முடிந்தது

பிரபாகரன் - தோற்றம் - 26 நவம்பர் 1954; மறுதோற்றம் - 18 மே 2009பிரபாகரனையும் தனி ஈழம் என்னும் கனவையும் இலங்கை ராணுவத்தினர் சுட்டுக்கொன்று விட்டார்கள். இதன்மூலம் 1983ம் ஆண்டு முதல் இடைவிடாது நடந்துவந்த இலங்கைத் தமிழ் மக்களின் ஆயுதமேந்திய விடுதலைப் போராட்டம் இறுதியாக முறியடிக்கப்பட்டிருக்கிறது.

இந்த நூற்றாண்டில் தமிழர்களுக்கு இதனைக் காட்டிலும் மாபெரும் அதிர்ச்சி தரக்கூடிய சம்பவம் இன்னொன்று இருக்கப்போவதில்லை. ஓயாத யுத்தமும் தீராத ரத்தமுமாக வருடங்கள் நகர்ந்தாலும் அடிப்படையில் ஒரு நம்பிக்கை அனைவருக்குமே மிச்சமிருந்தது. எப்படியாவது பிரபாகரன் தனது ‘தனி ஈழம்’ என்னும் லட்சியத்தில் வெற்றி கண்டுவிடுவார் என்கிற நம்பிக்கை.

அந்த நம்பிக்கை இப்போது தகர்க்கப்பட்டிருக்கிறது. தனது கடைசிச் சொட்டு எதிர்பார்ப்பை மிச்சம் வைத்து, ஆயுதங்களைக் கீழே போட்டு, கடந்த ஞாயிற்றுக்கிழமை அமைதிப் பேச்சுக்கு அழைத்த பிரபாகரனும் அவரது படையினரும் முற்றிலுமாகத் தோற்கடிக்கப்பட்டுவிட்டார்கள். இருபத்தியாறு ஆண்டு கால யுத்தம். இனி ஒன்றுமில்லை. ஈழம் என்பது துக்கம் சுமந்த கனவாக இனி தமிழர்களின் மனங்களில் மட்டும் வாழும்.

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளுக்காக மட்டுமே காத்திருந்திருக்கிறார்கள். கடந்த ஞாயிறு மதியம் பிரபாகரன் மரணம் என்று முதலில் ஒரு வதந்தியை வெளியே அனுப்பிவிட்டு இறுதித் தாக்குதலைத் தொடங்கிய இலங்கை ராணுவத்துக்கு அதிக அவகாசம் வேண்டியிருக்கவில்லை. பல்லாயிரக் கணக்கான சதுர கிலோமீட்டர்களை அங்குலம் அங்குலமாகக் கடந்து அவர்கள் அப்போது ஒரு கிலோ மீட்டர் பரப்பளவுக்கு நெருங்கிவிட்டிருந்தார்கள்.

யாரும் எங்கும் தப்பிக்க முடியாத சூழ்நிலை. திங்கள் அதிகாலை அப்படித் தப்பிக்க நினைத்த பிரபாகரனின் மகன் சார்ல்ஸ் ஆண்டனியின் உடல் கரயாமுள்ளிவாய்க்கால் பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் நடேசன், புலிகளின் அமைதிப் பேச்சுவார்த்தைப் பிரிவு பொறுப்பாளர் புலித்தேவன், மூத்த கமாண்டர் ரமேஷ், காவல்துறைத் தலைவர் இளங்கோ, உளவுப்பிரிவைச் சேர்ந்த கபில், சார்ல்ஸ் ஆண்டனியின் நெருங்கிய சகா என்று சொல்லப்படும் சுதர்மன் என்று அடுத்தடுத்து இறந்துகொண்டிருந்தவர்கள் பற்றிய தகவல்கள் வந்துகொண்டே இருக்க, ஞாயிறு மாலை தனது சர்வதேசத் தொடர்பாளர் செல்வராஜா பத்மநாதன் மூலம் ‘ஆயுதங்களைக் கீழே போடுகிறோம். பேச்சுவார்த்தைக்கு உதவுங்கள்’ என்று உலக நாடுகளை நோக்கி பிரபாகரன் விடுத்த இறுதி வேண்டுகோள் தன் அர்த்தம் இழந்து, இறந்து போனது.

