கறை நல்லது.

இன்று காலை என் பழைய நண்பர் ஒருவரும் புதிய நண்பர் ஒருவரும் அரை மணி நேர இடைவெளியில் என்னைத் தொலைபேசியில் அழைத்தார்கள். இருவரும் தி.நகர் சிவா விஷ்ணு கோயில் எதிரே எல்.ஆர். சுவாமி மண்டபத்தில் நடைபெறும் கிழக்கு புத்தகத் திருவிழாவில் இருந்தே அழைத்திருந்தார்கள்.

வாங்கிய புத்தகங்களைப் பற்றிச் சொல்லிவிட்டு, முயற்சியைப் பாராட்டிவிட்டு கையோடு ஒரு கேள்வி கேட்டார்கள். அதெப்படி ஐந்து ரூபாய்க்கும் பதினைந்து ரூபாய்க்கும் இருபது ரூபாய்க்கும் புத்தகங்களைத் தருகிறீர்கள்? இவையெல்லாம் விற்காத புத்தகங்களா?

நான் பதிலுக்கு அவர்கள் வாங்கிய புத்தகங்கள் என்னென்ன என்று கேட்டேன். டாலர் தேசம், பிரபாகரன் ஒரு வாழ்க்கை, சே குவேரா, அள்ள அள்ளப் பணம் போன்ற புத்தகங்கள் அந்தப் பட்டியலில் இருந்தன. இதை நான் சுட்டிக்காட்டியபோது, அதானே, எப்படி முடிகிறது, ஏன் செய்கிறீர்கள் என்றார்கள்.

பல ஊர்களில், பல இடங்களில், பல கண்காட்சிகளில் வைக்கப்பட்டு விற்காமல் திரும்பி வந்த பிரதிகளே பெரும்பாலும் இந்த அதிரடி சிறப்பு விற்பனைக் கண்காட்சியில் இடம்பெற்றிருக்கின்றன. ஒரு சில புத்தகங்கள் கொஞ்சம் டேமேஜ் ஆனவை. பெரும்பாலும் அழுக்காகி, தூசு படிந்து, கறை படிந்து, கடைகளுக்கு இனி அனுப்ப முடியாத நிலையை அடைந்தவை. கண்காட்சிகளில் மேலே இருக்கும், முன்னால் இருக்கும் பிரதிகள் பெரும்பாலும் இப்படித்தான் ஆகும். அவைதான் வாசகர்களை உள்ளே அழைப்பவை. கட்டிப்போடுபவை. வாங்கவைப்பவை. ஆனால் அவற்றை எடுத்துவிட்டு அடுத்து இருக்கும் பிரதியைத்தான் வாசகர்கள் பெரும்பாலும் எடுப்பார்கள். இந்த சைக்காலஜி வெகு நாள் வரை எனக்குப் புரியவில்லை.

அப்புறம் புரிந்தது. எல்லா வாசகர்களுமே மேலே இருக்கும் பிரதி அழுக்கானவை என்றே பெரும்பாலும் கருதுகிறார்கள்.புத்தம் புதிதாக அப்போதுதான் உறை பிரித்து வைத்தாலும் இதே கதிதான்.  அதனாலேயே அவை மேலும் அழுக்காக விட்டுவிடுகிறார்கள்! டாலர் தேசம் விற்பனையில் என்னதான் சரித்திர சாதனை படைத்தாலும் ஒவ்வொரு கண்காட்சியிலும் அதன் முதல் பிரதிகள் படுதோல்வி அடைந்தவையே.

இந்த அதிரடி புத்தகக் கண்காட்சிக்கு நான் இன்னும் போகவில்லை. 13ம் தேதி வரைதான் என்றார்கள். கூட்டமும் விற்பனையும் அமோகம் என்று போனவர்கள் சொன்னார்கள். பார்க்கத்தான் கொஞ்சம் நிறம் மங்கியிருக்கிறதே தவிர புத்தகம், அதன் கட்டுமானம் போன்றவற்றில் எந்தப் பிரச்னையும் இல்லை என்று எனக்கு போன் செய்த நண்பர்கள் சொன்னார்கள். இது ஆரம்பித்த நாளாக மூச்சுவிட நேரமில்லாத அளவுக்கு வேலைகள். நாளை மாலை முடிந்தால் மைலாப்பூருக்குப் போகலாம் என்றிருக்கிறேன். போவது உறுதியானால் ட்விட்டரில் அறிவிக்கிறேன். அங்கே என்னைச் சந்திக்கும் வாசகர்களுக்கு மட்டும் – அவர்கள் ஆகக்குறைந்த விலையில் வாங்கும் என் புத்தகங்களுக்கு மட்டும், ப்ரீமியம் தள்ளுபடியாக மேலும் நாலணா குறைத்துத் தர சிபாரிசு செய்கிறேன்! 😉

இடம் 1:
மைலாப்பூர் குளம் எதிரில்.
தொலைபேசி எண் : 9500045643
இடம் 2:
L.R. சுவாமி ஹால்
சிவா விஷ்ணு கோயில் எதிரில்
சங்கர பாண்டியன் ஸ்டோர் அருகில்
தி. நகர்,சென்னை
தொலைபேசி எண் : 9500045608
தேதி:
பிப்ரவரி  பிப்ரவரி 13 வரை.
[ஒரு பி.கு: ராமச்சந்திர குஹாவின் இந்திய வரலாறு – காந்திக்குப் பிறகு கூட சில பிரதிகள் இருக்கிறது என்று இப்போது தெரியவந்தது. ஓடுங்கள். அதிர்ஷ்டம் இருந்தால் உங்களுக்கே கிடைக்கக்கூடும்.]

18 comments

புத்தகப் பட்டியல்

யதி – புதிய நாவல்

அமேசான் ஆசிரியர் பக்கம்

முந்தையவை

தொகுப்பு

புதியவை

வகை

மின்னஞ்சலில் பெற