போட்டு சாத்துங்கள் பொன்னியின் செல்வனை!

மாநிலம் ஒரு பொதுத்தேர்தலை எதிர்நோக்கியிருக்கிறது. ஆளும் கட்சிக்கு அத்தனை நல்ல பெயர் இல்லை. எதிர்க்கட்சியை இம்முறை திரும்ப நம்புவதற்கான நியாயமான காரணங்களும் ஏதுமில்லை. கூட்டணிக் காய்கள் தீவிரமாக நகர்த்தப்பட்டுக்கொண்டிருக்கின்றன. கோடிக்கணக்கில் பணம் பரிமாறப்படுவதாகவும் பறிமுதல் செய்யப்படுவதாகவும் தினமொரு செய்தி வந்துகொண்டிருக்கிறது. எண்ணி ஒரே மாதம். இவரா அவரா ஆட்டத்தின் இறுதிக்கட்டம் வந்துவிடப்போகிறது. இந்தச் சூழ்நிலையில் கல்கியின் பொன்னியின் செல்வன் இலக்கியமா இல்லையா என்று அரதப் பழசான குடுமிப்பிடியைத் திரும்ப தூசு தட்டச் சொல்லி நண்பர்கள் நெருக்குகிறார்கள். எத்தனை ஆண்டுகள் கழிந்தாலும், எத்தனை விவாதங்கள், விமரிசனங்கள், விளக்கங்கள் தரப்பட்டிருந்தாலும் உலகில் தீராத சந்தேகங்கள் சில எப்போதும் இருக்கும். இது அதிலொன்று போலிருக்கிறது. நல்லது. கொஞ்சம் பேசிப்பார்க்கலாம் – திரும்பவும்.

எது இலக்கியம்?

*    அனுபவங்களின் அடிப்படையில் படைக்கப்படுவது
*    ஜோடனையற்றது. மேல் பூச்சுகள் இல்லாதது
*    தன் காலத்தைப் பிரதிபலிக்கக்கூடியது
*    வாசகனை சக படைப்பாளியாக ஏற்று அவன் பங்களிப்பைப் பெரிதும் கோருவது
*    சத்தமில்லாதது. பிரசாரமற்றது
*    நீதி சொல்லாதது
*    கதாசிரியன் குறுக்கே வரமாட்டான். பாத்திரங்கள் மட்டுமே வாழும்.
*    வாசிக்கும்போது வினாக்களையும் முடித்ததும் மாபெரும் பரவசத்தையும் ஒருங்கே தரக்கூடியது
*    திரும்பத் திரும்ப எடுக்கும்போதெல்லாம் புதிய புதிய தரிசனங்கள் தரக்கூடியது
*    பிராந்திய, தேசிய, சர்வ தேசிய எல்லைகளைக் கடந்து மனித குலத்துக்கே பொதுவான விஷயங்களை மட்டும் பேசுவது
*    என்றும் வாழ்வது.

இவ்வாறு இதுகாறும் சொல்லப்பட்டு வந்திருக்கிறது. விமரிசகர்கள் தத்தம் தேவைகளுக்கேற்ப, அவ்வப்போது இதில் வெட்டியும் சேர்த்தும் சட்டத்திருத்தம் பண்ணிக்கொள்வார்கள். அது அனுமதிக்கப்பட்டது.

கல்கி வெகுஜன எழுத்தாளர். இன்னும் தெளிவாகச் சொல்லுவதென்றால் அவர் ஒரு கமர்ஷியல் எழுத்தாளர். கேளிக்கை என்கிற ஓரம்சம்தான் அவர் எழுத்தில் பிரதானம். தவிரவும் பிரசாரத் தொனி அதிகம் கொண்ட எழுத்து அவருடையது. லட்சியவாதப் பாத்திரப் படைப்புகள், மிகை நாடகத்தன்மை, குறுக்கே புகுந்து அவர் பிரசங்கம் செய்ய ஆரம்பித்துவிடுவார்; போதனைகள் இருக்கும், ஏ மனிதனே என்னும் குரல் அடியில் எப்போதும் ஒட்டிக்கொண்டிருக்கும் – என்பன போன்றவை அவரது எழுத்து மீதான எதிர்த்தரப்புக் குற்றச்சாட்டுகளாக எப்போதும் இருப்பவை. தவிரவும் சரித்திரப் புனைகதைகளெல்லாம் இலக்கிய அந்தஸ்து பெறாது என்றும் சொல்லப்படும். சரித்திரம் என்பது மன்னர்களின் கதையல்ல; மக்களைப் பற்றிப் பேசாத சரித்திரம் எப்படி ஒரு சரித்திரமாகும்?

