தம்பி வெட்டோத்தி சுந்தரம்

advt‘நான் ஒரு பெரிய மேக்கர் சார்! முதல் படம் சரியா அமையாததுக்குப் பல காரணங்கள். இப்ப என்னை நிரூபிக்க ஒரு நல்ல வாய்ப்பு கிடைச்சிருக்கு. நீங்க எழுதுங்க. நான் எப்படி எடுக்கறேன்னு பாருங்க.’

அவருடைய தன்னம்பிக்கைதான் முதலில் என்னைக் கவர்ந்தது. நெற்றி நிறைய குங்குமம், விபூதி, சந்தனம், மணிக்கட்டில் கனமாக, மந்திரித்த சிவப்புக் கயிறு, மூச்சுக்கு மூச்சு சிவநாமம். சினிமாவைப் பற்றிப் பேசத் தொடங்கிவிட்டால் மட்டும் ஆளே வேறு. அவர் கண்ணில் தெரிந்தது கனவெல்லாம் இல்லை. வெறி. இருளில் எரியும் பூனையின் விழிகள் மாதிரி பரபரவென்று ஓரிடம் நிற்காது அலைபாய்ந்த அந்த விழிகளின் வீச்சு என்னை பிரமிக்கச் செய்தது. சரி சார், பாப்போம் என்று சொல்லி விடை கொடுத்து அனுப்பியபிறகு இரண்டு மாதங்கள் கழித்துத்தான் மீண்டும் சந்தித்தேன்.

திரும்பவும் அதே குரல். அதே வெறி. அதே தீவிரம். சார் வந்து கதை கேளுங்க.

ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை வடபழனியில் அவரது அலுவலகத்துக்குக் கதை கேட்கப் போனேன். சூழ்ந்திருந்த அனைவரையும் வெளியே அனுப்பிவிட்டுக் அறைக்கதவைச் சாத்திவிட்டு ஆரம்பித்தார்.

முதலில் எதிர் நாற்காலியில் உட்கார்ந்துதான் சொல்லத் தொடங்கினார். எப்போது அவர் எழுந்தார் என்று தெரியவில்லை. கிட்டத்தட்ட அறை முழுதையும் வியாபித்து, இரண்டே முக்கால் மணிநேரம் முழுப்படத்தையும் காட்சிவாரியாக நடித்தே காட்டினார். கதாபாத்திரம் அழவேண்டியபோது அவரே கதறினார். வில்லன் சிரிக்கும்போது எனக்கு பயம் ஏற்பட்டது. காதல் காட்சிகளில் வசனங்களை நிறுத்திவிட்டு, அந்த இடத்துக்குப் பொருத்தமான பின்னணி இசையை அவரே இசைத்தார். சேசிங், படுகொலைக் காட்சிகளை அந்தளவு தத்ரூபமாக இன்னொருவர் வருணித்து நான் கேட்டதில்லை.

தம்பி வெட்டோத்தி சுந்தரம் படப்பிடிப்பில் இயக்குநர் வடிவுடையான் - இடதுபுறம்படு உக்கிரமான கதைக்களன். வன்முறையின் எல்லையை அந்தக் கதையில் கண்டெடுத்துவிட முடியும். ஆனால், மிகத் திறமையாக அதை அடிப் பொருளாக மட்டும் வைத்து, காட்சிகளில் யதார்த்தம் மீறாத லாகவம் கையாண்டிருந்தார். வன்முறையைக் கண்ணில் காட்டாமல், மனத்துக்குள் செலுத்துவது என்பது திரைக்கலையில் மிகவும் சிரமமான செயல்.

இரண்டே முக்கால் மணி நேரம். கிட்டத்தட்ட அடித்துப் போட்டதுபோல் உட்கார்ந்து பார்த்துக்கொண்டிருந்தேன். இறுதிக் காட்சியின் பின்னணி இசையுடன் அவர் நிறைவு செய்ததற்குப் பிறகும் பல நிமிடங்கள் பேச்சில்லாமல் கிடந்தேன். எனக்குத் தெரிந்து கடந்த பத்தாண்டுகளில் இந்தளவு நுணுக்கமானதொரு சமூகப் பிரச்னையைக் கையில் எடுத்துக்கொண்டு, அதன் தீவிரம் குறையாமல், அதே சமயம் வர்த்தக சாத்தியங்களுக்கு பங்கம் அளிக்காமல் வேறெந்தப் படமும் உருவாகியிருக்கவில்லை.

