சில புதிய புத்தகங்கள் – 2

ஞாநியின் ‘ஓ பக்கங்கள்’ – பாகம் 3 இம்முறை கிழக்கு வெளியீடாக வருகிறது. விகடனில் ஏன் இப்போது ஞாநி எழுதுவதில்லை என்று இப்போதுகூட என்னிடம் சிலர் [என் உறவினர்களும்கூட] கேட்பதுண்டு. அவர்களுக்கு என் பதில், ‘குமுதத்தில் இப்போது எழுதுகிறார், படியுங்கள்’ என்பதுதான்.

விகடனிலிருந்து தாம் வெளியேறிய சூழல் பற்றி இந்தத் தொகுப்பில் ஞாநி எழுதியுள்ள பகுதியிலிருந்து சில வரிகள் கீழே. நேற்றைய கிழக்கு மொட்டை மாடிக் கூட்டத்திலும் ஞாநி இதனை விவரித்தார்:

‘….. இந்தக் கட்டுரை [ஜல்லிக்கட்டு]  23-1-2008 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் வெளிவருவதற்காக லே அவுட் செய்யப்பட்டது. நான் அந்தப் பக்கங்களைப் பார்த்து ஓகே செய்த பின்னர், கடைசி நிமிடத்தில் அவை ஆசிரியரால் நீக்கப்பட்ட தகவல், மறு நாள் அச்சாகி வந்த இதழைப் பார்த்தபோதுதான் எனக்குத் தெரிந்தது.

இணை ஆசிரியர் கண்ணனிடம் கேட்டேன். அவர் தனக்கும் தெரியாது என்றார். பிறகு ஆசிரியர் அசோகனிடம் பேசினார். அந்தக் கட்டுரை பப்ளிக் செண்ட்டிமெண்ட்டுக்கு எதிராக இருப்பதால் நிறுத்தியதாக ஆசிரியர் தன்னிடம் கூறியதாக எனக்குத் தெரிவித்தார்.

பப்ளிக் செண்ட்டிமெண்ட்டுக்கு இசைவாகத்தான் எல்லா கட்டுரைகளும் இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை; என் பல ‘ஓ பக்க’க் கட்டுரைகள் அதற்கு முரண்பட்டோ இசைந்தோ இதற்கு முன்பும் இருந்திருக்கின்றன என்று நான் கண்ணனிடம் சொன்னேன். இதுதான் காரணம் என்றால், பாலியல் அறிவு தொடர்பாக அதே சமயத்தில் நான் எழுதி வரும் ‘அறிந்தும் அறியாமலும்’ தொடர் கூட சில பப்ளிக் செண்ட்டிமெண்ட்டுகளுக்கு எதிராகத்தானே இருக்கிறது; அதையும் நிறுத்திவிடவா என்று கேட்டேன். ஜல்லிக்கட்டு கட்டுரையை அடுத்த இதழில் வெளியிடமுடியாது என்றால், ‘அறிந்தும் அறியாமலும்’ தொடரையும் இனி எழுதப்போவதில்லை என்று தெரிவித்தேன். இந்தத் தகவலை அவர் ஆசிரியரிடம் தெரிவித்துவிடுவதாகக் கூறினார்.

இதே சமயத்தில் நான் விகடன் ஆசிரியர் குழுவினரின் திறன் மேம்பாடு தொடர்பான மனித வள ஆலோசகராக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். மாதம் ஏதேனும் 15 தினங்கள் அலுவலகம் சென்று பணியாற்றவேண்டும் என்றும் அதற்கு எனக்குக் குறிப்பிட்ட ஊதியம் என்றும் ஒப்பந்தம் செய்திருந்தோம். ‘ஓ’ கட்டுரை நிறுத்தப்பட்டால் ‘அறிந்தும் அறியாமலும்‘ தொடரையும் நான் நிறுத்துவதாகத் தெரிவித்த மறு நாள் அன்றைய மாலையோடு என் ஆலோசகப் பணி ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாக நிர்வாக இயக்குநர் பா.ஸ்ரீனிவாசன் ஓர் உத்தரவில் கையெழுத்திட்டிருக்கிறார்….

…. அப்போது வெளியிடத் தயார் நிலையில் இருந்த இந்த ஓ பக்கங்கள் மூன்றாம் தொகுதி, ஓராண்டு கழித்து இப்போது வெளியாகிறது….

இப்படியாக விகடன் பாலசுப்ரமணியனும் நானும் 1974 முதல் பரஸ்பர அன்பும் மதிப்பும் கொண்டு பேணி வந்த என் 33 வருட கால விகடன் உறவு துண்டிக்கப்பட்டது….

6 comments

புத்தகப் பட்டியல்

யதி – புதிய நாவல்

அமேசான் ஆசிரியர் பக்கம்

முந்தையவை

தொகுப்பு

புதியவை

வகை

மின்னஞ்சலில் பெற