மீட்டருக்கு மேலே.

கடந்த இரு தினங்களாக, புத்தகக் கண்காட்சி வளாகத்தில் நான் சந்திக்கும் பெரும்பாலானவர்கள் முதலில் கேட்கும் கேள்வி: ‘கிழக்கு ஸ்டாலில் வைரமுத்து எப்படி?’

என் பதில், எனக்குத் தெரியாது என்பதுதான்! அதெல்லாம் சத்யா, பிரசன்னா டிபார்ட்மெண்ட். என் தொகுதி எல்லைக்கு அப்பாற்பட்ட விஷயம்.

இரு தினங்கள் முன்னர் நான் கண்காட்சிக்குச் சென்றபோது கிழக்கு அரங்கம் வாசலில் பெட்டி பெட்டியாகக் கொண்டுவந்து இறக்கிக்கொண்டிருந்தார்கள். பழைய ஜெய்சங்கர் படங்களின் தங்கக்கடத்தல் காட்சி போல் இருந்தது. இது என்ன என்று பிரசன்னாவிடம் கேட்டேன். அவர் பதில் சொல்லுமுன் ஒரு பெட்டியை ஒருவர் திறக்க, வைரமுத்துவின் ஆயிரம் திரைப்பாடல்கள் தொகுப்பைப் பார்த்தேன். நான் பார்த்த கணத்தில் எங்கிருந்தோ பாய்ந்து வந்த ஒரு வாசகர் தபாலென்று பெட்டிக்குள் கைவிட்டு ஒரு புத்தகத்தைப் பிடுங்கி எடுத்துவந்து பில் கவுண்ட்டரில் வைத்துக் காசை நீட்டினார்.

இது எனக்கு வியப்பாக இருந்தது. கண்காட்சி வளாகத்தில் கிழக்குக்கு முன்னதாகப் பல இடங்களில் இந்தப் புத்தகத்தை நான் பார்த்திருந்தேன். ஒருவேளை அவர் கண்ணில் படவில்லையோ என்று ஒரு கணம் யோசித்தேன். வாய்ப்பில்லை. அவர் புதிதாக உள்ளே நுழைந்தவராகத்தான் இருக்கவேண்டும். அவர் கடைக்குள் நுழையவில்லை. மற்ற புத்தகங்களைப் பார்க்கவில்லை. வேறு எது குறித்தும் சிந்தித்ததாகத் தெரியவில்லை. ஒரே குறி. ஒரே புத்தகம். தீர்ந்தது விஷயம்.

நான் பிரசன்னாவைப் பார்த்துச் சிரித்தேன். அங்க பாருங்க என்று இன்னொரு கவுண்ட்டரை அவர் காட்டினார். அங்கே வேறு சிலர் அதே புத்தகத்தைக் கையில் வைத்துக்கொண்டு பில்லுக்கு நின்றுகொண்டிருந்தார்கள். நேரம் ஆக ஆக, வரிசையாக அரங்குக்கு வந்த பல வாசகர்கள் அந்த ஆயிரம் கவிதைகள் தொகுப்பை எடுத்துப் போய்க்கொண்டே இருந்ததைப் பார்த்தேன். கிழக்கில் மட்டுமல்ல. அந்தப் புத்தகம் எங்கெல்லாம் இருக்கிறதோ, அங்கெல்லாமும். 600 ரூபாய் ஒரு பொருட்டல்ல. நிச்சயமாக அல்ல.

இயக்குநர் மனோபாலா ஓர் அம்பு மாதிரி கடைக்கு வந்தார். எனக்கு வாம்மா மின்னல் நகைச்சுவைக் காட்சிதான் உடனே நினைவுக்கு வந்தது. வந்த சுருக்கில் அதே புத்தகத்தை அவர் ஒரு பிரதி எடுத்தார். அடுத்த கணம் பில்லிங். அதற்கடுத்த கணத்தில் ஆளைக் காணோம்.

இந்தப் புத்தகம் எதனால் இப்படியொரு கவன ஈர்ப்பைப் பெற்றது என்று சிறிது யோசித்தேன். கலைஞர் வெளியிட்டதாலா? வாய்ப்பில்லை. வைரமுத்துவின் எல்லா வெளியீட்டு விழாக்களிலும் அவர் இருக்கவே இருக்கிறார். சினிமாப் பாடல்களின்மீது தமிழனின் தீராத மோகம்? எனில், நாலணா பாட்டுப் புத்தகக் கலாசாரம் இன்னும் தொடர்ந்திருக்கும். இணையத்தைத் திறந்தால் இன்று எல்லாமே எளிதில் கிடைத்துவிடுகிறது. வைரமுத்து+டமில்+ஃபில்ம் ஸாங்ஸ்+லிரிக்ஸ் என்று ஒரு தட்டுத் தட்டினால் ஆயிரத்துக்கு அப்பாலும் அநேகம் கிடைத்துவிடும். அத்தனை கனமான புத்தகத்தை அத்தனை பெரிய விலை கொடுத்து வாங்கித்தான் படிக்கவேண்டுமென்பதில்லை. ஆனாலும் வாங்குகிறார்கள்!