பிரபஞ்சன் மானுடம் வெல்லும் எழுதியபோது அதன் முன்னுரையில் ‘தமிழில் சரித்திர நாவல் இல்லாத குறை என்னால் தீர்ந்தது’ என்றே பிரகடனம் செய்தார். ரொம்ப சரி. சரித்திரம் என்பது மக்களுடையதுதான். சந்தேகமில்லை. மைனாரிடிகளுக்கான இட ஒதுக்கீடு அடிப்படையில் கல்கி மன்னர்களைத் தம் கதாபாத்திரங்களாகத் தேர்ந்தெடுத்துக்கொண்டிருப்பார். ஒழியட்டும். ஆனால் அவர் என்ன ஜெகஜ்ஜால ராஜாக்களின் ஜிலுஜிலு வாழ்க்கையையா விவரித்தார்?

அதைப் பார்க்கவேண்டுமல்லவா?

பொன்னியின் செல்வன் என்னும் அவருடைய கதை, ஆட்சியில் உள்ளோரைச் சுற்றி உள்ள பெரிய அதிகாரிகளின் உள் அரசியல் திருவிளையாடல்களைப் பற்றியே பெரிதும் பேசுகிறது. ஆட்சி மாற்றம் அல்லது ஆட்சிக் கவிழ்ப்பு. அதிலுள்ள பிரச்னைகள். ஆதரிப்போர் யார்? எதிர்ப்போர் யார்? ஆதரிக்கும் நபர்களை ஒருங்கிணைக்கும் பணி எப்படிப்பட்டது? அதில் வரக்கூடிய சிக்கல்கள் என்ன? ஒரு ரகசியம் எனப்படுவது எப்படி மெல்லக் கசிந்து வெளியே வருகிறது? அரசியலில் பெண்களின் பங்கு. அது முக்கியமானது. தவிரவும் அபாயங்கள் மிக்கது. அதனாலேயே அழகானது. நல்ல சக்திகளுக்கும் தீய சக்திகளுக்குமான இடைவிடாத மோதல் என்பது உலகு தொடங்கிய நாளாக இருந்துவருவது. அது ஓர் ஆட்சியை பாதிக்கும் விதம் எப்படியாக இருக்க முடியும்? ஆட்சியாளர்களின் அந்தரங்க விஷயங்கள் எப்படி அரசை பாதிக்கின்றன? மக்கள் எப்படி ஒரு நிலைபாடு எடுக்கிறார்கள்?

இதைத்தான் பேசுகிறது பொன்னியின் செல்வன். இம்மாபெரும் கதையின் நாயகனான வந்தியத்தேவனுக்கு இரண்டாயிரத்து சொச்சப் பக்கங்களில் ஒரு காதல் காட்சி கூடக் கிடையாது. இத்தனைக்கும் அவன் பெண்களால் அதிகம் விரும்பப்படக்கூடியவன். பெரிய வீரன். ஆணழகனும்கூட. கதையின் இரண்டாவது நாயகனான அருள்மொழி வர்மன், எண்ணூறு பக்கங்களுக்குப் பிறகு அறிமுகமாகிறான். அதுவும் போர்க்களத்தில். கதையின் பெரும்பகுதியைப் போர்க்களத்திலேயே கழித்துவிட்டு நாடு திரும்பி, ஆட்சியதிகாரத்தை இன்னொருத்தனுக்கு அன்பளிப்பாகத் தந்துவிட்டு திரும்பவும் போர்க்களம் போவதிலேயே குறியாக இருக்கிறான். அவனுக்காவது காதல் உண்டா என்றால் கிடையாது. இரண்டு முக்கியக் கதாபாத்திரங்களிடம் இல்லாத காதல், கதையில் ஒரு கிழவனுக்குக் கொடுக்கப்படுகிறது. தள்ளாத வயதில் இளம் பெண்ணொருத்தியைக் காதலித்து மணந்துகொள்கிற பழுவேட்டரையர். அவருக்காவது காதல் களியாட்டங்கள் உண்டா என்றால் சனியன், அதுவும் கிடையாது. நந்தினியாகப்பட்டவள் பழிவாங்கும் எண்ணத்துடன் வந்திருப்பவள். எப்பப்பார் விரதம் அது இது என்று அளந்துவிட்டு, கிழவனார் தம் பக்கத்தில்கூட வரமுடியாதபடி செய்துவிடுகிறவள். வெறும் பேச்சிலேயே காதல் உணர்வை அவருக்கு அளித்து அதிலேயே திருப்தியடையச் செய்துவிடக்கூடிய சாமர்த்தியசாலி.

