விழா மாலைப் போதில்…

ஆல்பர்ட் தியேட்டரின் கொள்ளளவு 1300 பேர் என்று சொன்னார்கள். அரங்கு நிறைந்து பலபேர் நின்றுகொண்டும் இருந்தார்கள். சரியாக ஏழு மணி என்று அறிவித்திருந்தும் நிகழ்ச்சி தொடங்கக் கிட்டத்தட்ட எட்டு மணியானதற்கும் யாரும் முகம் சுளிக்கவில்லை. மேடையில் இரண்டு முழுநீள வரிசைகளை ஆக்கிரமித்துப் பிரபலங்கள் உட்கார்ந்திருந்ததும், ஒருத்தர் விடாமல் அத்தனை பேரும் மைக்கைப் பிடித்து வாழ்த்துச் சொன்னதும்கூட யாருக்கும் போரடித்ததாகத் தெரியவில்லை.

ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு பரபரவென்று படங்கள் வெளிவரத் தொடங்கிவிட்டாலும், ஒரு திரைப்பட விழா, பிரமுகர்களுக்கான விழாவாக அல்லாமல் மக்கள் விழாவாக நடப்பது இதுதான் முதல். அத்தனை பேருக்கும் அந்த மகிழ்ச்சி வெகு காலத்துக்குப் பிறகு கிடைத்தது ஒரு காரணமென்று நினைக்கிறேன். சுமார் இருபதுக்கும் மேற்பட்ட இயக்குநர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் இணைந்து வெளியிட, ‘தம்பி வெட்டோத்தி சுந்தரம்’ திரைப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு நிகழ்ச்சி சற்றுமுன் சிறப்பாக நடந்து முடிந்தது.

பேசியவர்களில் கேயார், கலைப்புலி தாணு, இயக்குநர் சீனு ராமசாமி மூவரின் பேச்சும் எனக்குப் பிடித்தது. ஒரு திரைப்படம் எடுப்பதில் உள்ள பல்வேறு விதமான சிரமங்களில் ஒரு சில முக்கியமானவற்றைக் குறிப்பிட்டுக் காட்டிய இவர்கள், புதிய தயாரிப்பாளர்கள் அச்சப்படாமல் இயங்கத் தூண்டும் விதமாகத் தம் பேச்சை அமைத்துக்கொண்டது, ஒரு வகையில் திரையுலகத் தேவை.

நான் மேடைக்குப் போவதாகவே இல்லை. திட்டத்திலும் அது இல்லை. வெளியிட்டவுடன் இறங்கிவந்து உட்கார ஒரு நாற்காலியில் துண்டு போட்டு வைத்திருந்தேன். எதிர்பாராவிதமாகக் கரணும் இயக்குநரும் திட்டமிட்டு திரும்ப மேலே அழைத்துவிட்டார்கள். சம்பிரதாயமான இரு வரிகளுடன் முடித்துக்கொண்டாலும், எழுதியவன் என்னும் முறையில் இயக்குநருக்கு அடுத்து படத்தை முதல் முதலில் மனத்துக்குள் பார்த்தவன். சில விஷயங்களை நான் சொல்லியிருக்கலாம். நேரம் மிகவும் ஆகிவிட்டபடியால் விட்டுவிட்டேன்.

ஒரு விபத்தில் அடிபட்டு ஒன்றரை மாதங்கள் படுக்கையில் கிடந்தபோதுதான் இப்படத்தின் முதல் வர்ஷன் வசனங்களை எழுதினேன். தினமும் காலை ஒன்பது மணிக்கு இயக்குநர் வடிவுடையான் என் வீட்டுக்கு வந்துவிடுவார். ஆபீஸ் மாதிரி வேலை நடக்கும். மதியம் மூன்று மணி முதல் ஐந்து வரை இடைவேளை. திரும்பவும் வருவார். இரவு பத்து வரை எழுதுவேன். அவரை நடிக்கச் சொல்லிப் பார்த்து எழுதுவது ஒரு பேரனுபவமாக எனக்கு இருந்தது. சலிக்காமல் ஒன்றரை மாதங்கள் அப்படி எழுதிய காட்சிகளை மூன்று மாதங்களுக்குப் பிறகு முற்றிலும் மாற்றி வேறொரு விதமான திரைக்கதையைச் சொன்னார். திரும்பவும் எழுதினேன். படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்னர் மூன்றாவது முறையாக ஒருமுறை திருத்தம் செய்ய அமர்ந்து கிட்டத்தட்ட மீண்டும் முழுதும் மாற்றி எழுதும்படியானது.

