கள்ளன்

ஊருக்கெல்லாம் அவன் ஒரு கொள்ளைக்காரன், கொலைகாரன். அதிபயங்கரவாதி. அவன்மீது ஏகப்பட்ட வழக்குகள். எது ஒன்றையும் தீர்க்க முடியாமல் காவல் துறை தடுமாறிக்கொண்டிருக்கிறது. அடுத்தடுத்து நடக்கும் கடத்தல், கொள்ளைச் சம்பவங்களுக்கும் அவனே காரணம் என்று முடிவு கட்டுகிறது. என்ன செய்து அவனைப் பிடிப்பது? தெரியவில்லை.

ஊரில் வசிக்கும் பணக்காரப் பெரிய மனிதரின் மகள் ஒருத்தி கடத்தப்படுகிறாள். கடத்தியது யார்? அவன் தானா? ஐயோ பணம் கேட்டு மிரட்டப்போகிறானா? வேறேதாவது திட்டமா?

கடத்தப்பட்ட பெண் பத்திரமாகப் பிறிதொருநாள் திரும்பி வருகிறாள். நகை ஏதும் களவு போகவில்லை. நெஞ்சம்தான். அவளுக்கு உண்மை தெரிகிறது. அவன் நல்லவன். கொள்ளைக்காரன் இல்லை. கொள்ளையடிப்பவர்களிடமிருந்து மீட்டுத் தருபவன். கொலைகாரனில்லை. கொலையாளிகளிடமிருந்து பொதுமக்களைக் காப்பவன்.

இதனை அவள் காவல் துறையிடம் உடனே சொல்லியிருந்தால் அரை மணியில் படம் முடிந்திருக்கும். ஆனால் அவளையும் சொல்லவிடாமல், போலீசும் கண்டுபிடிக்காமல், மூன்று மணிநேரம் சற்றும் சுவாரசியம் கெடாதபடிக்குத் திரைக்கதை அமைத்திருக்கும் சாமர்த்தியத்தை வியக்கிறேன்.

ரஹீம் பாய் எம்.ஜி.ஆர் - மலைக்கள்ளன்

ஐம்பது வருடங்களுக்கு முன்னால் வெளிவந்த படம். இன்றுவரை இந்த ஃபார்முலாவை அடியொற்றி சுமார் ஐம்பது படங்களேனும் வந்திருக்கும் என்று நினைக்கிறேன். பார்வையாளர்களுக்கு வெளிப்படையாகவும், கதாபாத்திரங்களுக்கு சஸ்பென்ஸுடனும் நகரும் திரைக்கதை. எம்.ஜி.ஆரை ஒரு சூப்பர் ஸ்டார் ஆக்குவதற்கான மிகச் சரியான அஸ்திவாரம் இந்தப் படத்தில்தான் போடப்பட்டிருக்கிறது என்று தோன்றுகிறது. ரஹீம் பாயாகவும் மலைக்கள்ளனாகவும் குமாரவீரனாகவும் காட்சிக்குக் காட்சி மாறி மிரட்டுகிறார். சண்டைக்காட்சிகளில் என்ன ஒரு லயம், அலட்சியம், கவித்துவம்! எம்.ஜி.ஆரைத் தவிர வேறு யார் இதனைச் செய்தால் ரசித்திருப்பேன்?

யோசித்துப் பார்க்கிறேன். ம்ஹும்.

நாமக்கல் கவிஞர் எம்.ஜி.ஆரை மனத்தில்கொண்டு இதனை எழுதியிருக்க வாய்ப்பில்லை. ஆனால் எம்.ஜி.ஆர் மலைக்கள்ளனாகவே வாழ்ந்து இருக்கிறார்! அவரது பிற்காலப் படங்களில் இந்தளவு என்னால் ஒன்ற முடிந்ததில்லை. சாதிக்கும் வெறி மேலோங்கியிருந்த தொடக்ககாலப் படம் இது. [டைட்டில் கார்டைப் பாருங்கள்! வசன கர்த்தாவுக்குத் தனி கார்ட். நடிகர்கள் பட்டியலில் சின்னதாக எம்.ஜி.ஆர்.]

வசனம்: மு. கருணாநிதி


vlcsnap-2009-07-11-22h42m00s127

பழனி மலையில் விஞ்ச் போட்ட புதிதில் இந்தத் திரைக்கதையை எழுதியிருப்பார்களோ? மிக அழகாக மலைக்கள்ளனின் உறைவிடத்தைச் சென்றடைய விஞ்ச்சைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். கரடுமுரடான பெரும் மலைகள். அபாயகரமான வளைவுகள். எப்படியோ இடத்தைத் தெரிந்துகொண்டு வில்லன் கோஷ்டி அங்கே வந்து விஞ்ச் கயிறை அறுக்கப் பார்க்கிறது. அந்தரத்தில் மலைக்கள்ளன் ஊசலாடிக்கொண்டிருக்கிறான்! தப்பித்துவிடுவானா? கடவுளே, கடவுளே!

மக்கள் தவித்துத்தான் போயிருப்பார்கள் அன்று. வெகு பின்னால் வந்த க்ளிஃப்ஆங்கர் தொடக்கக்காட்சி கூடஇந்தளவு பதைக்கச் செய்திருக்க வாய்ப்பில்லை.

குகைகள். புதர்கள். அடர்கானகம். எதிர்ப்படும் புலி, கரடி வகையறாக்கள். அவற்றின் சண்டைகள். இடையே கோட்டை கட்டி ரகசியமாக மலைக்கள்ளன் வாழ்கிறான். எதற்காக அவன் காட்டில் வசிக்கவேண்டும்? அடடே அங்கே அவனது அப்பா, சித்தி, இரண்டு பெண்கள், பத்திருபது சிஷ்யப்பிள்ளைகள்… ஐயோ, ஒரு ராஜ்ஜியமே அல்லவா நடத்துகிறான்? என்னவோ ரகசியம் இருக்கிறது!

ஒரு சூப்பர் ஸ்டார் எப்படி சமைக்கப்படுகிறார் என்கிற ஃபார்முலாவை அக்கக்காகப் பிரித்துப் புரிந்துகொள்ள யாரேனும் விரும்பினால் அவசியம் மலைக்கள்ளன் பாருங்கள். கொஞ்சம் காதல், நிறைய வீரம், அளவான அம்மா செண்டிமெண்ட், அநாயாசமாக நகைச்சுவை, ஊருக்கு உபகாரம், உறங்கும் உண்மையை இறுதிக்காட்சியில் எழுப்பி உட்காரவைப்பது, ஒரு மெசேஜ், அதை அழகாகச் சொல்வது, தொட்டுக்கொள்ள ஹீரோயின், மெட்டுக்களில் மென்மை, விறுவிறுப்பான வசனங்கள், பரபரப்பான காட்சியமைப்பு –

போதும். மாடர்ன் சினிமா என்றொரு நிறுவனம் வெறும் இருபது ரூபாய்க்கு அருமையான பல பழைய படங்களைப் புதிய ப்ரிண்ட் டிவிடிக்களாக விற்பனைக்குக் கொண்டுவந்திருக்கிறது. நல்ல தரம். ஏழெட்டு வாங்கியிருக்கிறேன். எப்படியாவது எல்லா எம்.ஜி.ஆர். படங்களையும் பார்த்துவிட வேண்டும் என்று ஒரு திட்டம்.

பயப்படாதீர்கள். எல்லாவற்றைப் பற்றியும் எழுதமாட்டேன்!

14 comments

para

புதியவை

வகை

தொகுப்பு

முந்தையவை

பொதுவெளி

மின்னஞ்சலில் பெற

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.