நான் கடவுள்

தவறாகப் புரிந்துகொள்ளப்படும் ஆன்மிகம், சரியாகப் புரிந்துகொள்ளப்படும் தீவிரவாதத்தைக் காட்டிலும் அபாயகரமானது. பாலாவின் நான் கடவுள் திரைப்படத்தை நேற்றிரவு பார்த்தேன். வியப்பும் ஏமாற்றமும் ஒருங்கே தோன்றியது.

வியப்பு, அவரது செய்நேர்த்தி பற்றியது. படத்தின் ஒரு ஃப்ரேமைக் கூட அலங்கரிக்காமல் விடவில்லை. ஒரு கதாபாத்திரம் கூட வெறுமனே வந்துபோகவில்லை. ஒரு காட்சிகூட வீணாக்கப்படவில்லை. ஒரு துண்டு வசனம் கூட, அது உண்டாக்கவேண்டிய நியாயமான அதிர்வினை உண்டாக்காமல் இல்லை. தமிழ் சினிமாவின் அத்தியாவசியங்கள் என்று காலம் காலமாகச் சொல்லப்பட்டுவரும் அபத்த காமெடி, காதல் கசுமாலங்கள், கனவுக்காட்சிகள், போலி செண்டிமெண்ட்கள், உப்பில்லாக் கண்ணீர் என்று அனைத்தையும் பெருக்கித் தள்ளிவிட்டு ஒரு கதையை எழுதியிருக்கும் இயக்குநரை உண்மையில் பாராட்டவேண்டும்.

ஆனால் இந்த கம்பீரங்கள் அனைத்தும் அர்த்தம் பெறுவது, படம் ஒரு சரியான குறிக்கோளை நோக்கிப் பயணம் செய்வதன்மூலம் மட்டுமே. பாலாவின் நான் கடவுள், அடிதடிக்கு ஆன்மிக ஜிப்பா போட்டுப்பார்ப்பதுடன் திருப்தியடைந்துவிடுகிறது. இதனைச் சற்று விளக்குகிறேன்.

அஹம் ப்ரம்மாஸ்மி – நான் கடவுள் என்பது மிக நேரடியாகத் தருகிற பொருள், அதன் உண்மையான பொருளல்ல. நான் என்பதை முற்றிலும் எரித்த பிறகு எஞ்சக்கூடியதைத்தான் பிரம்மம் என்பது வழக்கம். அப்போது என்ன எஞ்சும் என்பது நமக்குத் தெரிய வாய்ப்பில்லை. கண்டவர் விண்டிலர். அத்வைதம் சொல்வது அதனைத்தான். ஆனால் படத்தின் கதாநாயகன் வெளிப்படுத்தும் ‘நான்’ முற்றிலும் தன் அகங்காரம் மற்றும் ஆளுமை சார்ந்து உருவாவது. பிணத்தை எரித்த சாம்பலை மேனி முழுதும் பூசிக்கொள்வதனால் மட்டுமே தன்னகங்காரம் இல்லாது போய்விடுமா. ஆர்யாவின் பாத்திரப்படைப்பு அப்படிச் செய்யும்போதெல்லாம் ஒரு குழந்தை, தானே குளிக்கிறேன் என்று அடம் பிடித்து சோப்பு பூசிக்கொள்வது போன்ற உணர்வே உண்டாகிறது.

காசியில் அகோரி சன்னியாசிகள் மத்தியில் வளரும் கதாநாயகனைத் தேடி, சிறு வயதில் அவனை விட்டுவிட்டுப் போய்விட்ட அப்பா வருகிறார். மகனைத் திரும்ப வீட்டுக்கு அழைத்துச் செல்வது நோக்கம்.

மிகச் சிறு வயதில், ‘வேண்டாம்’ என்று விட்டுவிட்டுப் போகிறவருக்குப் பல வருடங்களுக்குப் பிறகு அவனைப் பார்த்த மாத்திரத்தில் [நமக்கே ஆர்யாவை அடையாளம் காண்பது சிரமமாயிருக்க!] நான் பெத்தவன எனக்குத் தெரியாதா என்று கண்டுபிடிக்க முடிந்துவிடுகிறது. ஆனால் காலமும் சூழலும் அவனை என்னவாக உருமாற்றியிருக்கிறது என்பதை ஓர் அனுமானமாகக் கூட எண்ணிப்பார்க்க முடியவில்லை.