ஆயிரக்கணக்கான பக்கங்கள் நீளும் கதையில் ஒரு மார்க்கச்சை உண்டா, சப்ரமஞ்சம் உண்டா, இடுப்பின் நெளிவு சுளிவுகளில் தீர்த்த யாத்திரைதான் உண்டா? ஒரு எழவும் கிடையாது. கல்கி கழுத்துக்குக் கீழே எந்தப் பெண்ணையும் வருணிக்காத எழுத்தாளர். அவரால் அதிகபட்சம் ஆனது சுரங்க நடைபாதைகளையும் இருட்சிறைகளையும் கோட்டை கொத்தளங்களையும் இயற்கை வளம் மிக்க பிராந்தியங்களையும் ஏரிகளையும் குளங்களையும் புத்தர் சிலைகளையும் சிற்ப சாகசங்களையும் வருணிப்பதுதான். கதாநாயகர்கள் காதல் காட்சிகளில் ஈடுபடாவிட்டாலும் இது ஒரு கமர்ஷியல் கதைதான் என்றால் அவ்வண்ணமே ஆகுக. பலான பலான வருணனைகள் இல்லாது போனாலும் இது ஒரு பைங்கிளிக் காவியமே என்பீர்களானால் அதற்கும் ஒரு ஆமென்.

0

பொன்னியின் செல்வனில் சோழ வம்சத்தைச் சேர்ந்த சுந்தர சோழர் காலத்துக் கதை கூறப்படுகிறது. சரித்திரத்தை அணுவளவும் மாற்றாமல் கதையைக் கட்டியிருக்கிறார் கல்கி. இதனால்தான் கதாபாத்திரங்கள் திடீர் பல்டியடிப்பது கதையோட்டத்தைப் பின்பகுதியில் கெடுக்கிறது. ராஜ்ஜியமே வேண்டாம் என்று முதலிலிருந்து சொல்லிவரும் அருள்மொழி வர்மன், திடீரென்று பதவியேற்கிறேன் என்று சொல்வது ஓர் உதாரணம். தடாலென்று பதவியேற்பு தினத்தன்று அவன் கிரீடத்தை மதுராந்தகன் தலையில் வைத்து ட்விஸ்ட் கொடுப்பது இன்னொரு உதாரணம். இந்த இரண்டுமே சரித்திரத்தில் அப்படியே நடந்தவை. ஆதாரங்கள் உள்ளன. [கல்கியே அந்த ஆதாரங்களையும் கொடுத்திருக்கிறார்.] ஆதித்த கரிகாலனை யார் கொன்றது என்பதற்குக் கதையில் பதில் இல்லாததன் காரணம், சரித்திரத்தில் அக்கேள்வி இன்னும் கேள்வியாகவே இருப்பதுதான். கதைக்காக கல்கி புதிய தீர்வுகளை ஓரிடத்திலும் அளிக்கவில்லை.

சோழ குலத்துக்கு உதவிய வாணர் குல வந்தியத்தேவனும், சோழ குலத்தை அழிக்கப் புறப்பட்ட வீரபாண்டியனின் ஆபத்துதவிப் படையும் அதன் ராணி நந்தினியும் [நந்தினி கிடையாது. எழுத்து வேகத்தில் வந்துவிட்டது.] ஒரு குட்டி இளவரசனும் கடம்பூர் சம்புவரையரும் மழவரையரும் பார்த்திபேந்திரப் பல்லவனும் மற்றவர்களும் இன்னமும் கல்வெட்டுகளிலும் செப்பேடுகளிலும் அப்படியப்படியே வாழ்ந்துகொண்டிருப்பவர்கள். எதுவும் புனைவல்ல. யாரும் புனையப்பட்டவர்கள் அல்லர்.