தன் மூத்த மகன் இறந்ததற்கோ, ஆண்டாண்டு காலமாகத் தன் நிழல்போல் உடனிருந்து பணியாற்றிய தளபதிகள் இறந்துகொண்டிருந்ததற்கோ நின்று ஒரு சொட்டுக் கண்ணீர் கூட விடமுடியாத அவசரத்தில் இருந்த பிரபாகரன், திங்கள் அன்று காலை தான் இறுதியாக வெளியேற ஒரு முயற்சி செய்யலாம் என்று முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது. அவர் திருகோணமலைக்கு ஏற்கெனவே தப்பிச் சென்றுவிட்டார், கிழக்கு மாகாணத்தில் உள்ள யால காட்டுப்பகுதியில் பத்திரமாக இருக்கிறார், மியான்மருக்குச் சென்று இரு வாரங்கள் ஆகிவிட்டன என்பது போன்ற வதந்திகள் அனைத்தும் தம் அர்த்தத்தை இழந்தன. பிரபாகரன் இறுதிவரை யுத்தம் நடந்துகொண்டிருந்த இடத்தில் மட்டுமே இருந்திருக்கிறார். நேரடியாக யுத்தத்தில் பங்குகொண்டு, படையை வழிநடத்தியிருக்கிறார். இறுதிக் கணம் வரை போராடித்தான் இறந்திருக்கிறார்.

இனி அங்கே இருக்கவே முடியாது என்னும் நிலை வந்து, வெளியேற முடிவு செய்தபோது காலம் கடந்து விட்டிருந்தது. அது அத்தனை எளிய செயலாக அப்போது இல்லை.  மிக நெருக்கத்தில் ராணுவம் சுற்றி வளைத்துவிட்டிருந்த நிலையில், அதிரடியாக அவர்களுக்கு நடுவே புகுந்து வெளியேறினால் மட்டுமே உண்டு. மிக மிக அரிய வாய்ப்பு அமைந்தால் மட்டுமே தப்பிக்க இயலும். அநேகமாக அப்படியொரு வாய்ப்பு இல்லை என்பது உறுதியாகத் தெரிந்தும் அம்முயற்சியை அவர் மேற்கொள்ளத் துணிந்திருக்கிறார்.

ஒரு சிறு வேன், ஒரு ஆம்புலன்ஸ் வண்டி. ஒன்றில் பிரபாகரனும் பொட்டு அம்மான் மற்றும் கடற்புலித் தளபதி சூசை ஆகியோர் ஏறிக்கொள்ள, இன்னொன்றில் வேறு சில முக்கியத் தளபதிகள் ஏறினார்கள்.

வெறும் இருநூறு மீட்டர் தொலைவில் வந்துவிட்ட ராணுவத்தைப் பிளந்துகொண்டு வண்டி தப்பித்துச் சென்றாகவேண்டும் என்பது திட்டம். அப்படித் தப்பிக்கும்போதுதான் ராணுவம் சுட்டது. ஆம்புலன்ஸில் இருந்த பிரபாகரன், இதர தளபதிகள் அத்தனை பேரும் சுட்டுக்கொல்லப்பட்டுவிட்டார்கள். இது வந்த செய்தி.

கொழும்பு குதித்துக் கூத்தாடிக்கொண்டிருக்கிறது. வீதியெங்கும் பட்டாசு வெடிச்சத்தம். எங்கு பார்த்தாலும் சிங்கள – பவுத்தக் கொடிகள் படபடக்கின்றன. காட்சிகள் துண்டுத்துண்டு சலனப்படங்களாக இணையத்திலேயே கிடைக்கின்றன. எங்கும் கொலைவெறி சந்தோஷக் கூக்குரல். பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்ட செய்தி வெளியான பிறகும் இலங்கை ராணுவம் அதிகாரபூர்வமாக அதனை வெளியிடத் தாமதித்துக்கொண்டிருந்ததற்கு ஒரே காரணம்தான்.  அதிபர்தான் அறிவிக்கவேண்டும்.

இருபத்தியாறு வருட கால யுத்தத்தின் இறுதிக் கணங்களில், தோல்வியின் விளிம்பில் நின்றுகொண்டு,  போர் நிறுத்தம் செய்கிறோம் என்று கடந்த ஞாயிறன்று தான் அறிவித்தது நகைப்புக்குரியதாகவே கருதப்படும் என்பது பிரபாகரனுக்குத் தெரியும். ஆனாலும் கேட்கவேண்டியது அவர் கடமை. ஓர் இனத்தின் பிரதிநிதியாக அவர் போரிட்டுக்கொண்டிருந்தார். இதுநாள் வரை இறந்தவர்கள் எண்ணிக்கையைக் கழித்துவிட்டாலும், ஈழத்தில் இப்போதிருக்கிற சில லட்சம் தமிழர்களுக்கும் புலம் பெயர்ந்து வாழ்கிற சுமார் முப்பத்தி ஐந்து லட்சம் தமிழர்களுக்கும் அவர் ஒருத்தர்தான் முகம்.

