கொள்ளை கொள்ளும் பூமி

பண்பலை வானொலி, தொலைக்காட்சி, செய்தித்தாள், இணையம், மொபைல் அனைத்திலிருந்தும் நான்கு நாள்கள் விடுதலை பெற்று குடும்பத்துடன் கன்யாகுமரிக்குச் சென்றிருந்தேன். நானறிந்த உலகில் குமரியைக் காட்டிலும் மன எழுச்சியும் பரவசமும் அளிக்கக்கூடிய மண் வேறில்லை.

கன்யாகுமரி என்னும் தென் முனையை ஒட்டிய சிறு நகரம் ஒரு பெரிய குப்பைத் தொட்டி. சென்னையைக் காட்டிலும் மோசமான பிராந்தியம் அது. அந்தச் சில கிலோ மீட்டர்கள் பரப்பளவுக்கு வெளியே மாவட்டம் முழுதும் எம்பெருமான் மரங்களாலும் மலைகளாலும் எழுதிய மரபுக் கவிதைகளே என் விருப்பம். தனியாக எத்தனையோ முறை போய் சுற்றியிருக்கிறேன். அங்கே உள்ள என் நண்பர்களுக்குக் கூடச் சொல்லாமல், நியமித்துக்கொண்ட அநாதையாகத் திரிந்து மகிழ்ந்திருக்கிறேன். சுந்தர ராமசாமி உயிருடன் இருந்த காலத்தில் ஒரு சமயம் அவர் வீட்டு முன்னால் போய் வெறுமனே சில மணிநேரம் நின்று பார்த்திருந்துவிட்டு அவரைச் சந்திக்காமலே திரும்பியிருக்கிறேன். விவேகானந்த கேந்திரத்தின் பரிசுத்தத்திலும் அமைதியிலும் எழிலிலும் நெக்குருகி, பித்தாகி நின்றிருக்கிறேன். ஒரு சர்ப்பம்போல் சுற்றி வளைத்து ஓடும் நதியின் நடுவே பிரம்மாண்டமாக, ஓர் உயிருள்ள மனிதனைப் போலவே படுத்திருக்கும் ஆதிகேசவப் பெருமாளின் முன்னால் அடித்துப் போட்டாற்போல் கிடந்திருக்கிறேன். திற்பரப்பும் உதயகிரியும் திருவனந்தபுரம் போகும் சாலையும் களியக்காவிளையைச் சுற்றிய பகுதிகளின் கொட்டிக் குவித்த பேரெழிலும் மனித மனத்தின் அத்தனை ஆணவங்களையும் அடித்து நொறுக்கிவிடவல்லவை என்பது என் எண்ணம். இயற்கையைக் காட்டிலும் பெரியது ஒன்றில்லை. குமரியைக் காட்டிலும் அதை முற்றிலும் ஏந்தியிருக்கும் பகுதி வேறில்லை.

பாரதத்தின் கடைசி ரயில்வே ஸ்டேஷன்

இந்தப் பயணத்தின் நோக்கம் என் மகளுக்கு இவற்றை அறிமுகப்படுத்த வேண்டும் என்பதுதான். எளிமையாக, உதயகிரிக் கோட்டையிலிருந்து ஆரம்பித்தேன். கானகம் அவள் கண்டிராதது. கதைகளில் மட்டுமே அவளுக்குக் காடு தெரியும். அதிக சிரமம் தராத எளிய, சிறிய காட்டிலிருந்து அவளுக்கு ஆரம்பிக்க நினைத்ததற்கு உதயகிரி மிகப் பொருத்தமாக இருந்தது. மரங்கள் அடர்ந்த கானகத்தின் வினோதமான மொழி, வெறும் சப்தரூபங்களாகச் செவியில் சொட்டிக்கொண்டிருக்க, முதுகில் மாட்டிய டோரா பேக்-பேக்குடன் தன்னை அவள் டோராவாகவே கருதிக்கொண்டு பக்கவாட்டில் பார்த்தபடியே முழுத் தொலைவையும் நடந்து கடந்தாள். காசு கொடுத்து வாங்கவேண்டிய பொருள்கள் என அவள் மனத்தில் பதிந்திருந்த பல காய்களும் கனிகளும் எடுப்பாரற்று உதிர்ந்து கிடந்த காட்சி நிச்சயமாக ஓர் அற்புதம். வாழைக் குலைகளும் எலுமிச்சை, புளியங்காய்களும் அன்னாசியும் மாங்காயும் தேங்காயும் நுங்கும் இன்னபிறவும் காய்க்கிற பொருள்கள் என்பதைத் தெரிந்துகொள்ள எழுநூறு கிலோமீட்டர் போகவேண்டியிருப்பது சென்னைவாசிகளின் விதி.

