்தேன். முதல் அரைமணி நேரம் திட்டம் ஒழுங்காகவும் நடந்தது. ஆனால் இடையே நண்பர்கள் [தோழர்கள் அல்லர்] பலபேர் எதிர்ப்பட்டதால் தொடரமுடியாமல் போய்விட்டது. விடியலில் ஓரிரண்டு புத்தகங்கள் வாங்கியதுடன் சரி. நாளையும் நாளை மறுநாளும் இந்தப் பணியைச் செய்ய முடியாது. பெங்களூரிலிருந்து சொக்கன் வருகிறான். புதன்கிழமை மாலை அவன் புறப்பட்டுப் போனபிறகுதான் விட்ட இடத்திலிருந்து தொடரவேண்டும்.

3011ல் எதுவும் நடக்கும்

இன்று இலக்கில்லாமல் சில கடைகளில் சுற்றிக்கொண்டிருந்தேன். க்ரியேடிவ் வேர்ல்ட் என்ற ஸ்டாலில் இண்டீரியர் டெகரேஷன் குறித்து ஏராளமான புத்தகங்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் மழமழவென்று தடவிக்கொண்டே இருக்கச் சொல்கின்றன. 50 Beautiful Houses in India என்ற புத்தகத்தைப் புரட்டினேன். வீடு, அரண்மனை, மாளிகை என்ற எந்தச் சொல்லும் இந்த வீடுகளுக்குப் பொருந்தாது. புரட்டப் புரட்ட வந்துகொண்டே இருந்த பிரம்மாண்டமான புகைப்படங்கள், நவீன கட்டடக் கலையின் உச்சத்தைச் சுட்டிக்காட்டக்கூடியவையாக இருந்தன. பிழைத்துக் கிடந்து 3011ல் பல்லாயிரங்கோடி ராயல்டி வாங்கி இப்படியொரு வீடு கட்டி வாழ்ந்து பார்க்கவேண்டும்.

உயிர்மையில் நல்ல கூட்டம் இருந்தது. [எப்போதும் இருக்கிறது. நேற்று மக்கள் க்யூவில் நின்று புத்தகம் வாங்கிய கண்கொள்ளாக் காட்சியை இங்கு கண்டேன். குறிப்பிட மறந்துவிட்டேன்.] மனுஷ்யபுத்திரனிடம் சில நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்ததில், கவிதைகள்கூட நிறைய விற்கின்றன என்று சொன்னார். உயிர்மையில் மட்டும்தான் என்று நான் சொன்னேன். ஒரு பிராண்ட் எப்படி உருவாகிறது என்பது குறித்து நிறையவே எழுதலாம். மக்கள் மனத்தில் ஆழமான தாக்கத்தை உருவாக்க நாம் மேற்கொள்ளும் கடுமையான முயற்சிகளும் நேர்மையான உழைப்பும் தருகிற எளிய பலன் இது. நவீன இலக்கிய வாசகர்கள் நம்பிச் செல்லக்கூடிய இடமாக உயிர்மை ஆகியிருக்கிறது. இதனைக் குறிப்பிடக் காரணம், கடந்த தினங்களில் நான் சந்தித்த வேறு சில பதிப்பாளர்கள் [அல்லது ஸ்டால்களில் இருந்தவர்கள்] வழக்கத்தைவிட இந்த ஆண்டு கவிதை நூல்களின் விற்பனை படு மோசம் என்று சொல்லியிருந்ததுதான்.

மூன்று.

பழனியின் ‘பாத’ யாத்திரை

ஒளிப்பதிவாளர்கள் எல்லோரும் இயக்குநராகும் காலம் இது. தமிழ் பேப்பருக்கு வீடியோவுடன் கூடிய ரிப்போர்ட் தரவேண்டிய பத்ரி இன்று வாசல் விழாவுக்குத் தலைமை தாங்கச் சென்றுவிட்டதால், யார் எனக்கு ஒளிப்பதிவாளர் வேலை செய்வார்கள் என்ற கவலை ஏற்பட்டது. நல்லவேளையாக பத்ரி, பிரசன்னாவிடம் தனது சாக்லெட் பெட்டியைக் கொடுத்துவிட்டுச் சென்றிருந்தார். பிரசன்னா ஒழுங்காகப் படம் பிடிக்கிறாரா என்று பார்ப்பதற்காக மெல்ல அந்தப் பக்கம் ஒரு நடை சென்றேன். முதல் வரிசையில் சொகுசாக உட்கார்ந்துகொண்டு அவர் நீலவானம், மேகம், காக்கா, இடையிடையே மேடை என்று எதையெதையோ எடுத்துக்கொண்டிருந்ததைக் கண்டேன். மேடையில் அம்பை உட்கார்ந்திருந்ததுபோல் இருந்தது. அரங்குக்குத் திரும்பும்போது மைக்கில் இப்போது சிவசங்கரி பேசுவார் என்றார்கள். அட என்று நினைத்துக்கொண்டேன்.

கண்காட்சி முடிந்து கடை மூடும் வேளை, எங்கள் மார்க்கெடிங் பிரிவில் பணியாற்றும் பழனிக்கு ஒரு சிறிய ஆக்சிடெண்ட் ஆகிவிட்ட விஷயத்தை நண்பர்கள் சொன்னார்கள். காலில் நல்ல அடி. வீட்டில் ஓய்வெடுக்காமல் கால் கட்டுடன் வந்திருந்த பழனியிடம், ஏன்யா இப்படி என்றேன். சும்மா படுத்துட்டிருக்க மனசு வரல சார் என்றார். நெகிழ்ச்சியாக இருந்தது. நாளை பழனிக்குப் பஞ்சாமிர்தம் – சே,  பால்கோவா வாங்கித்தர வேண்டும்.

7 comments

புத்தகப் பட்டியல்

யதி – புதிய நாவல்

அமேசான் ஆசிரியர் பக்கம்

முந்தையவை

தொகுப்பு

புதியவை

வகை

மின்னஞ்சலில் பெற