உனக்கு உறவில்லை, தொடர்பில்லை. போய் அறுத்துவிட்டு வா என்று ருத்ரனின் [ஆர்யா] குரு சொல்லி அனுப்புகிறார். ஏன் வரவேண்டும்? உறவு என்பது பெற்றோர் மட்டுமா? குரு அந்த வகையில் சேர்த்தியில்லையா? ஒன்றுமில்லை என்றால் ஒன்றுமில்லைதான். முற்றும் துறப்பதென்பது இருக்கும் நிலையைத் தக்கவைத்துக்கொண்டு பிறவற்றை ஒதுக்கித் தள்ளுவதா? புரியவில்லை.

ஆக, தந்தையுடன் ஊருக்குத் திரும்புகிறான் ருத்ரன். வீடு சரிப்படவில்லை. அம்மா, தங்கை, பாசம், கண்ணீர் எதுவும் உவப்பாக இல்லை. எனவே மலைக்கோயிலடி பிச்சைக்காரர்கள் மத்தியில் போய் உட்கார்கிறான். எப்பப்பார் கஞ்சா அடித்துவிட்டு வவ்வால் மாதிரி தலைகீழாக யோகாசனம் செய்கிறான். ஒன்றும் பேசப்படாது. ஒரு சில லோ ஆங்கிள் ரவுண்ட் டிராலி ஷாட்டுகளில் இது ஓர் உக்கிரமான தவமாகக் காட்டப்பட்டாலும் மிகச் சில காட்சி நகர்வுகளில் நமக்கு அதன்மீதான அதிசய உணர்வு போய்விடுகிறது. காரணம், அதைவிட நேர்த்தியாகப் படத்தில் காட்டப்படும் கழைக்கூத்தாடி கயிற்றின்மீது அந்தரத்தில் மிக அநாயாசமாக நடந்து செல்வதுதான்.

இந்த இடத்தில் கதையின் உயிர்நாடி தெரிய ஆரம்பிக்கிறது. பிச்சைக்காரர்களின் உலகம். அவர்கள் படும் பாடுகள். அவர்களை வைத்து வியாபாரம் செய்யும் கயவர்கள். அண்டா அண்டாவாகச் சேரும் சில்லறைக் காசுகளைத் தராசில் நிறுத்து அளந்து கொட்டுகிற காட்சி குலைநடுங்கச் செய்துவிடுகிறது. பிச்சைக்காரர்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகளைக் காட்டிலும் இந்தக் காசு நிறுக்கும் ஒற்றைக்காட்சி மிகுந்த வன்முறையாக மனத்தில் இறங்குகிறது. தம் மீது திணிக்கப்படும் வலி மிகுந்த வாழ்வின் இடையே அவர்கள் ரசித்துச் சிரிக்கவும் பேசி மகிழவும் கண்டுபிடிக்கும் சில கணங்கள் நெகிழ்ச்சியூட்டுகின்றன. ஒவ்வொரு பாத்திரமும் நெஞ்சை நிறைக்கின்றன. கவிஞர் விக்கிரமாதித்தன் ஒரு பிச்சைக்காரக் கிழவனாக வருகிறார். வலுக்கட்டாயமாகத் தன்னிடமிருந்து குழந்தையை பிச்சைக்கார ஏஜெண்ட் பிடுங்கிக்கொண்டு போகிற காட்சியில் காலைப் பிடித்துக்கொண்டு கதறுகிற கதறலில் பிரமாதப்படுத்திவிடுகிறார்.

இந்த கோஷ்டியால் கடத்திவரப்பட்டு பிச்சையெடுக்க வைக்கப்படும் இன்னொரு கோஷ்டி குருட்டுப் பிச்சைக்காரியாக பூஜா. நம்பமுடியாத அளவுக்கு நிறைவான நடிப்பு. அவரை முன்னிட்டு ருத்ரன் மேற்கொள்ளும் இரண்டு கொலைகளும் இறுதியில் வாழமுடியாதவர்களுக்குத் தருகிற மரணம், வரம் என்று சொல்லிவிட்டுக் குருட்டுப் பிச்சைக்காரிக்கு மோட்சமளிப்பதும்தான் நமக்குப் பிரச்னையான விஷயங்கள்.