இந்தப் பாத்திரங்கள் எப்படிப் பேசியிருக்கலாம், எப்படி நடந்திருக்கலாம், எப்படி உணர்ச்சிகளை வெளிப்படுத்தியிருக்கலாம் என்று கற்பனை செய்தது மட்டுமே கல்கியின் பணியாக இருந்திருக்கிறது. காஞ்சியிலிருந்து தஞ்சைக்கு, பழையாறையிலிருந்து இலங்கைக்கு, இலங்கையிலிருந்து தஞ்சைக்கு என மூன்று பயணம் மேற்கொள்ளும் வந்தியத்தேவன் இடையில் எதிர்கொள்ளும் அனுபவங்கள் புனையப்பட்டவை. ஒரு புனை பயண அனுபவங்களின் ஊடாக ஒரு பேரரசின் சரித்திரத்தைச் சொல்வதுதான் பொன்னியின் செல்வனின் கட்டமைப்பு.

கொஞ்சம் யோசித்துப் பார்க்கலாம். நம்மில் எத்தனைபேர் பள்ளி, கல்லூரிகளில் சரித்திரப் பாடங்களை ஆழ்ந்து கவனித்திருக்கிறோம்? காரணம், அவை எதுவும் பொன்னியின் செல்வனைப் போல் சுவாரசியமாக எழுதப்படவில்லை என்பதுதான். சுவாரசிய வாசிப்புக்கான சந்தர்ப்பங்கள் மிகுந்த ஒரு சரித்திரத்தில் கவனமாக அதை மட்டும் விலக்கி வைத்துவிட்டு சக்கைகளைத் தொகுத்து அளிக்கிறது நமது பாடத்திட்டம்.

மிகச் சரி. எனில், பொன்னியின் செல்வனை ஒரு நல்ல கல்வி நூல் என்று சொல்லிவிடலாமே? என்றால், கல்வி நூலில் புனைவுக்கு இடமில்லை. எனவே சுவாரசியத்துக்கும் இடமில்லை. தமிழர்களுக்கு சரித்திரத்தின்பால் ஆர்வம் ஏற்பட கல்கியின் எழுத்துகள் மிக முக்கியமான காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது. மன்னர்களின் சரித்திரத்தை எழுதியதுதான் அவர் செய்த பாவம் என்றால் அவர் ஒரு பாவியாகவே இருந்துவிட்டுப் போவதில் ஒரு பிரச்னையும் இல்லை. ஒரு காலக்கட்டத்தின் அரசு அமைப்பு, நிர்வாக முறை, ஆட்சியாளர்களின் மனோபாவம், சட்டதிட்டங்கள், அரசியல் உட்பகை, அண்டை நாடுகளுடன் உறவு அல்லது பகை, அந்தக் காலக்கட்டத்து ராஜதந்திரங்கள் போன்றவற்றை இன்றைய தலைமுறை தெரிந்துகொள்ள வேறு என்ன வழி உள்ளது?

எதற்கு சரித்திரம் என்று கேட்பீர்களானால் பேச்சே கிடையாது. எதற்கு இலக்கியம் என்றேகூடக் கேட்டுவிடலாம்.

இவற்றைக் கல்கி புனைந்து அளித்திருப்பாரேயானால் இந்தளவு இந்தக் கதை காலம் கடந்து வந்திருக்க வாய்ப்பில்லை. சரித்திரத்தை ஜோடிக்காமல் அப்படியே கலையாக்கியிருப்பதுதான் அவரது எழுத்தின் வெற்றி. அவரளவு மற்ற சரித்திரக்கதை எழுத்தாளர்கள் நிலைக்காதிருப்பதற்கும் இதுவே காரணம். ஒரு வரி சரித்திரத்தை எடுத்துக்கொண்டு ஆயிரம் பக்கத்துக்கு இழுக்கும் பணியல்ல, கல்கி மேற்கொண்டது. ஜேஜே சில குறிப்புகளில் ஒரு வரி வரும்.  ‘கோட்டாறில் ஒரு சண்டை நடந்ததாமே? அது பற்றி வாகான ஒரு சங்கப்பாடல், அல்லது பாடலில் ஒரு வரி கிடைத்தால் போதும். ஒரு பிடி பிடித்தால் ஆயிரம் பக்கங்களுக்கு இழுத்துவிடுவேன்’ என்பார் சரித்திரக் கதைச் செம்மல் திருச்சூர் கோபாலன் நாயர். சுரா கல்கியை நினைத்தேகூட இந்த வரியை எழுதியிருக்கலாம். ஆனால் பொன்னியின் செல்வனைப் பொருத்தவரை, ஒரு வரியல்ல; ஓர் அரச தலைமுறையின் அசல் வாழ்க்கையை அப்படியே எடுத்துக்கொண்டு, காட்சிப்படுத்தலுக்காகப் புனைவின் உத்திகளைக் கையாண்டு எழுதப்பட்டதுதான் அது.

