எழுத்தாளர்களின் ராயல்டி

முன்னர் சாரு. இப்போது ஜெயமோகன். இரண்டு முக்கியமான எழுத்தாளர்கள் தமது புத்தகங்களின் விற்பனை குறித்தும், கிடைக்கும் ராயல்டி பற்றியும் மனம் திறந்து எழுதியிருக்கிறார்கள். [ஆக, இந்தக் கிசுகிசுவில் குறிப்பிடப்பட்டிருக்கும் தொகை, இந்த இரு எழுத்தாளர்களைப் பொருத்த அளவில் பொய்யானது என்பது உறுதியாகிறது.]

ஆண்டிறுதியில் இவர்கள் நடத்தும் புத்தக வெளியீட்டு விழாக்களுக்கு முண்டியடிக்கிற கூட்டம், நிகழ்ச்சிக்குக் கிடைக்கிற முக்கியத்துவம், கவனம், மீடியா பிரபலம் அனைத்தும் வியப்பளிக்கின்றன. முன்னதாக வருடம் முழுவதும் இந்த எழுத்தாளர்களின் இணையத்தளங்களை வாசித்து, ரசித்துவரும் வாசகர்களையும் [லட்சங்களைத் தாண்டிவிட்டதாக சம்பந்தப்பட்ட எழுத்தாளர்களே சொல்லியிருக்கிறார்கள்.  அதில் பலபேர் இந்தியா, இலங்கை, மலேயா, சிங்கப்பூரையெல்லாம் தாண்டி ஜப்பான், உகாண்டா, பாபுவா நியூகினியாவிலெல்லாம் இருப்பவர்கள்] அவர்களில் பலர் பக்கம் பக்கமாக எழுதும் கடிதங்களையும்  இன்னபிறவற்றையும், இவர்கள் குறிப்பிடுகிற ராயல்டி தொகையையும் ஒரு நேர்க்கோட்டில் வைத்துப் பார்க்கிற வாசகர்கள் குழப்பமடைவது நிச்சயம்.

அத்தனை வாசகர்களுமே வடை, போண்டா, கேசரிக்காக விழாக்களுக்குச் செல்வதில்லை என்பது உண்மையானால், விழாவுக்குப் போகிற சில நூறு பேராவது புத்தகம் வாங்கமாட்டார்களா? [ஆயிரம் பேர் வந்ததாகச் சாரு எழுதியிருந்ததை ஒட்டி.] வருடம் முழுவதும் புத்தகம் வாங்கிக்கொண்டிருக்க முடியாது என்பதை ஒப்புக்கொண்டாலும், ஆடிக்கொன்று, அமாவாசைக்கொன்று என்றேனும் இந்த வெளிநாட்டு வாசகர்கள் தமது அபிமான எழுத்தாளர்களின் புத்தகங்களை வாங்கிப் படிக்க நினைக்கமாட்டார்களா? ஆறோ, ஏழோ எத்தனையோ கோடித் தமிழர்கள் உள்ள இடத்தில் – லட்சக்கணக்கில் வாசிக்கிறவர்கள் இருப்பது உறுதியாகத் தெரியும் நிலையில் – வெறும் ஆயிரம் புத்தகங்கள் செலாவணியாவது சிரமமா?

ஜெயமோகன் நாற்பத்திரண்டு புத்தகங்கள் எழுதியிருப்பதாகச் சொல்கிறார். எனக்கு இதில் வியப்பில்லை. இதற்காக ஒருத்தரைப் பேய், பிசாசு என்றெல்லாம் உயர்வு நவின்று அங்கலாய்க்க வேண்டியதுமில்லை. திட்டமிட்டு, தினசரி ஒழுங்காக வேலை செய்தால் இது சாத்தியமே. இந்த நாற்பத்திரண்டில் பத்து புத்தகங்கள் ஹிட் என்றால்கூட அவருக்குக் குறைந்தபட்சம் ஆண்டுதோறும் ஐம்பதாயிரம் ராயல்டி வரவேண்டும். [ தோராயமாக ஒரு புத்தகம் 100 ரூபாய் விலை என்றும், ஒரு ஹிட் என்பது குறைந்தபட்சம் 500 பிரதிகள் என்றும் வைத்துக்கொண்டு, பத்து சதவீதத்துக்குக் கணக்கிட்டு, குத்துமதிப்பிட்டது.] ஆனால் அவர் சொல்லும் பதினாலாயிரத்தை நோக்க, இந்த ஐந்நூறிலும் நான்கிலொரு பாகம்கூட வரவில்லை என்றாகிறது.

தமிழ்நாட்டில் நல்ல எழுத்துக்கு இதுதான் மதிப்பா? நான் நம்பவில்லை. பல்வேறு பதிப்பு நிறுவனங்களில் தங்கள் புத்தகங்களைத் தொடர்ந்து வெளியிட்டுக்கொண்டிருக்கும் சில தீவிர படைப்பாளிகளின் சில புத்தகங்களை நாங்கள் கிழக்கு பதிப்பகத்தின்மூலம் கடந்த சில வருடங்களாக வெளியிட்டுவருகிறோம்.  ஓரளவு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் எங்களால் தொடர்ந்து வெளியிடப்படும் அந்த எழுத்தாளர்களின் புத்தகங்களுக்கான வருட ராயல்டி, ஜெயமோகன் குறிப்பிடும் தொகையைவிட நிச்சயமாக அதிகம். இதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.