அதோடு முடிந்ததா என்றால் இல்லை. முதல் ஷெட்யூல் முடித்துவிட்டு வந்த பிறகு திரும்பவும் உட்கார்ந்து மிச்சமுள்ள காட்சிகளை மேலும் மேம்படுத்த உழைத்தோம். கனகவேல் காக்கவுக்கு நான் எழுதியது பத்து நாள். இந்தப் படத்துக்குப் பத்து மாதங்கள். கன்யாகுமரி ஸ்லாங்குக்காக தனியே ஹோம் ஒர்க்கெல்லாம் செய்தது மறக்கமுடியாத அனுபவம்.

கிட்டத்தட்ட வில்லன் மாதிரி தோற்றம் தரக்கூடிய – ஆனால் கண்டிப்பாக வில்லன் இல்லை – ஒரு முக்கியமான கதா பாத்திரத்தில் இப்படத்தின் தயாரிப்பாளர் செந்தில்குமாரே நடித்திருக்கிறார். [படம் வெளிவருமுன்னரே அவருக்குப் பல படங்களில் நடிக்கவும் அழைப்பு வந்துவிட்டது.] ரொம்ப ஆச்சரியகரமான மனிதர். ஒரு ரைட்டருக்கும் தயாரிப்பாளருக்கும் சம்பளம் தவிர வேறென்ன உறவு இருந்துவிட முடியும்? ஆனால் செந்தில்குமார் தயாரிப்புக் காலம் முழுதும் ஒரு நண்பனைப் போலப் பழகியது மறக்கவியலாத அனுபவம். ஸ்பாட்டிலிருந்து போன் செய்வார். ‘சார், இந்த வடிவு உங்க டயலாகையெல்லாம் மாத்தறான் சார். கொஞ்சம் என்னன்னு கேளுங்க’ என்பார். ‘உரக்கப் பேசாதிங்க சார். உங்கள மாத்திடப்போறார்’ என்பேன். தரத்தில் சற்றும் சமரசம் விரும்பாத இயக்குநரும், எந்தச் செலவுக்கும் அஞ்சாத தயாரிப்பாளரும் அமைந்தது வெட்டோத்தி சுந்தரத்தின் அதிர்ஷ்டம்.

முதல் பிரதி தயாரானதும் படத்தைப் பார்த்த சில சினிமா முக்கியஸ்தர்கள், பருத்திவீரனுக்குப் பிறகு பேசவைக்கப்போகிற படம் என்று சொன்னார்கள். சந்தோஷமாக இருந்தது. இன்று விழாவிலும் வேறு சிலர் [பிறகு படம் பார்த்தவர்கள்] அதையே சொன்னார்கள்.

நான் தனிப்பட்ட முறையில் வற்புறுத்தி அழைத்தது பார்த்தசாரதியை மட்டும்தான். ஆனால் என் மனத்துக்கு நெருக்கமான நண்பர்கள் அத்தனை பேரும் இன்று விழாவுக்கு வந்திருந்து வாழ்த்தியது என் பிரத்தியேக சந்தோஷம். உண்மைத் தமிழன், யுவ கிருஷ்ணா, அதிஷா இன்னும் பல இணைய நண்பர்கள் வந்திருந்தார்கள். சற்றும் எதிர்பாராதது, என் மதிப்புக்குரிய எழுத்தாளர் விமலாதித்த மாமல்லனின் வருகையும் வாழ்த்தும். உண்மையிலேயே நெகிழ்ந்துபோனேன்.

நாளை பாடல்கள், விழா புகைப்படங்கள், வீடியோ பேட்டிகள் அனைத்தும் இணையத்தில் நிரம்பும். வந்ததும் லிங்க் தருகிறேன். அடுத்த மாதம் படம் வெளியாகும். அப்போது திரும்ப அழைக்கிறேன்.

இப்போது படுக்கப் போகிறேன்.

[தலைப்பு அசோகமித்திரனுடையது. பொருத்தம் கருதி, நன்றியுடன் எடுத்துக்கொண்டிருக்கிறேன்.]

16 comments

புத்தகப் பட்டியல்

யதி – புதிய நாவல்

அமேசான் ஆசிரியர் பக்கம்

முந்தையவை

தொகுப்பு

புதியவை

வகை

மின்னஞ்சலில் பெற