0

இனி இது இலக்கியமா இல்லையா என்று பார்க்கலாம். திரும்பவும் அதே கேள்வி. எது இலக்கியம்?

*    அனுபவங்களின் அடிப்படையில் படைக்கப்படுவது – ஆசிரியருக்கு இதில் நேரடி அனுபவமில்லை. ஆனால் ஆதாரங்களின் அடிப்படையில் எழுதப்பட்டதுதான்..
*    ஜோடனையற்றது. மேல் பூச்சுகள் இல்லாதது – ஜோடனை கிடையாது. மேல் பூச்சுகள் உண்டு.
*    தன் காலத்தைப் பிரதிபலிக்கக்கூடியது – எடுத்துக் கொண்ட காலத்தைப் பிரதிபலிக்கிறது.
*    வாசகனை சக படைப்பாளியாக ஏற்று அவன் பங்களிப்பைப் பெரிதும் கோருவது – இது கிடையாது. சைபர்.
*    சத்தமில்லாதது. பிரசாரமற்றது – இதுவும் சைபர். கல்கியில் கொஞ்சம் சத்தம் அதிகம்.
*    நீதி சொல்லாதது – ஒரு நீதியும் கிடையாது.
*    கதாசிரியன் குறுக்கே வரமாட்டான். பாத்திரங்கள் மட்டுமே வாழும். – வாய்ப்பே இல்லை. கல்கி கிட்டத்தட்ட ஒரு கதாபாத்திரம்
*    வாசிக்கும்போது வினாக்களையும் முடித்ததும் மாபெரும் பரவசத்தையும் ஒருங்கே தரக்கூடியது – ஆம். அது உண்டு.
*    திரும்பத் திரும்ப எடுக்கும்போதெல்லாம் புதிய புதிய தரிசனங்கள் தரக்கூடியது – வாய்ப்பில்லை.
*    பிராந்திய, தேசிய, சர்வ தேசிய எல்லைகளைக் கடந்து மனித குலத்துக்கே பொதுவான விஷயங்களை மட்டும் பேசுவது – மனித குலமல்ல; அரச குலம் இதில்.
*    என்றும் வாழ்வது. – இன்றுவரை வாழ்கிறது.

ஆக பதினொன்றுக்கு ஏழு மார்க்.

ஆனால் பதினொன்றுக்குப் பதினொன்றும் வாங்கிய கதைகளெல்லாம் இருக்கின்றன. அவற்றில் எத்தனை காலம் கடந்து நிற்கின்றன? கல்கி ஏன் நிற்கிறார்? நீங்கள் திட்டுவதற்கும் உங்களுக்குக் கல்கிதான் தேவைப்படுகிறார், பாராட்டவும் அவர்தான் தேவைப்படுகிறார். இது எதனால்? மக்கள் ரசிப்பது ஒரு பொருட்டே இல்லை, கலை வேறு என்று டகால்டி காட்டுவது இங்கே உதவாது. எழுதி, பிரசுரமாகிவிட்டால் அது மக்களுக்கானதுதான். ஒரு படைப்பை உயர்ந்தது என்று நிறுவுவதற்காக மக்களை மூடர்கள் என்று சொல்வது சரியான அணுகுமுறையல்ல. இது தேர்தலில் தோற்கும்போதெல்லாம் கலைஞர் முரசொலியில் தமிழனின் சுரணையைக் கேள்விக்குள்ளாக்குவது போன்றது. உயர்ந்த படைப்புகளுக்கு சிபாரிசுகள் அநாவசியம். அவை தன்னால் வளரும், தன்னால் வாழும்.

