இந்தியத் தேர்தல் 2009 – தமிழகம் என்ன சொல்கிறது?

* இன்று காலை வாக்கு எண்ணிக்கை ஆரம்பித்ததில் இருந்தே திமுக பெற்று வந்த முன்னணி நிலவரங்கள், பொதுவில் நிலவிய அதிருப்தி மனநிலைக்கு எதிரான முடிவு வரப்போகிறது என்பதைச் சுட்டிக்காட்டியது.

* நாற்பது தொகுதிகளுக்கும் முடிவுகள் வந்துவிட்ட நிலையில் திமுக (18) கூட்டணி 28 இடங்களையும் அதிமுக(9) கூட்டணி பன்னிரண்டு இடங்களையும் பெற்றிருக்கின்றன. கடந்த தேர்தலில் திமுக கூட்டணி பெற்ற அபார வெற்றியுடன் இதனை ஒப்பிட இயலாது என்றபோதிலும் இந்த வெற்றியையும் கணக்கில்கொண்டாக வேண்டும். முக்கியமானதுதான்.

* இலங்கைப் பிரச்னை, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்குச் சீர்குலைவின் விளைவான வன்முறைச் சம்பவங்கள், வாரிசு அரசியல் ஆகியவை திமுகவுக்கு முற்றிலும் எதிரான தீர்வைத் தரக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பாதி எதிர் மட்டுமே.

* அடித்தட்டு வாக்காளர்களுக்கு ஒரு ரூபாய் அரிசி, கலர் டிவி போன்ற கவர்ச்சித் திட்டங்கள் பிடித்திருக்கின்றன. நல்ல சாலைகள், பாலங்கள், போக்குவரத்து வசதிகள், வேலை வாய்ப்புகள், பொதுவில் – மாநில அளவில் பெரிய பிரச்னைகள் இல்லாமல் இருப்பது ஆகியவையே முக்கியமாகப் பட்டிருக்கின்றன. நிறைவேற்றப்படாத பழைய தேர்தல் வாக்குறுதிகளைக் காட்டிலும் நிறைவேற்றப்பட்ட சில வாக்குறுதிகள் திருப்தியளித்திருப்பது உறுதியாகிறது.

* அதிமுகவுக்கு அவசியம் வாக்களித்தே தீரவேண்டும் என்பதற்கான நியாயமான காரணங்கள் ஏதும் பாமர மக்களுக்கு இல்லை. பொதுவில் திரண்ட திமுக எதிர்ப்பு வோட்டுகள் மட்டுமே அதிமுகவின் வெற்றி வோட்டுகளாகியிருக்கின்றன என்பது நிரூபணமாகியிருக்கிறது. ஜெயலலிதாவின் திடீர்த் தமிழ் ஈழ ஆதரவு அவருக்கு எவ்வித சாதகப் பலனையும் தரவில்லை.

* திமுக எதிர்ப்பு வோட்டுகள்கூட அதிமுகவுக்குப் போகுமே தவிர தமிழகத்தின் இதர கட்சிகள் அனைத்தும் உதிரிகள்தாம் என்பது உறுதியாகியிருக்கிறது. பாமகவின் படுதோல்வி, அக்கட்சியின் சந்தர்ப்பவாத அரசியலின்மீது மக்கள் கொண்டுள்ள கடும் வெறுப்பினை வெளிக்காட்டியிருக்கிறது. வைகோ தோற்றிருப்பது, இலங்கைப் பிரச்னையை மக்கள், வாக்களிக்கையில் யோசிக்க வேண்டிய விஷயமாகப் பார்க்கவில்லை என்பதை எடுத்துக்காட்டுகிறது. சீமான், பாரதிராஜா போன்றவர்களின் பேச்சுகளை ரசித்தவர்கள், அதையும் திரைப்படக் காட்சிகளாகவே எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

* காலை வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி காங்கிரஸ் அனைத்து இடங்களிலும் மிகவும் பின் தங்கியே இருந்தது. ஆனால் பிற்பகலில் நிலவரம் மாறி, காங்கிரசும் தமிழகத்தில் கணிசமான இடங்களை வென்றிருக்கிறது. இது, இலங்கைப் பிரச்னையை இந்திய தேசியத் தேர்தலுடன் முடிச்சுப்போட மக்கள் அறவே விரும்பவில்லை என்பதை அழுத்தம் திருத்தமாகச் சுட்டிக்காட்டுகிறது.

* ஈழத்தை வைத்து இங்கே இனி அரசியல் செய்வது செல்லாது என்று எல்லா கட்சிகளுக்குமே புரியும் தருணமாக இது அமைந்திருக்கிறது.

* தனித்துப் போட்டியிட்ட விஜயகாந்தின் தேமுதிக, எந்தத் தொகுதியிலும் வெற்றி பெறவில்லையென்றாலும், பல இடங்களில் அந்தக் கட்சி பெற்றிருக்கும் வாக்குகளின் எண்ணிக்கை மிகுந்த வியப்பைத் தருகிறது. அடுத்துவரும் சட்டமன்றத் தேர்தலில் விஜயகாந்த் ஒரு தீர்மானிக்கும் சக்தியாக இருக்கப்போகிறார் என்று உறுதியாகத் தெரிகிறது.

* தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி தலையெடுப்பது என்பது அறவே சாத்தியமில்லை என்பதை இத்தேர்தல் மீண்டுமொருமுறை நிரூபித்துள்ளது. மதவாதம், இனவாதம், பிரிவினைவாதப் பேச்சுகளுக்குத் தமிழ் மக்கள் மனத்தளவில் தள்ளியே நிற்கிறார்கள் என்பது தெரிகிறது.

* திமுக கூட்டணி வெற்றி பெற்றிருந்தாலும் இழந்திருக்கும் தொகுதிகள் பற்றி அவர்கள் நிச்சயம் யோசிக்கவேண்டியிருக்கும். ஐந்து வருடங்களில், மத்தியில் காங்கிரஸ் மீது வைத்த நம்பிக்கை சற்றும் மாறாத நிலையில் மாநிலத்தில் திமுகமீது கொண்ட நம்பிக்கை பாதியாகியிருப்பதன் காரணத்தை அவர்கள் யோசிக்கலாம்.

* இந்தத் தேர்தல் முடிவுகள், அடுத்த சட்டமன்றத் தேர்தலுக்கான சரியான ஆயத்தங்களுக்கு அவசியம் வழிவகுக்கும். இரு பெரும் இயக்கங்களும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு இதுநாள் வரை அளித்துவந்த முக்கியத்துவத்தை இனி விஜயகாந்தின் தேமுதிகவுக்கு அளிக்க நினைக்கக்கூடும்.

* அது நல்லதா அல்லதா என்பதை அதற்கடுத்த தேர்தல் நிரூபிக்கும்.

17 comments

புத்தகப் பட்டியல்

யதி – புதிய நாவல்

அமேசான் ஆசிரியர் பக்கம்

முந்தையவை

தொகுப்பு

புதியவை

வகை

மின்னஞ்சலில் பெற