மனெ தேவுரு

இன்னொரு மொழி சீரியலுக்கு நான் வசனம் எழுதுவேன் என்று எண்ணிப் பார்த்ததில்லை. விரைவில் உதயா டிவியில் ஒளிபரப்பாகவிருக்கும் ‘மனெ தேவுரு’ [குல தெய்வம்] தொடருக்கு என்னை எழுத எம்பெருமான் பணித்தான். நேற்று பெங்களூரில் அதற்கான பூஜை, முதல் நாள் படப்பிடிப்பு. கலந்துகொண்டு திரும்பினேன். [திரைக்கதை – அமிர்தராஜ், இயக்கம் – வ. கௌதமன்]

அங்கே வேறொரு கன்னட ஷூட்டிங்குக்கு வந்திருந்த ‘முத்தாரம்’ இயக்குநர் எஸ்கேவி பூஜைக்கு வந்திருந்து வாழ்த்து சொன்னது எதிர்பாரா இனிப்பு. கன்னட நடிக நடிகையர், தொழில் நுட்பக் கலைஞர்களை முதல் முறையாகச் சந்தித்து அறிமுகம் செய்துகொண்டேன். மனெ தேவுருவுக்கு நான் எழுதும் வசனங்களை மொழி மாற்றம் செய்யவிருப்பவர் சாரக்கி மஞ்சு. பத்தாண்டுகளுக்கு மேலாக கன்னட சீரியல் உலகில் முக்கியமான எழுத்தாளராக அறியப்படுபவர்.

மனெ தேவுரு வரவிருக்கும் பத்து மணி ஸ்லாட் கடந்த ஒன்பது ஆண்டு காலமாக ‘மாங்கல்யா’வால் ஆளப்பட்டு வந்தது. ஆசியாக் கண்டத்தில் இதுவரை ஒளிபரப்பான சீரியல்களிலேயே மிக அதிக எபிசோடுகளைத் தாண்டியது அது. (இரண்டாயிரத்து இருநூறுக்கும் மேலே.) ‘மாங்கல்யா’, தமிழ் மெட்டி ஒலியின் கன்னட வடிவம். ஒரிஜினல் கதை எழுநூற்று சொச்ச எபிசோட்களில் முடிந்துவிடும். ஆனால் கன்னடத்தில் மக்கள் அதை முடிக்க விரும்பவில்லை. எனவே திரைக்கதையை வளர்க்கும் பொறுப்பை சினி டைம்ஸ் ராஜ் பிரபுவிடம் அளித்தது.
முடியவிருந்த ஒரு கதையை மேற்கொண்டு ஆயிரத்தி ஐந்நூறு எபிசோடுகளுக்கு வெற்றிகரமாகக் கொண்டு சென்றார் அவர்.

டிவிக்கான திரைக்கதைக் கலையில் ராஜ்பிரபு ஒரு பிரம்ம ராட்சசன். நம்பமுடியாத திறமைசாலி. ஒரே சமயத்தில் நாலு, ஐந்து, ஆறு – எத்தனை ப்ராஜக்டுகளை வேண்டுமானாலும் சுவாரசியக் குறைபாடின்றி, அநாயாசமாகக் கையாளக்கூடியவர். இந்த வகையில் எனக்கு அவர் பெரிய இன்ஸ்பிரேஷன்.

மாங்கல்யா இப்போது நிறைவுக்கு வருகிறது. அந்த இடத்தில் மனெ தேவுரு. தாலியை வெளியே தெரியும்படி அணிந்தால் கன்னட சீரியல், புடைவைக்குள்ளே போட்டுக்கொண்டால் தமிழ் சீரியல் என்று விளையாட்டுக்கு முன்பொரு சமயம் ட்விட்டரில் சொல்லியிருந்தேன். இல்லை. நிறையவே கலாசார வித்தியாசங்கள் இருக்கின்றன என்பது மஞ்சுவிடம் பேசிக்கொண்டிருந்தபோது தெரிந்தது. என் எழுத்தில் கோடிடப்படவிருக்கும் அந்த இடங்களை அவர் நிரப்பிச் செல்வார்.

ஒரே சமயத்தில் இப்போது நான்கு எழுதவேண்டிய கட்டாயமாகியிருக்கிறது. இரண்டாவது, மூன்றாவது வந்தபோது மிகவும் பயந்தேன். முடியுமா என்று திரும்பத் திரும்ப யோசித்துத்தான் ஒப்புக்கொண்டேன். ஆனால் இந்த நாலாவதில் எனக்கு அத்தகைய அச்சம் ஏதுமில்லை. இட்டமுடன் என் தலையில் இதனை எழுதுபவன் அதனையும் அப்படியே எழுத வைப்பான்.

அக்டோபர் 15 முதல் உதயா டிவியில் காணத் தவறாதீர்கள்!

12 comments

புத்தகப் பட்டியல்

யதி – புதிய நாவல்

அமேசான் ஆசிரியர் பக்கம்

முந்தையவை

தொகுப்பு

புதியவை

வகை

மின்னஞ்சலில் பெற