ரப்பர் தோட்டங்களைக் கடந்து செல்லும்போது ரப்பர் பால் எடுக்கும் விதத்தைச் சொல்லி, ஓரிடத்தில் பெரிய பெரிய தோலாக ரப்பர் எடுத்துச் செல்லப்படுவதைக் காட்டி அது உருப்பெறும் கதையை விவரித்தபோது மிகுந்த பரவசமாகிவிட்டாள். அந்தப் பரவசத்தை அப்படியே தேக்கி வைத்து மாத்தூர் பாலத்தில் அவிழச் செய்தேன். இரு பெரும் மலைகளை இணைக்கும் உயரமான, மிக நீண்ட பாலம். கீழே மல்லாக்கப் படுத்த பெண்ணைப் போல் ஒரு நதி. கண் படும் தொலைவெல்லாம் பச்சையின் பல்வேறு நிறங்கள். இயற்கை, என் மகளின் பரவசத்தைப் போலவே பேரழகானது.

திற்பரப்பில் சுகமாகக் குளித்தோம். காற்றில் ஆடி உலரும் பத்தாறு வேஷ்டி மாதிரி அடக்கமான அருவி. கொஞ்ச நாள் முன்னால்தான் ஒரு பெரிய இலக்கிய கோஷ்டி வந்து குளித்துவிட்டுப் போயிருக்கிறது என்ற எண்ணம் எழுந்ததைத் தவிர்க்கமுடியவில்லை. குமரியில் கொஞ்சம் மழை பெய்துகொண்டிருந்தபடியால் அருவியில் தண்ணீர் அமர்க்களமாக வந்தது. பச்சைக் குதிரை தாண்டுவதற்கு ஆயத்தமாக நிற்பதுபோலத் தலையைக் குனிந்து முதுகு காட்டி நின்றுவிட்டால் போதும். தொம்தொம்மென்று நீராற்றல் மிதித்துவிடுவது பரம சுகமான அனுபவம். [என் கூந்தலின் இருப்பு கருதி, தண்ணீருக்குத் தலை கொடுப்பதைக் கொஞ்சம் குறைத்தேன் என்பது இங்கே உள்ளுரை பாடம்.] கண் எரியும்வரை குளித்துவிட்டு சுடச்சுட ஒரு தேநீர்.

திற்பரப்பு அருவி

நியாயமாக ஒரு ஹோட்டலைத் தேடியிருக்கவேண்டும். அன்று காலை டிபனுக்குப் பிறகு ஒன்றுமே சாப்பிட்டிருக்கவில்லை. சாப்பிடத் தோன்றவில்லை என்பதுதான் விஷயம். பத்மநாபபுரம் அரண்மனையில் இரண்டாயிரம் பேர் உட்கார்ந்து சாப்பிடக்கூடிய டைனிங் ஹாலையும் கல்லால் செய்யப்பட்ட பிரம்மாண்டமான சாம்பார் அண்டாக்களையும் நூறு பேருக்கு ஏககாலத்தில் சட்னி அரைக்கக்கூடிய உரல்களையும் பார்த்ததிலேயே பசி போய்விட்டிருந்தது. ‘ரெண்டாயிரம் பேருக்கு சாப்பாடு போடுவார்னா ராஜா எவ்ளோப்பா சம்பாதிச்சிருப்பார்?’ என்று என் மகள் கேட்டாள். ஒரு லட்சத்து எழுபத்தி ஆறாயிரம் கோடி என்று ஏன் சொன்னேன் என்று தெரியவில்லை.