சந்தேகமில்லாமல் வைரமுத்து ஒரு தலைமுறையை வெகுவாக பாதித்திருக்கிறார். சினிமாவின் சின்ன சதுரங்களுக்குள் தன்னால் முடிந்த ஆகச்சிறந்ததைத் தருவதற்கு எப்போதும் முயற்சி செய்து வந்திருக்கிறார். கண்ணதாசனை ஒரு பெஞ்ச் மார்க்காக வைத்துப் பேசுகிற வழக்கம் இங்கே இருக்கிறது. அது அத்தனை அவசியமில்லை என்று நினைக்கிறேன். அவரது பாதை, பார்வை இரண்டுமே வேறாகத்தான் எனக்குப் படுகிறது. வைரமுத்து எழுத வந்த காலத்தில் தமிழ் சினிமாவின் முகம் வெகுவாக மாறத் தொடங்கியிருந்தது. பத்திரிகை உலகுக்கு சுஜாதா வந்த மாதிரிதான் சினிமாவுக்கு வைரமுத்து வந்ததும்.  முற்றிலும் புதியதொரு அனுபவத்தை அவரது வரிகள் கொடுத்ததை மறுக்க இயலாது. எளிய பதங்கள், அதே சமயம் புதிய பதங்கள். எளிய சந்தம், ஆனால் வலுவான சந்தம். பொது ஜனங்கள் விரும்பும் மெட்டை அன்று இளையராஜா தந்தார். பிறகு ரகுமான் தந்தார். அப்புறம் பலபேர்.

ஆனால் வைரமுத்து நுழைந்த காலத்துக்குப் பிறகு இன்றுவரை அநேக வரிகளை நினைவுகூர்ந்து வியக்கவும் பாராட்டவும் வாய்ப்பளித்த சினிமா பாடலாசிரியர்கள் என்று வேறு யாரையும் எனக்குச் சொல்லத் தோன்றவில்லை. [சமீபத்தில் நா. முத்துக்குமார் நீங்கலாக.] இன்றைக்கு எழுதுகிற சிலர் வெறும் ப்ரோஸைக் கொடுத்து கம்போஸ் பண்ணிவிடுகிறார்கள். ஒரு குறிப்பிட்ட கவிஞரை முன்வைத்து எங்கள் அலுவலகத்தில் எனக்கும் மருதனுக்கும் அடிக்கடி இந்த உரையாடல் வரும். அவர் எழுத வந்த நாளாக இன்று வரை எழுதிய எதுவுமே கவிதையோ, பாடலோ இல்லை; வெறும் உரைநடைதான் என்பது என் வாதம். இதை என்னால் அறிவியல்பூர்வமாக நிரூபிக்க முடியும். மருதன் மறுப்பான். துரதிருஷ்டவசமாக அவரது ஒவ்வொரு பாட்டும் சொல்லி சொல்லி சூப்பர் ஹிட் ஆவதைச் சுட்டிக்காட்டி வெறுப்பேற்றுவான்.

ஹிட் ஆகலாம். சிலகாலம் முணுமுணுக்கப்படலாம். ஆனால் இப்படி மீட்டருக்கு எழுதியவற்றையும் தொகுத்துப் பார்க்கும் துணிச்சல் அவருக்கோ அவரைப் போன்றவர்களுக்கோ வருமா என்பது சந்தேகம். அப்படியே வந்தாலும் மக்கள் இப்படிப் பாய்ந்து பாய்ந்து வாங்குவதற்கு வாய்ப்பிருப்பதாக நான் நினைக்கவில்லை.

சினிமா பாடல்களில் மீட்டர்தான் முக்கியம். இதில் சந்தேகமே இல்லை. ஆனால் மீட்டருக்கு மேலே என்ன வைக்கிறோம் என்பதில்தான் ஒரு பாடலாசிரியரின் வெற்றி அடங்கியிருக்கிறது. வைரமுத்து மீட்டருக்குச் சில மகுடங்கள் சூட்டியிருக்கிறார். அதைத்தான் வாசகர்கள் இன்று சுட்டிக்காட்டுகிறார்கள்.

15 comments

புத்தகப் பட்டியல்

யதி – புதிய நாவல்

அமேசான் ஆசிரியர் பக்கம்

முந்தையவை

தொகுப்பு

புதியவை

வகை

மின்னஞ்சலில் பெற