ஒப்பீட்டளவில் தமிழ் வாசகர்கள் மத்தியில் படைப்பிலக்கியத்துக்கான வரவேற்பு குறைவுதான். தீவிர அறிவுத்தளத்தில் செயல்படும் படைப்பாளிகளை ஒதுங்கி நின்று சேவித்துவிட்டுப் போய்விடுகிற மனோபாவம் எப்போதுமிருப்பது என்றாலும், இத்தனை மோசமடைந்திருக்கிறது என்றறியும்போது அதிர்ச்சியாகவே உள்ளது. சாரு, ஜெயமோகன் இருவருமே நான் மதிக்கும் படைப்பாளிகள். கருத்து வேறுபாடு இருந்தாலும்  அதைத் தாண்டி ரசிக்கச் செய்யும் எழுத்து அவர்களுடையது. இருவருடனும் முற்றிலும் முரண்படுகிறவர்கள்கூட, வாசிக்காமல் நிராகரித்துவிட்டுப் போகமாட்டார்கள். தினசரி வேள்விபோல் எழுதிக்குவிக்கும் இத்தகைய எழுத்தாளர்களின் புத்தக விஷயத்தில் காலே அரைக்கால் சதவீத மனச்சாட்சியுடன்கூட நடந்துகொள்ள யாரும் முன்வரத் தயாரில்லை என்பதறிய வருத்தமாகவே உள்ளது.

இதனோடு ஒப்பிட்டால் என்னை மாதிரி, மருதன்முத்துக்குமார் மாதிரி அரசியல் எழுதுகிறவர்களும், சொக்கன்,   ச.ந. கண்ணன் மாதிரி வாழ்க்கை வரலாறு எழுதுகிறவர்களும், முகில் மாதிரி வரலாறு எழுதுகிறவர்களும் எவ்வளவோ தேவலை என்று நினைக்கத் தோன்றுகிறது. [தமிழ் நூல்களை வாங்கிப் படிப்போர் எண்ணிக்கை மிக மிகக் குறைவு என்னும் ஜெயமோகனின் தரப்பை மறுக்கிறேன். இலக்கியம் வாசிப்போர் மட்டுமே குறைவு.]

புனைவல்லாத புத்தகங்களில் சமையல், சோதிடம்தான் விற்கும் என்று மாமாதாத்தாக்கள் சொல்லிக்கொண்டிருந்த காலமெல்லாம் மலையேறிவிட்டது. தீவிரமான நாட்டு நடப்புகளையும், தொழில்நுட்பத்தையும் அறிவியலையும், பிசினஸ் சார்ந்த புத்தகங்களையும், நிர்வாகவியலையும் இன்னபிறவற்றையும் வாசிக்க, பல்லாயிரக்கணக்கில் வாசகர்கள் தயாராகவே இருக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் பல்லாயிரம் இல்லாது போனாலும் அனைத்துக்கும் ஒரு சில ஆயிரங்களாவது கண்டிப்பாக உண்டு. மனச்சோர்வு கொள்ளத்தக்க வகையிலான ராயல்டி ஒருபோதும் இவர்களுக்கு வருவதில்லை. கண்டிப்பாக எனக்கோ, முன்குறிப்பிட்ட பிற கிழக்கு எழுத்தாளர்களுக்கோ இல்லை. ஒழுங்காக வருமான வரி கட்டுகிறோம் என்பதால் இதனை வெளிப்படையாகச் சொல்வதில் அச்சமும் இல்லை.

படைப்பின் ஆகப்பெரிய விளைவு ராயல்டிதானா என்பதல்ல. இந்தக் குறைந்தபட்ச மகிழ்ச்சியைக் கூட ஒரு படைப்பாளனுக்குத் தரத் தயாரில்லாத வாசகர்கள் எதற்கு? ஜெயமோகனுக்கும் ராமகிருஷ்ணனுக்கும் சாருவுக்கும் மாங்கு மாங்கென்று பக்கம் பக்கமாகக் கடிதம் எழுதுகிற வாசகர்களைப் போல் எங்களில் யாருக்கும், யாரும் கடிதங்கள் எழுதுவதில்லை. எப்போதாவது கடிதங்கள் வரும். அடுத்து என்ன புத்தகம் என்று கேட்டு. ஆனால், இந்தக் கடிதம் எழுதாத வாசகர்கள் யாரும் காசு கொடுத்துப் புத்தகம் வாங்கத் தவறுவதில்லை. வருடம்தோறும் நியாயமான அளவில் புத்தக விற்பனை அதிகரிக்காமலும் இல்லை.

உண்மையான வாசகர்கள் கடிதம் எழுதிக்கொண்டிருப்பதில்லை என்பதுதான் இதில் நான் பெற்ற செய்தி. என் மதிப்புக்குரிய நண்பர்களுக்கும் அத்தகைய கடிதம் எழுதாத வாசகர்கள் நிறைய சேர எம்பெருமானைப் பிரார்த்திக்கிறேன்.

ராயல்டி குறித்து பத்ரி 1 | ராயல்டி குறித்து பத்ரி 2

20 comments

புத்தகப் பட்டியல்

யதி – புதிய நாவல்

அமேசான் ஆசிரியர் பக்கம்

முந்தையவை

தொகுப்பு

புதியவை

வகை

மின்னஞ்சலில் பெற