இதே கல்கியின் சமூகக் கதைகளில் எது ஒன்றும் இந்தளவு உயர்ந்த அங்கீகாரத்தைப் பெறவில்லை, அவரது லட்சக்கணக்கான வாசகர்களிலேயே பெரும்பாலானவர்களால் நிராகரிக்கப்பட்டவை என்பதை நினைவுகூரவேண்டும். வெகுஜன வாசகர்களின் இயல்பு, அவர்கள் எந்த ஒரு படைப்பையும் நுணுக்கமாக அணுகி, சிறப்புகளைத் தனித்தனியே கவனித்து ரசிப்பதில்லை. மிக நேரடியாக மனத்தைத் தொடும் ஒரு படைப்பு அவர்களுக்கு முக்கியமானதாகிறது. அதன் உண்மைத்தன்மையின் சதவீதம் சொற்களற்ற வடிவில் அவர்கள் மனத்தில் கொஞ்சம் கொஞ்சமாகப் பதிகிறது. அது முக்கியமானதாகிறது. சந்தோஷம், துக்கம், பரவசம், புதிய தகவல்கள், தெரிந்த தகவல்களின் தெரியாத பரிமாணங்கள், புதிய கள அனுபவம், வாழ்க்கை முறை போன்றவற்றில் ஏதேனும் ஒன்றோ, எல்லாமோ முழுமையாக வழங்கப்பட்டிருந்தால், அது அவர்களுக்கு முக்கியமானதாகிறது. அனைத்துக்கும் மேலாக, தங்கள் மனம் வழங்கும் மதிப்பீடுகள், தீர்ப்புகளுடன் கதாசிரியன் வழங்கும் தீர்ப்பு ஒத்துப் போகுமானால், அது அவர்களுக்கு முக்கியமாகிறது. படைப்பை அவர்கள் வாழவைக்கிறார்கள்.

0

தமிழகத்தில் ஒரு மோசமான வியாதி பலகாலமாக இருக்கிறது. சிற்றிதழ் சார்ந்த எழுத்தாளர்கள் எழுதுவதெல்லாம் அமர இலக்கியம், வெகுஜனப் பத்திரிகைகளில் எழுதுவோர் எழுத்து வியாபாரிகள், இலக்கியத்துக்கும் அவர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதே அது.

வெகுஜனப் பத்திரிகைகளில் குப்பைகளுக்குப் பஞ்சமில்லை என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. அதே சமயம் நல்ல இலக்கியங்களும் வெகுஜன இதழ்களில் தொடர்ந்து வெளிவந்திருக்கின்றன என்பதை மறுக்க இயலாது.

பொன்னியின் செல்வனைப் பொருத்தவரை, எந்த முன்மாதிரிகளும் இல்லாத காலத்தில் ஒரு சரித்திரக்கதைக்கான வடிவத்தைத் தன்னியல்பாகத் தேடிக்கொண்டு எழுதப்பட்ட கதை அது. இலக்கியத்துக்கு ஒவ்வாத அம்சங்கள் பல அதில் இருந்தாலும் முற்றிலும் பொழுதுபோக்குக் கதை என்று ஒதுக்கிவிட முடியாத படைப்பு என்றே நான் கருதுகிறேன். அக்கதையின் மிகப் பலவீனமான பல அம்சங்களேகூட சரித்திரத்துக்கு நேர்மையாக இருக்க விழைந்ததன் காரணத்தால் உருவானதுதான்.  நீலகண்ட சாஸ்திரியிடம் போக முடியாதவர்கள் வெகு சுலபமாக கல்கியைப் படித்துவிட்டு சோழர்  கால ஆட்சிமுறை அடிப்படையை அறிந்துகொள்ள இயலும்.

ஆயிரம் இலக்கண வரையறைகள் வகுத்தாலும் காலம் கடந்து நிற்கும் ஒரு படைப்பே பேரிலக்கியமாக அடையாளம் காணப்படுகிறது. இந்தக் காலம் கடந்து நிற்பதென்பது முற்று முழுதாக வாசகர்களின் தீர்ப்பைச் சார்ந்தது. மக்கள் கண்ட குப்பைகளையும் அங்கீகரித்துவிடுவார்கள் என்பது விதண்டாவாதம். தாற்காலிக அங்கீகாரங்கள் ஒரு பொருட்டே அல்ல. தலைமுறை தோறும் வாசிக்கப்பட்டு, நேசிக்கப்பட்டு வருகிற ஒரு படைப்பு உண்மையில் ஓர் இலக்கியமே இல்ல, வெறும் கமர்ஷியல் குப்பை என்று சொல்வது ஆசிரியரையல்ல; வாசகர்களை அவமதிப்பதே அல்லாமல் வேறல்ல.

56 comments

புத்தகப் பட்டியல்

யதி – புதிய நாவல்

அமேசான் ஆசிரியர் பக்கம்

முந்தையவை

தொகுப்பு

புதியவை

வகை

மின்னஞ்சலில் பெற