இரவு நடை சாத்தும் நேரத்தில் திருவட்டார் போய்ச் சேர்ந்தோம். கோயிலில் கூட்டமில்லை. குளுமையும் இருளும் பெயரறியா வண்டுகளின் சத்தமும் கோயிலின் பிரம்மாண்டமும் ஆதிகேசவன் இன்னும் பத்தடி தொலைவில் படுத்திருக்கிறான் என்னும் எண்ணம் உண்டாக்கிய கிளர்ச்சியும் அபாரமான நிசப்தமும் விவரிக்க முடியாத பரவசத்தை அளித்தன. என் மகளுக்கு விஷ்ணுபுரத்தின் ஒருவரிக் கதையைச் சொன்னேன். மிகுந்த ஆர்வமாகிவிட்டாள்.

‘பெருமாள் புரண்டு படுப்பாரா?’

‘ஆமா. ஒரு யுகம் முடியும்போது புரண்டு அந்தப்பக்கம் திரும்பிப் படுத்துப்பார்.’

‘அப்பொ என்ன ஆகும்?’

‘பிரளயம் வரும்.’

‘பிரளயம்னா நோவா தாத்தா இருந்தபோது வந்த மாதிரியா?’

ஆதிகேசவன் கதைக்கு முன்னால் அவளுக்கு நோவாவின் கதை தெரியும் என்பதை ஒரு கணம் மறந்திருந்தேன். இதைக் கண்டிப்பாக என் நண்பர் அரவிந்தன் நீலகண்டனிடம் சொல்லவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். அவர் கொதித்துக் குமுறுவதைப் பார்ப்பது, என் குழந்தையின் குதூகலத்தைப் பார்ப்பதற்கு நிகரானதொரு அனுபவம்.

கோயிலிலிருந்து புறப்படும்போது இரவு ஒன்பது மணி ஆகிவிட்டது. என் சகோதரியின் நண்பர் தங்ககுமார் முட்டத்தில் அவர் வீட்டுக்கு இரவு உணவுக்கு வரவேண்டுமென்று சொல்லியிருந்தார். பத்து மணிக்குமேல் முட்டம் சென்று அடைந்தோம். அலைந்த களைப்பு, குளித்த களைப்பு எல்லாம் சேர்ந்து கண்ணை அழுத்த ஆரம்பித்திருந்தது. ஆப்பமும் இடியாப்பமும் செவ்வாழையும் நன்னாரி சர்பத்தும் ததும்பும் அன்புமாக இரவு உணவை முடித்து விடைபெற்று அறைக்குச் சென்று சேர்ந்து விழுந்தபோது நேரம் என்ன ஆகியிருந்தது என்று தெரியவில்லை.

மறுநாள் காலை தங்கியிருந்த ஹோட்டல் அறையை காலி செய்துவிட்டு விவேகானந்த கேந்திரத்துக்கு இடம் பெயர்ந்தேன். மூன்று நாள்களுக்கு முன்பதிவு செய்யச் சொல்லி மூன்று மாதங்கள் முன்னரே அநீயிடம் கேட்டிருந்தேன். ஏதோ பாகவத கோஷ்டி மொத்தமாக அறைகளை எடுத்துக்கொண்டு என்னை ஒரு நாள் வெளியே தள்ளிவிட்டது. உண்மையில் கன்யாகுமரி என்பது எனக்கு விவேகானந்த கேந்திரத்தில்தான் தொடங்குகிறது. அந்த இடத்தின் சான்னித்தியம் விவரிப்புக்கு அப்பாற்பட்டது. எருமைகளையும் பன்றிகளையும் மட்டுமே சாலையில் கண்டு பழகிய சென்னைவாசிக்கு மான்களும் மயில்களும் உலவும் கேந்திரச் சூழல் நிச்சயமாகப் பரவசம் தரக்கூடியது. பல்லாண்டுகளுக்கு முன்னால் முதல் முதலாக என் நண்பன் ஆர். வெங்கடேஷுடன் கேந்திரத்துக்குச் சென்று ஒரு வார காலம் தங்கினேன். அப்போது இருவரும் ஒரு நாவல் எழுதும் பொருட்டு அங்கே போயிருந்தோம். அதன்பின் கன்யாகுமரியும் கேந்திரமும் என் நிரந்தரக் கனவுகளில் ஒன்றாகிவிட்டன.