கதை முழுதும் கன்யாகுமரி – கேரள எல்லையில் நடக்கிறது. படித்தவர்கள் அதிகமிருக்கும் கன்யாகுமரி மாவட்டத்தில்தான் நிகழும் குற்றங்களின் சதவீதமும் அதிகம். அதற்கான மூலக் காரணத்தை ஆராயும் திரைக்கதை இது. எல்லைப்புற மக்களின் வாழ்வாதாரப் பிரச்னைகள், அடிப்படை முன்னேற்றமின்மை, கடத்தல், சட்டமீறல்கள், பதற்றம் போன்றவை தேச எல்லைகளுக்கு மட்டுமே உரித்தானவையல்ல. மாநில எல்லைகளிலும் அதுதான்.

அவர் அந்த மண்ணிலேயே பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து அனுபவித்தவர். ஒரு கலைஞனாக இருப்பதால் ஒரு பிராந்தியத்தின் பிரச்னைக்கு உள்ளே இருக்கும் மானுட குலம் தழுவிய அம்சங்களை மட்டும் வெளியே எடுத்துத் திரைக்கதை அமைக்க முடிந்திருக்கிறது.

‘கேட்டிங்களே, எப்படி இருக்கு கதை?’ கதை சொல்லி முடித்து அரை மணிநேரத்துக்குப் பிறகு அவர் கேட்டார்.

கரண்ஒரு கணம் தயங்கினேன். பிறகு சொல்லாமல் இருப்பதுதான் பிழை என்று கருதி சட்டென்று கேட்டுவிட்டேன். ‘இப்படி ஒரு கதை சொல்றிங்க.. எப்படி சார் உங்களால சாமிடா மாதிரி மொக்கையா ஒரு படம் குடுக்க முடிஞ்சிது?’

அவர் முகம் சுருங்கவில்லை. சங்கடப்படவில்லை. சிரித்தார். நிதானமாக விளக்கினார். ‘சாமிடா’வின் மூலத் திரைக்கதையில் தொடங்கி, அது வெளியான லட்சணம் வரை நிகழ்ந்த விஷயங்களை அவர் விவரித்தபோது, அதுவே ஒரு முழுநீளத் திரைப்படம் பார்ப்பது போன்ற உணர்வைத் தந்தது. ஆனால் அந்தளவு துக்கம் சுமந்த ஒரு திரைக்கதையைத் தமிழ் ரசிகர்கள் சத்தியமாக ஜீரணிக்க மாட்டார்கள்.

முதல் படம் என்பது ஒவ்வோர் இயக்குநருக்கும் மாபெரும் அழகிய கனவு. சிலருக்கு அது படுதோல்வியாவதற்குப் பின்னணியில் உள்ள காரணங்கள் மிகவும் குரூரமானவை. விவரிக்கக்கூட முடியாது.

‘அதை மறந்துடுங்க சார். எனக்கு இதுதான் முதல் படம். நீங்க எழுதிக்குடுங்க. நான் எடுக்கறேன். நிரூபிச்சாகணும் சார்.’

அவர் பெயர் வடிவுடையான். பிரபல மலையாள திரைப்பட இயக்குநர் ஷாஜி கைலாஷிடம் பல்லாண்டு காலம் பணியாற்றியவர். பத்தாண்டு காலத்துக்கும் மேற்பட்ட போராட்டத்தின் இறுதியில் இன்றைக்கு இந்தப் படம். தம்பி வெட்டோத்தி சுந்தரம்.

கதாநாயகி (அங்காடித்தெரு) அஞ்சலிமுதல் ஷெட்யூல் முடித்துவிட்டு வந்து நேற்றைக்குப் போட்டுக் காட்டினார். அவர் விவரித்ததைக் காட்டிலும் பல மடங்கு சிறப்பாகவே எடுத்திருக்கிறார். டப்பிங், ரீ ரெக்கார்டிங் ஏதுமில்லாமலேயே காட்சிகளில் ஒன்றிப்போய்விட முடிந்தது. ஒரு நேர்த்தி பளிச்சென்று முதல் பார்வையிலேயே புலப்பட்டுவிடுகின்றது. சந்தோஷமாக இருந்தது.

நான் எழுதும் இரண்டாவது படத்திலும் கரண் கதாநாயகனாக அமைந்தது நானே எதிர்பாராத தற்செயல். கனகவேல் காக்க, தம்பி வெட்டோத்தி சுந்தரம் இரண்டிலுமே அவர் மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

சொல்ல மறந்துவிட்டேனே. கனகவேல் காக்க அடுத்த மாதம் வெளியாகிறது. இறுதிக்கட்டப் பணிகள் தீவிரமாக நடந்துகொண்டிருக்கின்றன.

16 comments

புத்தகப் பட்டியல்

யதி – புதிய நாவல்

அமேசான் ஆசிரியர் பக்கம்

முந்தையவை

தொகுப்பு

புதியவை

வகை

மின்னஞ்சலில் பெற