பிரபாகரனை விரும்புகிறவர்கள், வெறுப்பவர்கள், விமரிசிப்பவர்கள், ஏற்பவர்கள், மௌனம் காப்பவர்கள் – எத்தனை விதமானவர்களாக அவர்கள் இருந்தாலும் இதனை யாரும் நிராகரிக்க மாட்டார்கள். பிரபாகரனும் அவரது போராட்டமும் இல்லாதிருந்தால் ஈழம் குறித்து இன்று உலகம் சற்றும் சிந்தித்திருக்காது. இருபத்தியோராம் நூற்றாண்டின் மாபெரும் மனித இனப் படுகொலைகள் மிக ரகசியமாகவே மேற்கொள்ளப்பட்டு வடக்கு, கிழக்கு மாநிலங்கள் திறந்தவெளி சவ அடக்க மைதானங்களாகியிருக்கும்.

ராஜபக்‌ஷே இப்படியொரு மகத்தான தருணத்தைத் தன் வாழ்நாளில் ஒருபோதும் சந்தித்திருக்க முடியாது. ஜி 11 உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள அரசுமுறை சுற்றுப்பயணமாக ஜோர்டன் சென்றிருந்தவர் கடந்த ஞாயிறு காலை அவசர அவசரமாக கொழும்பு திரும்பி, விமானத்தை விட்டு இறங்கியதுமே மண்டியிட்டு மண்ணை முத்தமிட்டுத் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அன்று மாலையே நாட்டு மக்களுக்கு நற்செய்தி உரையாற்றுவதாக அறிவித்தார். காரணம், பிரபாகரன் இறந்துவிட்டதாக அப்போதே பரவியிருந்த வதந்தி அவருக்கும் கிடைத்திருந்தது. அது வதந்திதான் என்று தெரிந்ததும்தான் உரையைச் செவ்வாய்க்கிழமைக்குத் தள்ளிப்போட்டார்.  வதந்தியை உண்மையாக்கிவிடும் வேட்கையுடன் ராணுவம் மிகத் தீவிரமாகத் தாக்கத் தொடங்கியது.

தாக்குதல் மகத்தான வெற்றி. ஆசைப்பட்டபடியே பிரபாகரனைக் கொன்றுவிட்டார்கள். இனி ஈழப் போராட்டம் என்ற ஒன்று இருக்கப்போவதில்லை. போராட யார் இருக்கிறார்கள் அல்லது யார் முன்வருவார்கள்?  பல்லாண்டு காலம் பாடுபட்டு விடுதலைப் புலிகள் போராடி வென்று வைத்திருந்த தமிழர் நிலப்பகுதிகள் அனைத்தையும் ஓரிடம் மிச்சமில்லாமல் பிடித்துவிட்டார்கள்.

நிலம் போனாலும் போராளிகளாவது உயிர் பிழைக்கலாமே என்றுதான் புலிகள் தரப்பில் இறுதி முயற்சியாகச் சில தற்கொலைத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. பாதுகாப்பு வளையத்துக்குள் இருக்கும் சிலரேனும் வெளியேறிப் போக வழி கிட்டுமா என்று பார்க்கிற முயற்சி அது.

எதுவும் பலனில்லாமல் போய்விட்டது. தீவிரவாதத்தின் பிடியிலிருந்து தேசத்தை விடுவித்துவிட்டதாக அரசும் ராணுவமும் உரத்துச் சொல்லி சந்தோஷப்பட்டுக்கொண்டிருக்கும் இச்சமயத்தில், எடுக்க ஆளில்லாமல் ஆயிரக்கணக்கான தமிழர் உடல்கள் வன்னியில் வானம் பார்த்துக் கிடக்கின்றன. இடைவிடாது வெடித்த பீரங்கிகளின் சத்த எதிரொலி அடங்கியபாடில்லை. எங்கும் அழுகை, எங்கும் ஓலம். திடீர் திடீரென்று வானளாவ எழுந்த தீப்பிழம்பும் பின்னணியில் வெடிக்கிற குண்டுச் சத்தங்களும். ஆங்காங்கே கை உடைந்து, கால் உடைந்து, கட்டுகளுடன், ரத்தமுடன் தூக்கிச் செல்லப்படும் மனித உடல்கள். ஞாயிறன்று முல்லைத் தீவிலிருந்து  ஒளிபரப்பு செய்த இலங்கைத் தொலைக்காட்சி ரூபவாஹினி காட்டிய காட்சிகள் இந்நூற்றாண்டின் மகத்தான பேரவலம்.

லட்சக்கணக்கில் பலிவாங்கி ஒரு முடிவைத் தொட்டிருக்கிறது இந்த யுத்தம். கொலைகள் பற்றிக் கேட்டால் அமெரிக்காவின் உலகு தழுவிய பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளின் தொடர்ச்சியாகத் தனது செயலை முன்னிறுத்தித் தப்பித்துக்கொள்வது ராஜபக்‌ஷேவுக்கு மிக எளிய செயல். அப்படிக் கேட்கக்கூட ஆளில்லாத அளவுக்குப் புலிகள் தமது இறுதிக் காலத்தில் உலகெங்கும் ஆதரவை இழந்திருந்ததுதான் இதில் மாபெரும் வலி தரக்கூடிய அம்சம்.