என் மகளுக்குப் பார்த்த மாத்திரத்திலேயே விவேகானந்த கேந்திரத்தைப் பிடித்துவிட்டது. அதிகாலை தட்டியெழுப்பி சூரிய உதயத்துக்கு அழைத்ததும் சட்டென்று எழுந்து கூலிங் கிளாஸ் ஒன்றை மாட்டிக்கொண்டு புறப்பட்டுவிட்டாள். மரங்களும் குடில்களும் உடன்வர, வளைந்து வளைந்து சென்ற பாதையெங்கும் குதித்தாடியபடியே வந்தாள். கடல் நீரில் கால் நனைய நின்று திகட்டத் திகட்ட சந்தோஷப்பட்டாள். அன்றுதான் பாறைக்கும் அழைத்துச் சென்றேன். பாறையில் விவேகானந்தருக்கு மண்டபம் எழுப்ப ஏக்நாத் ரானடே எடுத்துக்கொண்ட முயற்சிகளைக் கதையாகச் சொல்லிக்கொண்டு வந்தேன். பின்னர் அவரது வாழ்க்கை வரலாற்றைச் சித்திரிக்கும் புகைப்படக் கண்காட்சிக் கூடத்துக்கு [கங்கோத்ரி] அழைத்துச் சென்றேன்.

ஏக்நாத் ரானடே ஒரு மராட்டியர். தமிழ் தெரியாது அவருக்கு. கன்யாகுமரியில் ஹிந்து நாடார்கள் உதவியுடன்தான் அவரால் நூறு ஏக்கர் நிலத்தை வாங்கி கேந்திரத்தை நிறுவ முடிந்திருக்கிறது. காங்கிரஸ் முதல்வர் பக்தவத்சலம் எதிர்த்தாலும், நாத்திகரான திமுக தலைவர் அண்ணாத்துரையின் உதவியைப் பெற்று பாறையில் விவேகானந்தருக்கு ஒரு நினைவாலயம் எழுப்ப முடிந்திருக்கிறது. இடதுசாரித் தலைவர்களைக்கூட இந்த ஆன்மிகப் பணியில் இழுத்துவிடக்கூடிய சாமர்த்தியம் அவரிடம் இருந்திருக்கிறது. இதெல்லாமே மத மாற்றச் சம்பவங்களுக்குத் தடுப்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளே என்பது அனைவருக்கும் தெரியும். அவரது இம்முயற்சி வெற்றி கண்டாலும் குமரியில் மத மாற்றங்களுக்கும் இன்றுவரை குறைவில்லை என்பது ஒரு விசித்திரம்.

