சூடாமணி விகாரத்தின் தலைமைப் பிக்கு யார்?

நான் திரும்பத் திரும்ப வாசிக்க விரும்பும் புத்தகங்களுள் ஒன்று பொன்னியின் செல்வன். சினிமாவில் இருப்பவர்கள், சினிமாவின்மீது ஈர்ப்பு இருப்பவர்கள் இரு தரப்புக்கும் இது ஒரு விசேஷமான கதை. லட்சக்கணக்கான வாசகர்கள் தலைமுறை தலைமுறையாக ரசித்துவரும் படைப்பு என்பது உண்மையே. ஆனால் சினிமா பிரியர்களுக்கு இது ஒரு தீராத வியப்பளிக்கும் கதை. காரணம், இதைவிடச் சிக்கலான ஒரு கதையை, இதைவிட நேர்த்தியாகத் திரைக்கதை வடிவில் இன்னொருத்தர் இன்றுவரை எழுதவில்லை என்பதுதான். பொன்னியின் செல்வன், தன்னளவில் ஒரு மிகச் சரியான திரைக்கதைதான் என்பது என் தீர்மானம். அதை நாவல் என்றும், நெடுங்கதை என்றும் பெருங்கதை என்றும் காவியம் என்றும் யார் என்ன சொன்னாலும் சரி. எனக்கு அது ஒரு திரைக்கதை நூல்.

இந்தக் கதையை மணி ரத்னம் இப்போது சினிமாவாக எடுக்கப்போகிறார் என்றும் ஜெயமோகன் அதற்கு எழுதிக்கொண்டிருக்கிறார் என்றும் கேள்விப்பட்டேன். அவர்கள் என்னை மன்னிக்கத்தான் வேண்டும். விஷயம் தெரிந்ததும் முதலில் சிரித்துவிட்டேன். ஏனென்றால் எனக்குத் தெரிந்து நான் கல்கியில் பணியாற்றிக்கொண்டிருந்த காலத்தில் அநேகமாக உத்தராயணத்துக்கு ஒருத்தர், தட்சிணாயனத்துக்கு ஒருத்தர் கிராவிடம் வந்து பொன்னியின் செல்வனைப் படமெடுக்கப்போகிறேன் என்று சொல்லிக்கொண்டிருப்பார்கள். அவர் புன்னகை மன்னர். யாருக்கும் மறுப்புச் சொல்ல மாட்டார். ஒருத்தரிடம் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு ஒப்பந்தம் போட்டு வைப்பார். கண்டிப்பாக அந்த ஒப்பந்தக் காலம் காலாவதியாகும். பிறகு அதைத்தூக்கி இன்னொருத்தருக்குக் கொடுப்பார். கமலஹாசனில் ஆரம்பித்து எத்தனையெத்தனையோ பேர் இம்முயற்சியைத் தொடங்கிப் பாதியில் விட்டிருக்கிறார்கள்.

பிறகு சிலர் தொலைக்காட்சித் தொடராக எடுப்பதற்கு முயற்சி செய்து பார்த்தார்கள். அதுவும் நடந்தமாதிரி தெரியவில்லை. இந்த ஜென்மத்தில் யாரும் படமெடுக்கப்போவதில்லை என்று தெரிந்துவிட்டது. ஒரு நல்ல நாள் பார்த்து கலைஞர் கல்கியின் படைப்புகளை நாட்டுடைமை ஆக்கினார். அதன்பிறகு தமிழ்நாட்டின் தொண்ணூற்றொன்பதே முக்கால் சதவீதப் பதிப்பாளர்கள் (இப்போது கிழக்கு உள்பட) பாய்ந்து பாய்ந்து அவரது நாவல்களைப் பதிப்பித்தார்கள். கல்கி யாரையும் ஏமாற்றவில்லை. மலிவுப் பதிப்பென்றாலும் விற்பார். நூலகப் பதிப்பென்றாலும் விற்பார். நடுவாந்தரப் பதிப்பென்றாலும் நன்றாகவே விற்பார்.

கல்கியெல்லாம் இலக்கியவாதியே இல்லை, வெறும் கமர்ஷியல் ரைட்டர், காலத்தின்முன் நிற்கமாட்டார்; என்று கச்சை கட்டிக்கொண்டு தொடை தட்டிய கோஷ்டிகளெல்லாம் இன்று எங்கே இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. கல்கி சௌக்கியமாகத் தமிழகத்தின் ஒவ்வொரு வீட்டிலும் உட்கார்ந்திருக்கிறார். தமிழ் எழுத்துலகில் ஏகபோகச் சக்கரவர்த்தி என்றால் அவர்தான். அவரளவு வாசிக்கப்பட்டவர்களும் இல்லை, நேசிக்கப்பட்டவர்களும் இல்லை. [என் அப்பா ஓய்வுக்குப் பின் தனது அசகாய சேமிப்பில் கஷ்டப்பட்டு ஒரு ஃப்ளாட் வாங்கி அதற்கு ஆசை ஆசையாகக் கல்கி என்றே பெயர் வைத்தார்!]