எங்கே சறுக்கினார்கள்? எந்தக் கணக்கு தவறாகிப் போனது?

நிதானமாகப் பிறகு அலசி ஆராயலாம். ஆனால் கிளிநொச்சி விழுந்த சமயத்தில் போர் நிறுத்தத்துக்கு இலங்கை அரசு தயாராக இருந்ததையும் புலிகள் அப்போது ஆயுதங்களைக் கீழே போட ஒப்புக்கொள்ளாததையும் மட்டுமேனும் நினைத்துப் பார்க்கவேண்டியிருக்கிறது. இன்றைக்குப் பிரபாகரன் விடுத்த அமைதிப் பேச்சு அழைப்பை அன்றைக்குச் செய்திருந்தால் குறைந்தது இன்னும் சில ஆயிரம் உயிர்களாவது காப்பாற்றப்பட்டிருக்கக் கூடும்.

நிகழ்ந்ததை மீள்பார்வை பார்க்கும் தருணம் இதுவல்ல. இதற்கு முன்பும் பிரபாகரன் இறந்துவிட்டதாக இருமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. இயக்கத்துக்குள் கலவரம், மாத்தையா பிரபாகரனைக் கொன்றுவிட்டுத் தலைவராகிவிட்டார் என்று முன்பொரு சமயம் கிளப்பிவிட்டு வேடிக்கை பார்த்தார்கள். வவுனியாவுக்கு இருபது கிலோமீட்டர் தொலைவில் உள்ள அனந்த பெரிய குளம் என்னும் கிராமத்தில் அவரது உடல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருப்பதாகவே செய்தி வந்தது. பிறகு 2004ம் ஆண்டு சுனாமியில் சிக்கி இறந்தார், உடல் கிடைத்தது என்று சிலோன் வானொலி அறிவித்தது.

திட்டமிட்டுப் பரப்பப்பட்ட அந்தப் பொய்ச்செய்திகளுக்கும் இப்போதைய செய்திக்கும் வித்தியாசம் உண்டு.  தற்காப்புக்காகக்கூட எதிர்த்தாக்குதல் நடத்த இயலாத நெருக்கடிக்குப் பிரபாகரன் தள்ளப்பட்டுவிட்ட சூழ்நிலை திங்களன்று அதிகாலையே வெட்டவெளிச்சமாகிவிட்டது. எதிரியின் கரங்களில் சிக்குவதைக் காட்டிலும் சயனைட் அருந்தி இறக்கலாம் என்று அவரும் அவரது தளபதிகளும் முடிவு செய்திருந்ததாகச் செய்திகள் சொல்கின்றன.  பாதுகாப்பு வளையப் பகுதியில் பல புலிகள் இவ்வாறு இறந்தும் கிடப்பதாகத் தெரிகிறது.

கடந்தவாரம் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட புலிகளின் கடற்படைத் தளபதி சூசையின் மனைவி வெளியிட்ட சில விவரங்களை இங்கே நினைவுகூரலாம். நிலைமை கைமீறும் கணத்தில் தலைவர் தற்கொலை செய்துகொள்வார். என் வழியும் அதுதான். நமது கடைசி சந்திப்பு இதுதான் என்று தன்னிடம் கணவர் சொல்லி விடைபெற்றதாகத் திருமதி சூசை அப்போது சொன்னார்.

எல்லாம் கைமீறிய நிலை. இனி எழுதவோ பேசவோ ஒன்றுமில்லை. ஒரு மாபெரும் இனத்தின் இருபத்தைந்தாண்டுகளுக்கும் மேலான போராட்டம் மகத்தான தோல்வியில் முடிவது பற்றிய வேதனை ஒன்றுதான் மிச்சம்.

பிரபாகரன் கதை முடிந்துவிட்டதாக சிங்கள அரசு கொக்கரிக்கலாம். அவர் தனி மனிதர் என்னும் நிலையிலிருந்து ஒரு சித்தாந்தமாகிப் போய் வெகுகாலம் ஆகிவிட்டது என்பது அவர்களுக்கு நிச்சயம் புரிய வாய்ப்பில்லை.

[குமுதம் ரிப்போர்ட்டர்]

21 comments

புத்தகப் பட்டியல்

யதி – புதிய நாவல்

அமேசான் ஆசிரியர் பக்கம்

முந்தையவை

தொகுப்பு

புதியவை

வகை

மின்னஞ்சலில் பெற