ஒரு ஆட்டோவில் ஏறி நூறடி போவதற்குள் கண்டிப்பாக இரண்டு தேவாலயங்களாவது தென்பட்டுவிடுகின்றன. ஊரில் ஓடுகிற ஒவ்வொரு ஆட்டோவிலும் டாக்சியிலும் சிலுவைச் சின்னம் தொங்குகிறது. கண்ணில் படும் கல்வி நிறுவனங்களும் மருத்துவமனைகளும் கிறித்தவ நிறுவனங்களாகவே இருக்கின்றன. அத்தனை டீக்கடைகளிலும் இயேசுநாதர் போட்டோ இருக்கிறது. ஒரு சுவர் மிச்சமில்லாமல் இயேசு அழைத்துக்கொண்டிருக்கிறார். இவை இயல்பாக இல்லாமல் ஒரு குழந்தையின் கவனத்தையும் ஈர்க்கும்படி இருப்பதுதான் முக்கியம். ‘இது கிறிஸ்டியன் ஊராப்பா?’ என்று என் மகள் கேட்டாள். ஓடிக்கொண்டிருந்த டாக்சியை ஓட்டிக்கொண்டிருந்தவர் ஒரு கிறித்தவர். எனவே, அந்தக் கணத்தில் அவள் வினாக்களை நிறுத்த கே. பாலசந்தர் பாணியில் ஒரு பதிலளித்துவிட்டு அமைதியாக இருந்துவிட்டேன் என்றாலும் எதற்காக இவர்கள் இப்படி கோககோலா, பெப்சி மாதிரி பிராண்டிங்கில் இத்தனை தீவிரம் செலுத்துகிறார்கள் என்று யோசிக்காமல் இருக்கமுடியவில்லை.

அன்று மாலை குமரி முனையிலிருந்து சில கிலோ மீட்டர்கள் தொலைவில் உள்ள கோவளம் என்னும் இடத்துக்கு சூரிய அஸ்தமனம் பார்ப்பதற்காகச் சென்றோம். அருமையாக வெங்காயம், மிளகாய்ப்பொடி, மாங்காய்த் தூளெல்லாம் போட்டு சுடச்சுட வேகவைத்த வேர்க்கடலை கிடைத்தது. உதயத்தைக் காட்டிலும் அஸ்தமனம் இன்னும் கவித்துவமாக இருக்கிறது. ஒரு கிழக்கு லோகோ நிறத்தில் பந்தாகக் கடலில் இறங்கும் சூரியன், குளித்து முழுகி அந்தப் பக்கம் மறுநாள் காலை எழுந்திருக்கும்போது எப்படியோ இருபது சதவீதம் கூடுதலாக மஞ்சளும் பதினைந்து சதவீத சியானும் சேர்த்துக்கொண்டுவிடுகிறது. வானமும் கடலும் நிகழ்த்தும் வர்ணஜாலங்கள் ஃபோட்டோஷாப் அறியாதவை.

‘காவி’ ய நாயகன் அநீ

பயணத்தின் கடைசி நாளில் அதிகம் சுற்ற முடியவில்லை. முன்னர் நடந்த களைப்பும் கால் வலியும் அடித்துப் போட்டுவிட்டன. சும்மா ஒப்புக்கு வட்டக்கோட்டைக்கு மட்டும் போய் கொஞ்சம் போட்டோ எடுத்துக்கொண்டு திரும்பிவிட்டேன். புறப்படும் முன்னர் அரவிந்தன் வந்தார். காவி டிஷர்ட்டும் காதில் செல்போனுமாக மிகவும் பிசியாக இருந்தார். கொஞ்சநேரம் உலக விஷயம் பேசிக்கொண்டிருந்துவிட்டுப் புறப்பட்டுவிட்டோம்.

மாலை ரயில் ஏறியபோது மழை தூற ஆரம்பித்தது. ஆரல்வாய்மொழியைத் தாண்டியதும் ரயில் ஜன்னல்களில் ஊசிபோல் மழைச்சாறல் விழத் தொடங்கியது. ‘அப்பா, மழை!’ என்றாள் என் மகள். சற்று இடைவெளிவிட்டு, ‘ஜவஹர் வித்யாலயாவ கன்யாகுமரிக்கு மாத்தமுடியுமாப்பா?’ என்று கேட்டாள்.

47 comments

புத்தகப் பட்டியல்

யதி – புதிய நாவல்

அமேசான் ஆசிரியர் பக்கம்

முந்தையவை

தொகுப்பு

புதியவை

வகை

மின்னஞ்சலில் பெற