நான் குறைந்தது ஆறு முறை பொன்னியின் செல்வனைப் படித்திருக்கிறேன். இரு வருட இடைவெளிகளில் படிப்பது வழக்கம். நூற்றுக்கணக்கான சஸ்பென்ஸ்களையும் ஏராளமான உறவுச் சிக்கல்களையும் உள்ளடக்கிய கதை அது. கதாநாயகனின் முடிவற்ற மிக நீண்ட பயணங்களின் ஊடாக ஒரு மாபெரும் சாம்ராஜ்ஜியத்தை ஆண்டவர்களின் கதை சொல்லப்படும். கதையில் ஆங்காங்கே விழுந்துகொண்டே போகும் பிரும்ம முடிச்சுகளை ஓரிடத்தில்கூடத் தோற்காமல் ஒவ்வொன்றாக வெகு அநாயாசமாக அவிழ்ப்பார் கல்கி.

நம்ப முடியாத அளவுக்குப் பெரிய கேன்வாஸை எடுத்துக்கொண்டு எழுதும்போது கடைப்பிடிக்கவேண்டிய உத்திகள் என்னென்ன என்பதைப் பொன்னியின் செல்வனைப் படித்தே நான் கற்றேன். குமுதம் ரிப்போர்ட்டரில் நான் எழுதிய டாலர் தேசம் தொடரில் அவரது இரண்டு உத்திகளை இன்னும் சற்று நவீனப்படுத்தி, அபுனைவின் சாத்தியங்களுக்கு ஏற்ப மறுவடிவம் அளித்துப் பயன்படுத்தியிருக்கிறேன். [இரு வேறு களங்களில், வேறு வேறு காலக்கட்டங்களில் நடைபெறும் ஒரேவிதமான சம்பவங்களை ஒன்றோடொன்று கலந்ததுபோல் எழுதுவது எப்படி என்பது ஒன்று. பிரதான விஷயத்திலிருந்து விலகி, கிளைக்கதையில் வெகுதூரம் போக நேரும்போது திரும்பவும் ராஜபாட்டைக்கு சிராய்ப்பு இல்லாமல் வந்து சேர்வது எப்படி என்பது மற்றொன்று.]

பொன்னியின் செல்வனை அதே நீள அகலங்களுடன் படமெடுப்பதென்றால் கட்டாது. அதை மூன்று மூன்றரை மணி நேரத்துக்குள் சுருக்குவதென்றால் எவையெவையெல்லாம் வெட்டுப்படும் என்று நான் ஒரு பட்டியல் வைத்திருக்கிறேன். பார்க்கலாம் மணிரத்னம் என்ன செய்கிறாரென்று.

சமீபத்தில் திரும்பவும் பொன்னியின் செல்வனைப் படிக்க ஆரம்பித்து கடைசி பாகத்தின் கடைசி நூறு பக்கங்களில் இப்போது நிற்கிறேன். திடீரென்று ஏடாகூடமாக ஓர் எண்ணம் தோன்றியது. சமகால அரசியல்வாதிகளில் யார் யார் எந்தெந்தப் பாத்திரங்களுக்குப் பொருத்தமாக இருக்கக்கூடும் என்று யோசித்துப் பார்த்ததில் இப்படியொரு பட்டியல் தேறியது. ஒரே ஒரு கதாபாத்திரத்துக்கு மட்டும் எத்தனை யோசித்தும் யாரும் அகப்படவில்லை. இனி பட்டியல்:

சுந்தர சோழச் சக்கரவர்த்தி – கலைஞர். அனிருத்த பிரம்மராயர் – ஆற்காடு வீராசாமி. ஆழ்வார்க்கடியான் – துரைமுருகன். ஆதித்த கரிகாலன் – அழகிரி. அருண்மொழி வர்மன் – ஸ்டாலின். குந்தவை – கனிமொழி. பெரிய பழுவேட்டரையர் – கலாநிதி  மாறன். சின்ன பழுவேட்டரையர் – தயாநிதி மாறன். நந்தினி – ஜெயலலிதா. வானதி – தமிழச்சி தங்கபாண்டியன். கொடும்பாளூர் பூதி விக்கிரமகேசரி – வீரமணி. குடந்தை ஜோதிடர் – சோ. தேவராளன் – ராமதாஸ். மதுராந்தகத்தேவர் – ஈவிகேஎஸ் இளங்கோவன். கந்தமாறன் – டாக்டர் அன்புமணி. நாகப்பட்டிணம் சூடாமணி விகாரத் தலைமைப் பிக்கு – பிரணாப் முகர்ஜி.

வந்தியத்தேவன் – அதான் சொன்னேனே, யாரும் இன்னும் அகப்பட்டபாடில்லை.

41 comments

புத்தகப் பட்டியல்

யதி – புதிய நாவல்

அமேசான் ஆசிரியர் பக்கம்

முந்தையவை

தொகுப்பு

புதியவை

வகை

மின்னஞ்சலில் பெற