வாழ்வுக்கு உதவாத எந்த மதமும் தத்துவமும் சொல்லப்பட்ட பிற சொற்குப்பைகளும் உபயோகமற்றவை. மண்ணில் இல்லாத சொர்க்கம் என்று விண்ணில் ஒன்றுமில்லை. சொர்க்கம் என்று மதங்கள் முன்வைக்கும் கருத்தாக்கங்கள் கூட உள்ளர்த்தம் கொண்டவை. பூடகமானவை. உடைத்துப் பார்க்கப்படவேண்டியவை. என் கஷ்டம் தீராதா என்று கதறும் பெண்ணின் கழுத்தை அறுத்துக் கொன்றுவிட்டு, மோட்சமளித்ததாகப் புறப்பட்டுப் போகும் கதாநாயகன் நிச்சயமாகத் தன்னை உணர்ந்த ஒருவனாக இருக்கமுடியாது. அது ஆன்மிகமல்ல. ஒரு சைக்கோவால் மட்டுமே அப்படிச் செய்ய முடியும். இதனைத்தான் அவனது குரு அத்தனை ஆண்டு காலம் போதித்திருந்தார் என்றால் அவரும் டாக்டர் ருத்ரனையோ ஷாலினியையோ சந்திக்கவேண்டியவர்தான். அதற்குமுன்னால் குற்றவியல் நடுவர் நீதிமன்றம்.

முற்றிலும் தவறான, மோசமாகப் புரிந்துகொள்ளப்படும்போது ஆன்மிகம்கூட அபத்தமாகிவிடுகின்றது. நான் கடவுள் என்று கருதுவது சரி. கடவுள் வழங்கும் மானுட விடுதலை என்பது மரணத்தால் நேர்வது மட்டும்தானா? தன் மகள் வயதுக்கு வந்திருக்கிறாள். தலைக்குத் தண்ணீர் ஊற்றவேண்டும். பிச்சைக்காரக் கூட்டத்தின் நடுவே கஞ்சா அடித்துக்கொண்டு மயங்கிக்கிடக்கும் மகனை வீட்டுக்கு வா என்று கூப்பிடுகிறார் அம்மா. அவன் அவளைத் திட்டி அனுப்பிவிடுகிறான். நேரே வீட்டுக்கு வந்து கடகடவென்று அடுத்த காரியத்தைப் பார்க்கிற அம்மாவிடம் மகள் கேட்கிறாள்: அண்ணன் வரலியாம்மா? அவன் வரமாட்டான் என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டு வேலையைப் பார்க்கிற அந்தப் பெண் கதாபாத்திரம் எய்தியிருக்கிற ஞானத்தைக் கூட அகோரி சன்னியாசி ருத்ரன் அடையவில்லை என்பது ஏமாற்றமளிக்கிறது.

மிகவும் பிற்போக்கான, சமூக விரோதமான, அபத்தமான ஒரு கருத்தை ஆன்மிக பெயிண்ட் அடித்து அளித்திருக்கிறார் பாலா. இந்த வகையில் வழக்கமான தமிழ் மசாலா திரைப்படங்கள் இதனைக்காட்டிலும் மிக மேலானவை, கையெடுத்துக் கும்பிடத்தக்கவை. ஏனெனில் அவை எந்தக் கெடுதலான தாக்கத்தையும் உண்டுபண்ணாதவை. பார்த்த கணத்தில் நினைவை விட்டுப் போய்விடக்கூடியவை.

இந்தப் படத்தின் ஆகப்பெரிய சிறப்பு, இளையராஜா. அந்த வல்லமையை சொற்களால் விவரிக்க நினைத்தால் அது நேர விரயம். பாடல், பின்னணி இசை என்று தனித்தனியே சொல்ல ஒன்றுமில்லை. பிரம்மமாகப் படம் முழுதும் வியாபித்திருக்கிறார். வணங்க மட்டுமே தோன்றுகிறது.

மற்றபடி, இது ஒரு தவறான படம் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை.  ராஜாவுக்கும் பூஜாவுக்கும் தேசிய விருதே கிடைத்தாலும்கூட.

* ஆசாத்தின் பார்வை

* லக்கிலுக் விமர்சனம்

* அதிஷாவின் விமர்சனம்

53 comments

புத்தகப் பட்டியல்

யதி – புதிய நாவல்

அமேசான் ஆசிரியர் பக்கம்

முந்தையவை

தொகுப்பு

புதியவை

வகை

மின்னஞ்சலில் பெற